என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் அருகே கையில் பாட்டிலில் பெட்ரோலை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்: 

    சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 4 மண்டபம் அருகே உத்தமசோழமங்கலம் பகுதியை சேர்ந்த போண்டா என்கிற ஸ்டாலின் தனது கையில் பாட்டிலில் பெட்ரோலை வைத்துக் கொண்டு பொதுமக்கள் மீது ஊற்றி விடுவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து இடையூறு செய்து வந்துள்ளார். 

    இதனையடுத்து போலீசார் ரவுடி ஸ்டாலினை கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்: 

    சிதம்பரம் லால்கான் தெருவில் கேரள ஹாட் சிப்ஸ் கடை மற்றும் அதன் அருகே மருந்தகம் உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டு சென்றனர்.

    நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 கடைகளின் பூட்டை உடைத்தனர். பின்னர் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளருக்கும், நகர போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

    தகவலறிந்து வந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த 2 கடைகளையும் பார்வையிட்டு கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

    இந்த கொள்ளை சம்பவத்தில் ஹாட் சிப்ஸ் கடையில் ரூ.15,000 மற்றும் மருந்து கடையில் ரூ.10,000 கொள்ளை போய்  உள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 92 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58 ஆயிரத்து 577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 92 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னை, தஞ்சை ஆகிய இடங்களில் இருந்து கம்மாபுரம், கீரப்பாளையம், பண்ருட்டி வந்த 3 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

    இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 24 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 64 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.நேற்று முன்தினம் வரை 56 ஆயிரத்து 868 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 76 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 847 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 99 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை 776 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 3 பேர் பலியானார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கடலூரை சேர்ந்த 80 வயது மூதாட்டி, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 60 வயது முதியவர், புவனகிரியை சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து பலியானார்கள். மாவட்டத்தில் நேற்று கட்டுப்பாட்டு பகுதி 40 ஆக குறைந்தது. இதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58 ஆயிரத்து 505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 56 ஆயிரத்து 800 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் 776 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதிதாக 89 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கோயம்புத்தூரில் இருந்து கடலூர் வந்த ஒருவர், விருத்தாசலம் வந்த 2 பேர், மதுரையில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியானது.

    இதுதவிர சளி, காய்ச்சல் போன்ற தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 61 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தை சேர்ந்த 56 வயது பெண், நல்லூரை சேர்ந்த 60 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் 68 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பஞ்சாயத்து தலைவரின் கணவர் அடிக்கடி ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடுவதை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் அவரை அறையில் பூட்டி சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பஞ்சாயத்து தலைவர் அருந்தவம். இவரது கணவர் கருப்பையா. இவர் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிட்டு ஊராட்சி செயலாளரை புதிதாக நியமனம் செய்யும் தீர்மானங்களை எழுதிவைத்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினார்.

    ஆனால் பஞ்சாயத்து தலைவரின் கணவர் அடிக்கடி ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடுவதை கண்டித்து 2-வது வார்டு உறுப்பினர் அய்யம்பெருமாள் தீர்மானம் நோட்டில் கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே பஞ்சாயத்து தலைவரின் கணவர் கருப்பையா அலுவலகத்தை பூட்டி செல்ல முயன்றார். இதனை அறிந்த வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து தலைவரின் கணவரை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டி சென்றனர். அதிர்ச்சி அடைந்த கருப்பையா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வந்தனர். அவர்கள் கருப்பையாவை திறந்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பண்ருட்டியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி(வயது35). கணவனை இழந்தவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவரின் தம்பி மனைவி சித்ரா. அதேபகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு வீடு பிரச்சினை சம்பந்தமாக. தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் சுமதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரிக்கிறார்.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    மக்கள் அதிகாரம் சார்பில் மத்திய அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடவேண்டும். செங்கல்பட்டு தடுப்பு ஊசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    நிவாரணமாக குடும்பத்திற்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் நந்தா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி, ஆனந்தி, முத்து, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு கண்டன உரையாற்றினார். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ் அன்சாரி, ஜாகிர் உசேன், பொருளாளர் அசன் முகமது, துணைத் தலைவர் மதர்ஷா, துணை செயலாளர்கள் சம்சுதீன், ஷாகுல் ஹமீது, காதர் ‌ஷரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அப்துல் ரஹீம் வரவேற்றார். 

    இதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திட்டக்குடி அருகே சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரி பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோடங்குடி ஊராட்சியில் 4 -வதுவார்டில் சாக்கடை கால்வாய்கடந்த 10 வருடங்களாக தூர் வார கோரி மங்களூர் ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்றத்திலும், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வில்லை மேலும் தெருவில் உள்ள சாக்கடை தூர் வாராமல் உள்ளதால் சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் சாக்கடை சாலையில் நடந்து செல்லும் அவல நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

    இதைப்பற்றி எந்த அரசு அதிகாரிகளும் சரி செய்ய முன்வரவில்லை என கூறி சாக்கடை செல்லும் தெருக்களில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தனர் சாக்கடை செல்லும் அனைத்து தெருக்களிலும் முறையாக அளவீடு செய்து கால்வாய் சரிசெய்து தரப்படும் என உறுதி அளித்ததாக போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தைகை விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து தீவிரமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    கடலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று நோய் பரவல் குறைந்து வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தொற்று நோய் பரவலை குறைத்து வருகின்றனர். இது மட்டுமின்றி பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து தீவிரமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வந்த காரணத்தினால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் தொற்று நோய் பரவல் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தடுப்பூசி முகாம் அமைத்து அதன் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு இருந்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தற்போது தடுப்பூசி இல்லை என அறிவித்து பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலமாக கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காலை முதல் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக வந்தனர்.

    ஆனால் தடுப்பூசி இல்லை என பேனரை பார்த்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. மேலும் மத்திய அரசு தடுப்பூசி வழங்கி அதன் மூலம் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்ட பிறகு தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    புதுச்சத்திரத்தில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    சிதம்பரம்:

    புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கீழ் பூவாணிக்குப்பத்தை சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 27), கம்பளிமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் அன்பரசு(26) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வன், அன்பரசு ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கர்ப்பிணிபெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது.

    கடலூர்:

    தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதன் பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையின் பேரில் தமிழகத்தில் உள்ள 1½ கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 6 லட்சத்து 41 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

    ஜூலை மாதத்தில் மத்திய அரசு மூலம் 71 லட்சம் கொரோனா தடுப்பூசி பெற்று பொதுமக்களுக்கு செலுத்தப்படும். ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தலின்படியும், மத்திய அரசின் உத்தரவின் பேரிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டது.

    அதன்பேரில் இன்று காலை இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கர்ப்பிணிபெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாமை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தடுப்பூசி செலுத்தும்பணி இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது தடுப்பூசி செலுத்தும் பணியில் ஒரு மைல் கல்லாக உள்ளது.

    கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

    தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பிய பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா நோய்தொற்று பரவல் வேகமாக குறைந்து வருகிறது.

    தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வந்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    கடந்த 2 மாதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்துவந்தது உண்மைதான். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழக அரசு, மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று பொதுமக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு அரசு கட்டணத்தை நிர்ணயிக்ககோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்துக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தார்.

    இந்தநிலையில் அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண சம்மந்தப்பட்டதுறை அமைச்சர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை முடிக்க வழக்கு... அரசிடம் விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்

    கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி தொடக்க விழா நடைபெற்றது.

    கொரோனா தடுப்பூசி

    இந்த விழா வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.



    ×