search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம்.

    கடலூர் மாவட்டத்தில் 48 தடைசெய்யப்பட்ட வீடுகள் கண்காணிப்பு - கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்

    கடலூர் மாவட்டத்தில் 48 தடை செய்யப்பட்ட வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
    கடலூர்:

    கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

    அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். நோய்த்தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்களை நடத்தி, தொற்றின் தன்மைக்கேற்ப மருத்துவமனை அல்லது கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தில் இது வரை நோய்த்தொற்று பரவலால் 131 தடை செய்யப்பட்ட தெருக்களும், 48 தடைசெய்யப்பட்ட வீடுகளும் உள்ளன. அந்த பகுதிகளை வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, தன்னார்வலர்களை கொண்டு மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×