என் மலர்
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் குமாரக்குடி, காவாலக்குடி, கூடலையாத்தூர் பகுதியில் 5 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.
இதில் சேத்தியாத்தோப்பு அருகே கூடலையாத்தூரில் உள்ள ரேஷன் கடையின் மூலம் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த கடை முறையாக திறக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு மாதத்துக்கு 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் இந்த கடையை சார்ந்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழக அரசு வழங்கிய கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்குவதற்கு கூட 3 நாட்கள் மட்டும் கடை திறக்கப்பட்டது, அதன்பின்னர் திறக்கப்படவில்லை.
இதனால் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை கண்டித்து, கிராம மக்கள் நேற்று ரேஷன் கடை முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ரேஷன் கடை முன்புள்ள இரும்பு கதவுக்கு மாலை அணிவித்து, வாழைப்பழங்கள் வைத்து ஊதுபத்தி மற்றும் கற்பூரம் ஏற்றி படையலிட்டனர். அப்போது அங்கிருந்த கிராம மக்கள் கடை எப்படியாவது திறக்கப்பட்டு, தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட வேண்டும் என்று வேண்டி கைகூப்பி வணங்கினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 84 ஆயிரத்து 376 ரூபாய் காணிக்கையாக வசூலாகி இருந்தது. காணிக்கை பணம் எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெற்கு மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 48).முந்திரி வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கலைசெல்வன்(37). இவர் முந்திரி வியாபாரம் செய்து தொழிலில் நஷ்டம் அடைந்தார்.
நேற்று இரவு கலைசெல்வன்,வடிவேலை நேரில் சந்தித்தார். அப்போது கலைசெல்வன் தனக்கு கடனாக ரூ.3ஆயிரம் பணம் வேண்டும் எனகூறினார். உடனே வடிவேல் அவருக்கு பணம் கொடுத்தார்.
அதன் பின்னர் கலைசெல்வன் தனது மோட்டார் சைக்கிள் வேலங்குப்பம் பகுதியில் நிற்பதாகவும். தன்னை அந்த பகுதிக்கு அழைத்து செல்லும்படி கூறினார். இதை நம்பிய வடிவேல் மோட்டார் சைக்கிளில் கலைசெல்வனை அந்த பகுதிக்கு அழைத்து சென்றார்.
வேலங்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பு அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது கலைசெல்வன் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேலுவின் கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி கூறினார்.
அதன் பின்னர் உடனடியாக ரூ.50 லட்சத்தை இந்த பகுதிக்கு எடுத்து வர சொல் என்று வடிவேலுவிடம், கலைசெல்வன் கூறினார். அதற்க்கு வடிவேல் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கலைசெல்வன் கத்தியால் வடிவேலுவின் கையில் வெட்டினார்.
இதில் பயந்து போன வடிவேல் செல்போன் மூலம் அவரது உறவினர் வினோத்குமாரை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு உடனடியாக வேலங்குப்பம் பகுதிக்கு வருமாறு கூறினார்.
உடனே வினோத்குமார் ரூ.50 லட்சத்தை ஒரு பையில் எடுத்து கொண்டு அந்த பகுதிக்கு சென்றார். அந்த பணத்தை அந்த பகுதியில் உள்ள மினிலாரியில் வைத்து விட்டு சிறிது தூரம் தள்ளி நிற்குமாறு கலைசெல்வன் கூறினார். அதன்படி வினோத்குமார் ரூ.50 லட்சத்தை மினி லாரியில் வைத்து விட்டு சென்றார்.
அதன் பின்னர் கலைசெல்வன் ரூ.50 லட்சம் பணத்துடன் மினிலாரியில் தப்பி சென்றுவிட்டார். கலைசெல்வன் கத்தியால் வெட்டியதில் காயம்அடைந்த வடிவேலை அவரது உறவினர் வினோத்குமார் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு வடிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார்,தவசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முந்திரி வியாபாரி வடிவேலை கத்தியால் வெட்டி ரூ. 50 லட்சம் பணத்தை பறித்து சென்ற கலைசெல்வனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் கலைசெல்வனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்றுநோய் பாதிப்பு நாளடைவில் குறைந்து வருகிறது. நேற்று 127 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.
மேலும் படகில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றதை காண முடிந்தது.
இதுமட்டுமின்றி கடலூர் நகர் முழுவதும் இன்று காலை முதல் இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட அதிகளவில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது. மேலும் கடலூரில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்களிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.
இதனை தொடர்ந்து இறைச்சிக் கடை முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளி உடன் நின்று முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இறைச்சி வாங்கி சென்றனர். ஆனால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் ஒரு சிலர் மீன்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் தொற்று நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடியாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் தலைமையிலும் கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர்கள் சுபத்ரா, நரசிம்மபெருமாள் ஆகியோர் முன்னிலையிலும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு உண்டியல் மட்டும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அதில் 14 லட்சத்து 20 ஆயிரத்து 232 ரூபாயும், 306 கிராம் தங்கமும், 118 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மீதமுள்ள 4 உண்டியல்கள் விரைவில் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






