என் மலர்
கடலூர்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு சேலம், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நோய் தொற்று காணப்பட்டது.
அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 3 பேர் இறந்த நிலையில், 9 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் புவனகிரியைச் சேர்ந்த 38 வயது ஆண், விருத்தாசலத்தைச் சேர்ந்த 60 வயது ஆண் ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேபோல் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ் கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்.
இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இந்த கோழி பண்ணையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீப்பற்றி எரிந்த கோழி பண்ணையின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் கோழிப்பண்ணையில் இருந்த 3,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன.
இதே போல் பிரசன்ன குமார் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4,500 பிராய்லர் கோழிகள் தீயில் கருகி இறந்தன.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரி அழிசிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மேல்புவனகிரி யூனியன் தி.மு.க. கவுன்சிலராக இருந்தார்.
இவருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் தன்னை பரிசோதித்து கொண்டார். அப்போது ராமமூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.
பண்ருட்டி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுபடுத்தும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பண்ருட்டி மீனாட்சி அம்மன் பேட்டை தெருவை சேர்ந்தவர் பெருமாள். வெள்ளி நகை வியாபாரி. இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் பெருமாளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பெருமாளின் மனைவியும், மகனும் இறந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து இறந்திருப்பது பண்ருட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும்பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 3 மாதங்களில் கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையங்களில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 3 பேர் மற்றும் ஆயங்குடி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் 2 பேர், ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரி ஆய்வாளர்கள் 2 பேர், வீராணந்தபுரம் சுகாதார ஆய்வாளர் ஒருவர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் சிதம்பரம், திருச்சி, புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள பில்லாலிதொட்டியை சேர்ந்தவர் மணிபாலன் (வயது 30). இவரது மனைவி ராஜலட்சுமி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மணிபாலன் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் கடலூரிலிருந்து வந்த ஆம்புலன்சில் ராஜலட்சுமி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருவந்திபுரம் அருகே சென்றபோது ராஜலட்சுமிக்கு வலி அதிகமானது. உடனே ஆம்புலன்சில் இருந்த அவசர சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணி ராஜலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல் கடலூர் அடுத்த அணுக்கம் பட்டு பகுதியை சேர்ந்தவர் பகவத். இவரது மனைவி பிரித்தி (21). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தொண்டமாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கடலூர் முதுநகர் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது அவருக்கு வலி அதிகமானது. உடனே ஆம்புலன்சில் இருந்த அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணி, அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 2 பெண்களுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணியை, அந்த பெண்களின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் நோய்த் தொற்று குறையவில்லை. இதற்கிடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த நோய் வெளிநாடுகளில் அதிகமாக பரவி வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது.
இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
இதன் விவரம் வருமாறு:-
சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவர் கடந்த 8-ந் தேதி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது.
இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோது சர்க்கரை நோய் அளவு அதிகரித்து அவரது கை, விரல், முகம் கருப்பாக மாறியது. கண் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் பண்ருட்டி தட்டாஞ்சாவடியை சேர்ந்த எழில்மணி மனைவி ராஜேஸ்வரி (54) என்பவர் கடந்த 10-ந் தேதி நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
வேப்பூரில் உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (50) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவருக்கு சர்க்கரை நோய் அதிகரித்து முகம், கை, கால் கருப்பு நிறமாக மாறி, கண் வீக்கம் அதிகரித்தது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் எந்தவித அனுமதியுமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அண்ணா மலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த வீட்டில் ஊசி, மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வீட்டில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிவபுரி வாய்க்கால்கரை தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 63), வடபாதி தெருவை சேர்ந்த சச்சிதானந்தம் (65) என்பதும், அவர்கள் 2 பேரும் மருத்துவபடிப்பு எதுவும் படிக்காமல் அந்த பகுதியில் உள்ள மெடிக்கல்களில் இருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை வாங்கிவந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். வீட்டில் இருந்த மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் கிராமம். இந்த கிராமத்தில் வயல் வெளிபகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் பின்னலூரில் உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று அந்த கடையின் பின்பக்க சுவரில் ஒரு துளை ஒன்று இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் மற்றும் போலீசார், டாஸ்மார்க் மேற்பார்வையாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து மேற்பார்வையாளர் செந்தில்குமார் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த மதுபாட்டில்கள், பீர் பாட்டில்கள் போன்றவை திருடு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.97 ஆயிரம் ஆகும்.
கடை நீண்ட நாட்களாக பூட்டியை இருப்பதை பயன்படுத்தி, மர்ம மனிதர்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் உள்ளே ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்தது. இதில் 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் திருடு போய் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த 22-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு ‘யாஸ்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி இந்த புயல் ஒடிசா மாநிலம் பாரதீப்ல் இருந்து 530 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்தது. புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் ‘யாஸ்’ புயல் உருவான எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று மதியம் ஏற்றப்பட்டுள்ளது.
அதாவது வங்க கடலில் தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை 2-ம் எண் குறிப்பதாகும். இந்த புயலால், கடலூர் மாவட்டத்திற்கு எந்தவித வானிலை மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை, என வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






