என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று 76 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் வருகிற ஜூலை 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று 76 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர். கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாது பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மீன் வாங்க கடலூர் துறைமுகத்தில் குவிந்தனர்.

    மேலும் படகில் மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்து வாங்கி சென்றதை காண முடிந்தது.

    கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் பெரும்பாலானோர் மீன்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் தொற்று நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக வீடு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. , இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்க பணிக்காக வானதிராயபுரம், தென் குத்து கிராமங்களில் உள்ள வீடு, நிலங்களை கையகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. நில எடுப்பு அலுவலத்தில் தனி தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, ஊ.ஆதனூர், வானதிராயபுரம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதுபற்றி தகவல் அறிந்த தென்குத்து கிராம மக்கள் விவசாய சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், வைரக்கண்ணு, ராகவன், கண்ணுசாமி, பெலிக்ஸ், கொளஞ்சி, ஸ்டாலின் ஆகியோருடன், வானதி ராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கிராம நிலங்களை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் இதுகுறித்து நாளைமறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக கூறிவிட்டு சென்றனர்.

    இதற்கிடையே தனி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் குறித்து வானதிராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் வானதிராயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விளக்க கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், என்.எல்.சி. நிர்வாகம் தனது சுரங்க பணிகளுக்காக ஏற்கனவே நிலம் மற்றும் வீடு கையகப்படுத்தியவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

    மேலும் வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து மக்களின் கருத்துகளை கேட்க மாவட்ட கலெக்டர், வானதிராயபுரம் ஊராட்சி பொதுமக்கள், என்.எல்.சி. அதிகாரிகளை கொண்டு முத்தரப்பு கூட்டம் கூட்ட வேண்டும். அதன் பின்னர்தான் நிலம் கையகப்படுத்தும் திட்டம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துவிட்டு வந்துள்ளதாகவும், நாம் அனைவரும் ஒன்றுகூடி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு வீடு, நிலம் வழங்குவதில்லை என்று ஏகமனதாக முடிவெடுத்து நமது கோரிக்கையை வென்றெடுக்க போராட வேண்டும் என்றார்.

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். புதிதாக 83 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 255 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. இவர்களில் கோவை, தஞ்சாவூரில் இருந்து கம்மாபுரம், கடலூர், பண்ருட்டி வந்த 5 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அண்ணாகிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 13 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 64 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியது.

    நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் 793 பேர் உயிரிழந்தனர். நேற்று மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    பண்ருட்டியை சேர்ந்த 59 வயது பெண் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், என்.எல்.சி.யை சேர்ந்த 60 வயது மூதாட்டி சென்னை தனியார் மருத்துவமனையிலும், கம்மாபுரத்தை சேர்ந்த 59 வயது ஆண் தஞ்சை தனியார் மருத்துவமனையிலும், குமராட்சியை சேர்ந்த 76 வயது முதியவர் நாகை அரசு தனியார் மருத்துவமனையிலும் நோய் பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 560 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 93 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 தேர், 5 கொடிமரம், 5 கோபுரங்கள், 5 நந்திகள் என அனைத்தும் 5 ஆக அமையப்பெற்றுள்ளது தனி சிறப்பாகும். இந்த கோவிலை சுற்றிலும் உள்ள பகுதியில் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். திருவிழா காலங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் போது இடவசதி இன்றி பக்தர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனால் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கோவிலில் இருந்த தேர்கள் எரிந்து சாம்பலானது. இதனால் தேர் நிறுத்துமிடம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றவில்லை. மேலும் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து கோவில் அருகில் உள்ள 32 கடைகளை அகற்றுவதற்கு கோவில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணைய நீதிமன்றம் மற்றும் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இந்த வழக்கின் முடிவில் 32 கடைகளையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விருத்த கிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 32 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக நேற்று இந்து சமய அறநிலையத்துறை கடலூர் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன் ஆகியோர் 2 பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு வந்தனர். இதில் 9 கடைகளை அகற்றக்கூடாது என அதன் உரிமையாளர்கள் மேல் முறையீடு செய்ததால், அவர்களின் கடைகளை தவிர்த்து மீதமுள்ள 23 ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் இடிக்க தொடங்கினா். இன்றும் (வெள்ளிக்கிழமை) ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் 3 கைதிகள் உள்பட 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. உயிரிழப்பு எதுவும் இல்லை.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. இவர்களில் சென்னை, மதுரையில் இருந்து கடலூர், குமராட்சி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி வந்த 5 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குமராட்சி, நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 17 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 62 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியது.

    இதில் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட 3 கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்கள் 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 469 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 91 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நேற்று முன்தினம் வரை வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்தில் உயிரிழந்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள புள்ளிவிவர பட்டியலில் சேர்த்தது போக கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 793 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

    இருப்பினும் கொரோனா பாதித்த 818 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 95 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதி 33 ஆக இருந்தது.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில், பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கடலூர் சி.ஐ.டி.யு. அலுவலகம் முன்பு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஒப்பாரி வைத்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிகளுக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைப்பது போன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி தலைமை தாங்கினார். மின்வாரிய ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேசிங்கு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமாரி, மனோரஞ்சிதம், மீரா, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அம்முனி, கவிதா, சரளா, மாலதி, வேல்விழி, கர்ணா, ஜெயலட்சுமி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சாமானிய மக்களை பாதிக்கும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விலை உயர்வுக்கு காரணமான வரியை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    வடலூர் அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலியானா சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை.
    வடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரை மணவெளி பகுதியை சேர்ந்தவர் கலியன் மகன் சிவபாலன் (வயது 23). கூலி தொழிலாளியான இவர் வடலூரை சேர்ந்த தமிழரசன் என்பவரின் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியில் பணிபுரிந்து வந்தார். சிவபாலன் நேற்று முன்தினம் மாலை தன்னுடன் லாரியில் பணிபுரியும் கார்த்திக் என்பவருடன் வடலூர் அடுத்த கருங்குழி கல்லாம்குளம் குளத்துக்கு குளிக்க சென்றார். பின்னர் இருவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற சிவபாலன் தண்ணீரில் மூழ்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிவபாலனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, இதுபற்றி வடலூர் போலீஸ் நிலையத்துக்கும், குறிஞ்சி்ப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதன்அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடலூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ரப்பர் படகு உதவியுடன் குளத்தில் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய சிவபாலனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இரவு ஆனதும் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு நேற்று காலை 10 மணிக்கு குளத்தில் இறங்கிய தீயணைப்புவீரர்கள் போராடி மாலை 5 மணிக்கு சிவபாலனை பிணமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூா் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 85 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 57 ஆயிரத்து 380 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் 794 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சிலரின் முடிவுகள் நேற்று வெளியானதில் புதிதாக 95 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் இருந்து மங்களூர், விருத்தாசலம் வந்த 2 பேர், தஞ்சாவூரில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 70 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 49 வயது ஆண், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமராட்சியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கருங்குழி தோப்பு குடியிருப்பு பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் இளையராஜா, திருவள்ளுவன் உள்பட 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.  வானமே பிளந்து ஊற்றுவது போல் மழை பொழிந்தது.  இதனால் கருங்குழி தோப்பு பகுதி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் இளையராஜா, திருவள்ளுவன்  உள்பட 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.  இதனால் மக்கள் அவதிப்பட்டனர். 

    பழைய  பஸ் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால்  பஸ்களுக்கு  காத்திருந்த பயணிகள் சிரமப்பட்டனர். சோளம், கடலை, எள்ளு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் இதுபோல் தண்ணீர் வீடுகளுக்குள் வந்து விடுகிறது.  இது குறித்து பலமுறை பெண்ணாடம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை இல்லை. கருங்குழி தோப்பு  குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வடிகால் வசதி இல்லை, மழை காலங்களில் இதுபோல் வீடுகளில் தண்ணீர் புகுந்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் நனைந்து நாங்கள் பாதிக்கப்படுவது  தொடர்ந்து நடந்து வருகிறது என்றனர்.
    குறிஞ்சிப்பாடி அருகே வீட்டை விட்டு சென்ற பட்டதாரி இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தீர்த்தனகிரி ஆயித்துறை பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகள் சோபா என்கிற ராஜலட்சுமி (26வயது). பி.ஏ. பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து கடலூர் செல்வதாக கூறிச்சென்றுள்ளார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. 

    இதனையடுத்து ராஜலட்சுமியின் தந்தை தனது மகள் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தார். ஆனால் எங்கு தேடியும் ராஜலட்சுமி கிடைக்கவில்லை. இதையடுத்து இவரது தந்தை ரவி அளித்த புகாரின் அடிப்படையில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ராஜலட்சுமி எங்கு சென்றார்? என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் சிவசங்கர் (வயது 15) .  அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவனது நண்பன் டிராவிட் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சிவசங்கர் படிக்கும் அதே பள்ளியில் படித்து வருகிறார்.  அந்த சிறுமியை சிவசங்கர் பல மாதங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். 

    தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்த சிவசங்கர் அந்த சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவசங்கர் அன்றிரவு தனது நண்பன் டிராவிட்டுடன் சேர்ந்து சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சுதா சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன்அகரம் மாணவர்களை கைது செய்தார்.
    பெருந்தொற்றால் தொடர்ந்து 2-வது ஆண்டாக சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தா்கள் இன்றி விழா கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே வேளையில் சாமிக்கு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிகர திருவிழாவான தேரோட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆனிதிருமஞ்சன விழாவும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், மேலும் திருவிழா முன்பு எப்படி நடைபெறுமோ அதே போன்று நடைபெற அனுமதி அளித்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மாற்றி கொள்ள முன்வரவில்லை. மேலும் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, தேரோட்டத்தை கோவிலுக்கு வெளியேவும், ஆனிதிருமஞ்சன விழாவையும் நடத்த அனுமதி அளிக்கவில்லை. பக்தர்கள் யாரும் இன்றி, கோவில் உள் பகுதியிலேயே தேரோட்டம் மற்றும் ஆனிதிருமஞ்சன விழாவை நடத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தியது.

    நடராஜர்

    அதன்படி இன்று நடைபெற இருந்த பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நிகழ்வு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமாக தேரோட்டத்தின் போது நடராஜருக்கு கோவிலுக்கு உள்ளே நடைபெறும் பூஜைகள், இன்றும் அதே போன்று நடக்கிறது.

    அதன்படி இன்று நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித்ர சபையில் இருந்து புறப்படுகின்றனர். அதை தொடர்ந்து உள் பிரகாரத்தை வலம் வரும் சுவாமி அங்கிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அதன் பின்பு காலை 9 மணி முதல் 2 மணி வரை சுவாமியை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    தொடர்ந்து தரிசன நாளான நாளை(வியாழக்கிழமை) ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. பின்பு
    மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆனி திருமஞ்சன விழாவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்படுவதுடன், ஆனி திருமஞ்சனமும் பக்தர்கள் இன்றி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    ×