என் மலர்tooltip icon

    கடலூர்

    சாலை பணிக்காக தோண்டப்படும் மணலை விற்க எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புவனகிரி:

    பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தீர்த்தாம்பாளையம் பகுதியில் இருந்து கடலூர் வரையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் சாலையின் இருபுறங்களிலும், பள்ளம் தோண்டி ஜல்லிகற்கள் கொட்டப்படுகிறது.

    இந்த நிலையில் பள்ளம் தோண்டப்படும் போது கிடைக்கும் மணலை, ஒப்பந்ததாரர்கள் லாரிகளில் ஏற்றி தனிநபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பு.முட்லூர்ஊராட்சி மன்ற தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஜெயசீலன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி தமிழ்வாணன், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ், ஓட்டுனர் சங்க தலைவர் பாலகுரு மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, அங்கிருந்து மணலை ஏற்றி சென்ற லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் சாலை அகலப்படுத்தும் பணிக்காக எடுக்கும் மணலை முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி , சுகாதார வளாகம், மருத்துவமனை வளாகம் மற்றும் தாழ்வாக உள்ள பொது இடத்தில் கொட்டப்பட வேண்டும், தனிநபர்களுக்கு விற்பனை செய்ய கூடாது என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    சிதம்பரம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே உள்ள கொளக்குடி செட்டித் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 60), விவசாயி. மனைவியை பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் வீட்டில் தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மருதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது ஜெயசந்திரனின் தலை, முகம் பகுதி சிதைந்த நிலையில் படுகாயங்கள் இருந்தன.

    மேலும் அங்கிருந்த கட்டில், சுவர் என்று அனைத்து பகுதியிலும் ரத்தக்கறைகள் படிந்து இருந்தன. இதன் மூலம் மர்ம மனிதர்கள் இரவோடு இரவாக அவரை இரும்பு ஆயுதத்தால் அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

    மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஸ்கூப்பர் வரவழைக்கப்பட்டது. அதுசம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    பின்னர் ஜெயசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெயச்சந்திரன், 35 வயது பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். இதன் காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலக பெண் ஊழியர் கொரோனாவுக்கு பலியானார்.
    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு மருத்துவ பணியாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் தற்காலிக ஊழியரான அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

    இதன் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
    உடல் எடையை குறைத்ததால் மனஅழுத்தம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை நகர் பழைய பண்டிட் குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரீத்திகிருஷ்ணா (வயது 15). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் எடை அதிகமாக இருந்த பிரீத்தி கிருஷ்ணா மருத்துவரின் ஆலோசனையை கேட்டு உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து மாணவி உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறிவிட்டார்.

    இதனால் மனஅழுத்தத்தில் இருந்த மாணவி பிரீத்திகிருஷ்ணா சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    விருத்தாசலம் அருகே திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 54). இவரது மகன் தர்மராஜ்(27). இவருக்கும், காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் சந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று அதிகாலை 5 மணிக்கு தே.கோபுராபுரத்தில் உள்ள கோவிலில் நடைபெற்றது.

    இதற்காக திருமண வீட்டார் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டனர். கோவிலில் திருமணம் முடிந்து, மணமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மணமகன் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு மணமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கிருந்த பீரோ உடைந்த நிலையில், அதில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம், மற்றும் ½ பவுன் நகையை காணவில்லை. மேலும் மற்றொரு அறையில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் இருக்கிறதா? என்று பார்த்தனர். அந்த நகைகள் பத்திரமாக இருந்தன. இதனால் மணமகன் வீட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    மணமகன் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்த மோப்ப நாய் புருனே வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்ட அந்த நாய், சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது.

    இதற்கிடையே திருமணவிழாவுக்கு வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    கடலூர்:

    ரேஷன் கடைகள் மூலம் ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மே மாதம் பொதுவினியோக திட்டத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பை பொது வினியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரத்து 491 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வருகிற 15-ந்தேதி (செவ்வாக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

    இதையொட்டி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள 1420 ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் மதியத்திற்கு பிறகு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியை தொடங்கினர். இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு 14 வகையான மளிகைப்பொருட்கள், அதை பெறுவதற்கான பைகளும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே இதற்கு முன்பு 200 பேர் ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, பொருட்கள் முழுமையாக வரவில்லை என்பதால் நாள் ஒன்றுக்கு 75 முதல் 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    நெல்லிக்குப்பம், விருத்தாசலம் அருகே நடந்த தனித்தனி சம்பவத்தில் மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் அருகே உள்ள வான்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சுமன்நாத் (வயது 20). இவர் கடலூர் குமராபுரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று அவரது வீட்டில் இருந்த மின்விசிறி இயங்கவில்லை என தெரிகிறது. இதனால் சுமன்நாத் சுவிட்ச் பாக்சில் கை வைத்து, சுவிட்சை அழுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுமன்நாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே உள்ள பாலக் கொல்லையை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 24). டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவர், சென்னை போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி, தனது சித்தப்பா மகன் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள குடிநீர் மோட்டாரை இயக்குவதற்காக, சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவரஞ்சனியை மின்சாரம் தாக்கியதில், அவர், மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிவரஞ்சனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் கம்மியம்பேட்டையில் இரு தரப்பினர் கத்தியுடன் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் கர்ணன் மகன் நாய்க்குட்டி என்கிற விஜயகுமார் (வயது 23). இவர் நேற்று மாலை கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரில் உள்ள அய்யனார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் பாலா என்கிற பாலமுருகன் (21) என்பவர் அங்கு நின்று கொண்டிருந்தார். இவரை விஜயகுமார், முன்விரோதம் காரணமாக முறைத்தபடி சென்றதாக தெரிகிறது. இதை கவனித்த பாலமுருகன் அவரை தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் தங்களது நண்பர்களை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி கத்தியுடன் மோதிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் அடிப்படையில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் விஜயகுமார், மார்க்கெட் காலனியை சேர்ந்த ராமு மகன் விஜய், 17 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பாலமுருகன், கம்மியம்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் மகன் கருப்பு என்கிற கண்ணன் (24), பழனிவேல் மகன் வீரமணி (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் கத்தியுடன் மோதிக்கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் 45.856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பருவமழை காலத்தில் தண்ணீர் வரும். அதோடு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடவாறு வழியாக வந்து சேருகிறது.

    தற்போது வீராணம் ஏரியை மராமத்து பணிக்காக அங்குள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. கடந்த 2 மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

    வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. எனவே, பராமரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வீராணம் ஏரிக்கு இந்த மாத இறுதிக்குள் வந்து சேரும். அதன் பின்னர் சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்படும். விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 463 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 52 ஆயிரத்து 558 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 47 ஆயிரத்து 17 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்த நிலையில், 593 பேர் பலியாகி இருந்தனர். நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 463 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் இருந்து கடலூர் வந்த 6 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 45 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 412 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட விருத்தாசலத்தைச் சேர்ந்த 59 வயது நபர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 50 வயது நபர் நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 59 வயது நபர் மற்றும் 58 வயது பெண் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 55 வயது பெண் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 60 வயது நபர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த 74 வயது முதியவர், புவனகிரியை சேர்ந்த 33 வயது பெண் ஆகியோர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மங்களூரை சேர்ந்த 65 வயது பெண் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர்கள் 9 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,246 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 648 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 180-ல் இருந்து 177 ஆக குறைந்துள்ளது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,329 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 619 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 52 ஆயிரத்து 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்த நிலையில், 588 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 57 வயது நபர் செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 35 வயது வாலிபர், கடலூரை சேர்ந்த 55 வயது பெண், அண்ணாகிராமத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சேர்ந்த 45 வயது நபர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 5 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 496 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து கடலூர் வந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 49 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 443 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,329 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 619 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சங்கிலி தொடர்போன்று பரவி வரும் கொரோனாவின் சங்கிலியை உடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

    இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த வகையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்வோர் முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இருப்பினும் முதல் அலையில் நகரங்களில் பாதிப்பை உண்டாக்கிய கொரேனா தற்போது கிராமங்கள் வரையில் சென்றுவிட்டது. இதனால் தொற்று கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மாவட்ட நிர்வாகத்துக்கு சவாலாகவே இருக்கிறது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் அண்ணாகிராமம், கடலூர், புவனகிரி, கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் ஆகிய 13 ஒன்றியங்களில் கடந்த 4-ந் தேதி மட்டும் 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

    இதில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 488 ஆக இருந்தது. அதாவது 24 நாட்களுக்கு பிறகு அன்று தான் 500-க்கு கீழ் தொற்று குறைந்து இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். கடந்த 10 நாட்களில் சராசரியாக குமராட்சியில் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய 5 நகராட்சிகளில் கடந்த 4-ந்தேதி மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடலூர் நகராட்சியில் 48 பேருக்கு பாதிப்பு உறுதியானது. சராசரியாக கடலூர் நகராட்சி பகுதியில் 57 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    இதன் மூலம் மொத்த பாதிப்பில் 4-ல் 3 பங்கு கிராமப்புறங்களில் இருந்தே தற்போதைய நிலையில் கண்டறியப்பட்டு வருகிறது. அதாவது 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக எடுத்துக்கொண்டால், அதில் 75 பேர் கிராமங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே தொற்றின் சங்கிலியை தகர்த்தெறிய கிராமங்கள் தோறும் சென்று காய்ச்சல் முகாம்களை நடத்தி அதில், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று இருக்கிறதா? இல்லையா ?என்பதை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி நேற்று கடலூர் ஒன்றியம் செம்மண்டலம் குறிஞ்சிநகரில் காய்ச்சல் முகாம் நடந்தது. இதை கண்காணிப்பு அலுவலர் உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆனால் மக்கள் அதிக அளவில் வரவில்லை. இதேபோல் மற்ற ஒன்றிய, நகராட்சி பகுதிகளில் 137 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முகாமில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டுமே வந்து பரிசோதனை செய்தனர். மற்றவர்கள் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டவில்லை.

    இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது மக்களுக்காக தான் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். நீங்கள்தான் வெளியிடங்களுக்கு சென்று வருகிறீர்கள். உங்களால் தான் எங்களுக்கு நோய்த் தொற்று பரவும் நிலை ஏற்படும்.

    ஆகவே நாங்களே வீட்டில் பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்ற கருவிகள் வைத்து பரிசோதனை செய்து கொள்கிறோம். தடுப்பூசி போடுவதாக இருந்தால் மட்டும் வெளியில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். மற்றபடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து கொள்ள காய்ச்சல் முகாமுக்கு வரமாட்டோம் என்று கூறி வருவது வேதனை அளிக்கிறது.

    மக்களை தேடி நாங்கள் வரும் போது, அதை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் சென்ற பிறகு கூட்டம் நிறைந்த மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிடும்.

    ஆகவே இந்த காய்ச்சல் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

    கொரோனா என்கிற கொடிய அரக்கனை விரட்டி அடிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்களும் சுயகட்டுப்பாடுகளை பின்பற்றினால் தான் எளிதில் அந்த அரக்கனை வீழ்த்த முடியும். இல்லைெயன்றால் அந்த அரக்கனிடம் வீழ்வது இன்னும் எத்தனையோ மனித உயிர்களாக தான் இருக்கும். எனவே மக்களும் இதை உணர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்பதே சமூக நலனில் அக்கறைக்கொண்டோரின் எதிர்பார்ப்பாகும்.
    ×