என் மலர்tooltip icon

    கடலூர்

    நடுவீரப்பட்டு அருகே வெந்நீர் கொட்டியதில் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    நெல்லிக்குப்பம்:

    நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாலையம் அருகே உள்ள மலையடிகுப்பத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி உமா (வயது 22). இவர்களுக்கு 1 வயதில் ரத்தீஸ் என்கிற மகன் இருந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று உமா, ஆவி பிடிப்பதற்காக வெந்நீர் வைத்திருந்தார். பின்னர் அவர் ஆவி பிடித்து விட்டு சுடு தண்ணீரை கீழே வைத்துவிட்டு வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரத்தீஷ் மீது சுடு தண்ணீர் எதிர்பாராத விதமாக கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உமா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரத்தீசை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ரத்தீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுதண்ணீர் கொட்டியதில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியலில் 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 20, பக்ரைன் தினார் 1 ஆகியனவும் காணிக்கையாக பெறப்பட்டு இருந்தது தெரியவந்தது.
    சிதம்பரம்

    சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் நேற்று சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்கப் பெருமாள் தலைமையில், உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 10 லட்சத்து 83 ஆயிரத்து 448 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 20, பக்ரைன் தினார் 1 ஆகியனவும் காணிக்கையாக பெறப்பட்டு இருந்தது தெரியவந்தது. இப்பணியின் போது, கோவில் பணியாளர்கள் வாசு, ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    செந்தில் நாட்டுவெடி தயாரிப்பதற்கான வெடிமருந்தை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன்பேட்டையில் உள்ளது அருந்ததியர் தெரு. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பகுதியில் தவிடன் என்பவருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு தொகுப்பு வீடு, நேற்று காலை 8.20 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் அந்த பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் வெடிகுண்டு வெடித்து விட்டது என்று நினைத்து அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

    வெடி வெடித்ததில் தவிடனின் ஓட்டு வீடு தரைமட்டமானது. மேலும் அருகே உள்ள அருண், ரவி மனைவி வெண்ணிலா ஆகியோரது வீடும் சேதடைந்தது.

    அதிர்ஷ்டவசமாக தவிடனின் வீட்டில் யாரும் இல்லாததால், உயிரிழப்பு போன்ற துயர சம்பவங்கள் நிகழவில்லை.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில், எல்லப்பன்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்(வயது 41) என்பவர் தவிடனின் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது தெரியவந்தது.

    மேலும், செந்தில் நாட்டுவெடி தயாரிப்பதற்கான வெடிமருந்தை(சல்பர்) வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்கென உரிய அனுமதி பெற்று அங்குள்ள ஏரிக்கு அருகே குடோன் ஒன்றையும் வைத்து இருக்கிறார். ஆனால், அனுமதிக்கான கால அவகாசம் முடிந்ததை அடுத்து அவர் அதை இன்னும் புதுப்பிக்கவில்லை.

    இதற்கிடையே தான், தவிடன் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வெடி மருந்துகளை வைத்திருந்ததுடன், தானே நாட்டு வெடிகளை தயாரிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அங்கு வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து விபத்து நேர்ந்தது தெரியவந்தது.

    இதனிடையே சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்தவர்களிடம் விபத்து நேர்ந்தது குறித்தும், யாருக்கேனும் பாதிப்புகள் நேர்ந்ததா என்றும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் தாசில்தார் சையத் அபுதாஹீர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பார்த்த சாரதி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்திலின் சகோதரர் ராஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும், இதுவரை 13 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் மூலமாக தினசரி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 4 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் நம் மாவட்ட மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.

    கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை வரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

    இருப்பினும் அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்காக மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தாய்மார்களுக்கு தேவையான படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    அதனால் மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளது. மீண்டும் அதிகரிக்காமல் இருக்க மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.5.5 கோடி மதிப்பில் 1493 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் மேல்தளத்துடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் இருப்பு வைக்கப்படவுள்ளது.

    இந்நிலையில் இக்கட்டிடத்தில் பாதுகாப்பு அம்சங்களான தீயணைப்பு கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு காவலர் அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முதல், இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளும் அறை, எந்திரங்கள் இருப்பு வைக்கும் அறை ஆகியவற்றின் அமைவிடம் குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாபு, தேர்தல் தாசில்தார் பாலமுருகன், கடலூர் தாசில்தார் பலராமன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
    பரங்கிப்பேட்டை அருகே கோவில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கிராமத்துக்குள் அதிகாரிகளை நுழையவிடாமல் தடுக்க சாலைகளில் முள்செடிகளை வெட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அடுத்த தச்சகாடு அருகே உள்ளது வல்லம் கிராமம். இந்த கிராமத்தில் செல்லும் இணைப்பு சாலையோரம் கன்னியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே கோவிலுக்கான மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கோவிலுக்கு பின்பகுதியில் வசித்து வருபவர்களில் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் எங்கள் பகுதிக்கு செல்ல வழி இல்லை, எனவே கோவில் மண்டபத்தை அகற்றி தரவேண்டுமென்று வழக்குத் தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவில், அந்த மண்டபத்தை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று காலை சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், புவனகிரி தாசில்தார் அன்பழகன், குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சந்தோஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் பரங்கிப்பேட்டை தேவி, அண்ணாமலை நகர் சீனு சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் வல்லம் கிராமத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    இதுபற்றி அறிந்த கிராம மக்கள் , அதிகாரிகள் மற்றும் போலீசார் தங்கள் கிராமத்துக்குள் வர விடாத வகையில் அங்கு முள்செடிகளை வெட்டி போட்டு சாலையை அடைத்தனர். அதோடு அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு கிராமத்துக்குள் நடந்து சென்றனர்.

    தொடர்ந்து மண்டப பகுதியில் திரண்ட மக்கள், அதை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதிலும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே கோவிலை திறந்து பூஜை செய்தனர். அப்போது சில பெண்கள் அருள்வந்து சாமி ஆடினார்கள்.

    இதை பார்த்த அனைத்து துறை அதிகாரிகள் இன்னும் 15 நாட்களுக்குள் நீங்களாகவே இந்த மண்டபத்தை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாங்கள் அகற்றுவோம் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாராயம் விற்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் கோவிந்தசாமி (வயது 51). இவர் சேப்பாக்கம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவர் வேப்பூர் சேப்பாக்கம் எல்லையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வேப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கோவிந்தசாமியை கைது செய்தனர். அவரிடம் 20 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.

    பண்ருட்டி அருகே சிறுமியை 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் முத்துராஜ் (வயது 29). தொழிலாளி. கடந்த ஆண்டில் செல்போனில் ராங் கால் செய்தபோது பண்ருட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பேசினார். பின்னர் அவர்கள் அடிக்கடி பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று, பண்ருட்டிக்கு பகுதிக்கு வந்த முத்துராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். பின்பு அந்த சிறுமியை உறவினர்கள் முன்னிலையில் மேல்மலையனூர் கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார். அதன்பின்னர் தான், முத்துராஜூக்கு ஏற்கனவே திருணமாகி 8 வயதில் ஒரு குழந்தை இருப்பது சிறுமிக்கு தெரியவந்தது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் முத்துராஜை சந்தித்து கேட்டனர். அப்போது அவர்களை ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து, முத்துராஜ், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த முத்துராஜின் தந்தை முனுசாமி, தாய் அமிர்தா, உறவினர்கள் ராஜேந்திரன் மனைவி கவிதா, லாவண்யா, முனிராஜ், தங்கவேல், பாக்யராஜ், ஜெயமணி ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தார். கைது செய்யப்பட்ட முத்துராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற 8 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    கடலூரில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 300 சிறு-குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 1,165 உழவர் ஆர்வலர் குழுக்களும், 233 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உழவர் உற்பத்தியாளர் குழு ஒன்றுக்கு பண்ணை எந்திரங்கள் வாங்க தலா ரூ.5 லட்சம் தொகுப்பு நிதி, தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2020-21-ம் நிதி ஆண்டில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் கடலூர் வட்டாரத்தில் உள்ள 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள் வாங்குவதற்கு தொகுப்பு நிதியாக, ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கடலூர் வட்டாரத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 நெல் நடவு எந்திரங்கள், ஒரு வைக்கோல் கட்டும் எந்திரம், 4 பவர் டில்லர்கள், 11 ரொட்டவேட்டர்களும் வழங்கினார். இதில் கடலூர் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா, வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடலூர் மாவட்டத்தில் 48 தடை செய்யப்பட்ட வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
    கடலூர்:

    கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

    அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். நோய்த்தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்களை நடத்தி, தொற்றின் தன்மைக்கேற்ப மருத்துவமனை அல்லது கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தில் இது வரை நோய்த்தொற்று பரவலால் 131 தடை செய்யப்பட்ட தெருக்களும், 48 தடைசெய்யப்பட்ட வீடுகளும் உள்ளன. அந்த பகுதிகளை வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, தன்னார்வலர்களை கொண்டு மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    கருப்பு பூஞ்சை நோய்தொற்று காரணமாக பண்ருட்டியை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமம் 4-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தெருக்கூத்து மேடை நாடக மிருதங்க கலைஞர். இவர் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    பண்ருட்டியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட புதிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் வேலையில் ஈடுபட்டவர்களிடம் பணியில் எந்தவித சுணக்கம் காட்டாமல் வாய்க்காலை அகலமாகவும், ஆழமாகவும் தூர்வாருதுடன், வேளாண் பாசனத்திற்கு தண்ணீரை முழுமையாக பயன்படும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    ஆய்வின் போது, உதவி பொறியாளர் குமுதா மற்றும் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, ஊராட்சி செயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    இதை தொடர்ந்து, கொத்தட்டை, சேந்திர கிள்ளை ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டம் தொடர்பான பணிகளையும் கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆய்வு செய்தார்.
    சிதம்பரத்தில் டிப்பர் லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்.அவரது மகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள கீழ புவனகிரி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). தொழிலாளி. இவரது மகன் புவனேந்திரன்(18) . நேற்று மாலை இருவரும் மொபட்டில் கீழ புவனகிரியில் இருந்து சிதம்பரம் நோக்கி, வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது வயலூர் அருகே வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயமடைந்த புவனேந்திரன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் தாணிபூண்டி பூலாமேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் ( 27) என்பவரை கைது செய்தனர்.

    ×