என் மலர்
செய்திகள்

பண்ருட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலி
பண்ருட்டி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுபடுத்தும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பண்ருட்டி மீனாட்சி அம்மன் பேட்டை தெருவை சேர்ந்தவர் பெருமாள். வெள்ளி நகை வியாபாரி. இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் பெருமாளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பெருமாள் பரிதாபமாக இறந்தார்.
ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பெருமாளின் மனைவியும், மகனும் இறந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து இறந்திருப்பது பண்ருட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






