என் மலர்
செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சென்னை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே பகுதியில் 3 அல்லது 4 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியை தனிமைப்படுத்தும் பகுதிகளாக அறிவித்து, தடுப்பு கட்டைகள் வைத்து தெருவை அடைத்து, அந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் நேற்று கடலூர் வந்தார்.
பின்னர் அவர் கடலூர் கோண்டூர் ஊராட்சிக்குட்பட்ட ரட்சகர் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு எத்தனை பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறதா? சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா? என்று நேரில் பார்வையிட்டார். முன்னதாக பி. முட்லூர், தில்லைவிடங்கன் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் ஊராட்சிகள் கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் மகேந்திரன், செயற்பொறியாளர் பிரபாகர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறியாளர்கள் சீனிவாசன், ரவீன் குமாரி, ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, ஊராட்சி செயலாளர் வேலு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story






