என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடந்தது. போலீசாரை கண்டதும் 3 கிராம மக்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடி திருவிழாவை கிராம மக்கள் நடத்துவார்கள். அதில் அனைவரும் போட்டி, போட்டு மீன்பிடிப்பார்கள்.

    இந்த ஆண்டு குத்தகைதாரரின் செயல்பாட்டால் முன்கூட்டியே ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். மீன்களை பிடிக்க மன்னம்பாடி, படுகளாநத்தம், விளாங்காட்டூர் கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு வந்து போட்டி, போட்டு ஏரியில் மீன்பிடித்தனர்.

    தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கிராம மக்கள், தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களுடன் நாலாபுறமும் ஓடினர்.

    மேலும் எந்நேரத்திலும் பொதுமக்கள் மீன்பிடிக்க ஏரிக்குள் இறங்கலாம் என கருதி பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விஜி, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.
    வடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அமலா, பூவராகவன், செந்தில், பாலமுருகன், ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார், அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு சுமார் 500 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வடலூர் கலைஞர் நகர் டேனியல் மகன் இமானுவேல், அவரது மனைவி விஜி(40) மற்றும் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் (31) ஆகியோர் குடோனில் பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக விஜி, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 500 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் தலைமறைவான இமானுவேலை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிதம்பரத்தில் உரிய அனுமதிபெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் உசுப்பூரில் உள்ள முருகேசன் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, அரசு அனுமதி பெறாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிதம்பரம் சப்-கலெக்டர் மது பாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கிராம நிர்வாக அலுவலர்கள் சிதம்பரம் ரமேஷ், உசுப்பூர் சங்கரன், சிதம்பரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் அதிகாரிகள் முருகேசன் நகரில் இயங்கி வந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று, விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் அவர்களுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் வசதி எதுவும் செய்து கொடுக்காமலும், உரிய அனுமதி பெறாமலும் சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கிருந்த 6 பேரையும் ஆம்புலன்ஸ் மூலமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். மேலும் சப்-கலெக்டரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் மருத்துவமனையை திறக்க கூடாது என்று அங்கிருந்த டாக்டரை அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனாவால் இறந்த கடலூர் போலீஸ் ஏட்டு குடும்பத்துக்குபோலீசார் ஒரு நாள் சம்பளத்தை திரட்டி ரூ.18 லட்சத்திற்கான காசோலை வழங்கினர்.
    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த ராஜ்குமார், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த விருத்தாசலம் கச்சிராயநத்தம் அரங்கநாயகம் ஆகிய 2 பேரும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதையடுத்து கொரோனாவில் இறந்துபோன 2 போலீஸ் ஏட்டுகளின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசார் முதல் போலீஸ் சூப்பிரண்டு வரை தங்களது ஒரு நாள் சம்பளத்தை மனமுவந்து கொடுத்தனர். இத்தொகையை இறந்த 2 பேர் குடும்பத்தினருக்கும் சமமாக பிரித்து வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார். அதன்பேரில் இறந்த போலீஸ் ஏட்டு அரங்கநாயகம் மனைவி அருள்குமாரியிடம் நேற்று 18 லட்சத்து 18 ஆயிரத்து 446 ரூபாய்க்கான காசோலையை கடலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தனது அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ரவி உடனிருந்தார்.
    பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    கடலூர்:

    தமிழ்நாடு பெட்ரோலியம் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடித்தால் தமிழகத்தில் 25 சதவீத வினியோகஸ்தர்கள் நிதி மற்றும் கடன்சுமையால் பெட்ரோல் பங்க்குகளை நடத்த முடியாமல் மூடும் நிலை ஏற்படும். இந்த கொரோனா தொற்றால் 40 வினியோகஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர். திடீரென அவர்கள் இறந்து போனதால் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் அந்த பெட்ரோல் பங்க்குகளை நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

    ஏனெனில் கடனுக்காக மொத்தமாக பெட்ரோல், டீசல் போட்டவர்கள் கொரோனா காலத்தில் பணத்தை கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வினியோகஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்களும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். ஆகவே பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்து, சலுகைகள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும்.

    கடந்த 2011-ம் ஆண்டு வரை 45 ஆயிரத்து 104 பெட்ரோல் பங்குகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்தது. தற்போது 68,000 பெட்ரோல் பங்க்குகள் உள்ளது. இதனால் விற்பனை, இலக்கு குறைந்துள்ளது. குறிப்பாக மாதத்திற்கு 170 கிலோ லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட வேண்டும்.ஆனால் பெட்ரோல் பங்க்குகள் அதிகரித்ததால் சராசரியாக 155 கிலோ லிட்டர் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்போது இந்த கொரோனா காலத்தில் 100 முதல் 120 கிலோ லிட்டர் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய வினியோகஸ்தர்களுக்கு பெட்ரோலுக்கு ரூ.2.80-ம், டீசலுக்கு ரூ.1.80-ம் கமிஷனாக வழங்கி வருகிறது. ஆனால் இந்த கமிஷன் தொகை 2017-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்படவில்லை.

    இது தொடர்பாக போடப்பட்ட அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றவில்லை. இந்த கமிஷன் தொகையை வைத்து பெட்ரோல் பங்க்குகளை நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். குறிப்பாக கிராமப்புறங்களில் 25 சதவீத பெட்ரோல் பங்க்குகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே எண்ணெய் நிறுவனங்கள் வினியோகஸ்தர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அப்போதுதான் ஊழியர்களுக்கு சம்பளம், பெட்ரோல் பங்க்குகள் பராமரிப்பு போன்றவற்றை செய்ய முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 350 படுக்கைகள் உள்ளன. இதில் 168 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையவை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, கடலூர் அரசு ஆஸ்பத்த+ிரியில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் (அதாவது 6 ஆயிரம் லிட்டர்) ஆக்சிஜன் சேமித்து வைக்கும் வகையில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த தொட்டியில் தினசரி ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதனால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நகாய் நிதி உதவியுடன் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி தொடங்கி, நடந்து வருகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் சேமிப்பு தொட்டியில், நிரப்பப்படும் ஆக்சிஜன், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இருப்பினும் தினசரி ஆக்சிஜன் வந்தால் மட்டுமே, தடையின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதனால் ஆக்சிஜன் கொண்டு வரும் லாரியை எதிர்பார்த்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதனால் தான் அரசு ஆஸ்பத்திரியிலேயே, ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த பணி இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைந்து விடும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இது பயன்பாட்டுக்கு வந்ததும், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்படுவதுடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வழங்க முடியும் என்றார்.

    சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்களை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே, பொராம்பட்டு மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக பால்ராஜ் (வயது 47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். முழு ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 9-ந்தேதி கடையை பூட்டினர். இதன் பின்னர் பால்ராஜ் தினசரி கடையை வந்து பார்த்து சென்றுள்ளார்.

    நேற்று முன்தினம் கடையை வந்து பார்த்த போது, பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த 100 மதுபாட்டில்களை காணவில்லை.

    இதுபற்றி அவர் அண்ணாமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி நேரில் சென்று டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர்.

    பின்பக்க சுவரை துளைப்போட்டு, அதன் வழியாக கடைக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் ரூ.19 ஆயிரத்து 500 மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    கிராமப்புறங்களில், நோய்த்தொற்று அதிகம் உள்ள இடங்களில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊரடங்கு நாட்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்து, நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வேண்டும். அவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை 10 முதல் 20 நபர்கள் வரை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, தொற்று பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. காய்ச்சல் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் பாதிப்பு குறைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீ அபிநவ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேந்திரன், சப்-கலெக்டர்கள் பிரவீன்குமார், மதுபாலன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கார்த்திகேயன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    பண்ருட்டி அருகே 16 வயது சிறுமிக்கும், சிறுவனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. குழந்தை திருமணத்தை நடத்தியதால் அவர்களது பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும், அண்ணாகிராமம் அடுத்த வடக்குபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி, சிறுவனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரது பெற்றோரும் அந்த சிறுவனுக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். தற்போது முழுஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பத்திரிகை அச்சடிக்காமல், உறவினர்களுக்கு மட்டும் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை 6 மணி அளவில் சிறுவனுக்கும், சிறுமிக்கும் அக்கடவல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் குழந்தை திருமணம் நடந்தது பற்றி தகவல் அறிந்த கடலூர் சைல்டு லைன் அமைப்பு உறுப்பினர்கள் முகுந்தன், சித்ராதேவி ஆகியோர் பண்ருட்டி போலீசாருடன் சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும், 21 வயது நிறைவடையாத சிறுவனுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றமாகும் என்று இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் அதிகாரிகள் விளக்கி கூறினர். அதனை தொடர்ந்து சிறுவன்-சிறுமி மற்றும் அவர்களது பெற்றோரை விசாரணைக்காக சைல்டு லைன் அமைப்பினர், கடலூர் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்களை குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தை திருமணத்தை நடத்தியதற்காக, இருவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
    விருத்தாசலம் அருகே வீட்டில் நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கம்மாபுரம்:

    விருத்தாசலம் அடுத்த மேற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 66). சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 9 கிராம் தங்கம், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தொியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 994 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரையுள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதனிடையே தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு முதல் தவணை மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இப்பணியானது கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்புற, கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர தடுப்பூசியை அதிக நபர்களுக்கு செலுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களில் 28 ஆயிரத்து 994 பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்து 2-வது தவணை மட்டும் போடப்படுகிறது.

    எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 8 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது பொதுமக்கள் பலர் தடுப்பூசி போடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 590 பேர் தடுப்பூசி போட்டு க்கொண்டு உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 840 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 37 ஆயிரத்து 750 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 8 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. அதன்படி அவை நேற்று முன்தினம் மாலை கடலூர் சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு வந்தது. தற்போது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 960 டோஸ் தடுப்பூசி இருப்பு உள்ளது. இதில் 3 ஆயிரத்து 860 டோஸ் கோவாக்சினும், 11 ஆயிரத்து 100 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியும் இருப்பு உள்ளது.
    ×