என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே நடந்த வெவ்வேறு சம்பவத்தில் தூக்குப்போட்டு 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள நடுபிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சிவா(வயது 22). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். மளிகை சாமான்கள் டோர் டெலிவரி கொடுத்த வகையில் வசூலித்த ரூ.40 ஆயிரத்தை சிவா, கடை உரிமையாளரிடம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. எனவே கடை உரிமையாளர் தனக்கு தர வேண்டிய பணத்திற்கு சிவாவிடம் எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த சிவா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(34). இவரது மனைவி கலைவாணி(27). இவர்கள் 2 பேரும் பண்ருட்டி அருகே கோழிப்பாக்கத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கடந்த 6 மாதமாக தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    முருகேசன் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதை கலைவாணி கண்டித்ததால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    வடலூர்:

    அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர், மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்டத்தில் 7 உட்கோட்ட காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையது அபுதாகிர், வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வடலூரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்கள் விற்றதாக வடலூரை சேர்ந்த ராஜேஷ்(வயது 35), வடலூர் பால்காரன் காலனியைசேர்ந்த முருகன்(52) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 கடைகளும் சீல் வைக்கப்பட்டது.

    நல்லூர் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக சிவக்குமார், சுப்பிரமணியன், கண்டபங்குறிச்சியில் சீனிவாசன், வேப்பூர் கூட்டுரோட்டில் சரவணன் ஆகிய 4 பேரையும் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு கைது செய்தார். மேலும் வேப்பூர் தாசில்தார் செல்வமணி முன்னிலையில் 4 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ஆவட்டி கூட்டுரோட்டில் புகையிலை பொருட்கள் விற்றதாக அரிதாஸ்(65), எழுத்தூரில் மாயவன்(34) ஆகிய 2 பேரையும் ராமநத்தம் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெட்டிக்கடைகளிலும், மளிகை கடைகளிலும், வீடுகளிலும் பதுக்கி வைத்து புகையிலை பொருட்களை விற்றதாக மொத்தம் 58 பேர் கைது செய்யப்பட்டனர். வருவாய்த்துறை மூலம் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோருக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனையும் விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 57). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் பிரபு (25). இவரும், அதே பகுதியை சேர்ந்த 24 வயதும் பெண்ணும் காதலித்தனர். மேலும் பிரபு அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த இளம்பெண், பிரபுவிடம் சென்று தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறினார்.

    அதற்கு பிரபு, தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும், வேலை கிடைத்தவுடன் உடனே திருமணம் செய்து கொள்வதாகவும், தற்போது கருவை கலைத்துவிடுமாறும் கூறி கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்தார். இதை நம்பிய இளம்பெண், மாத்திரையை சாப்பிட்டு, கருக்கலைப்பு செய்தார். இந்தநிலையில், பிரபுவுக்கு நீதிமன்றத்தில் நிரந்த ஊழியர் வேலை கிடைத்தது. இதுபற்றி அறிந்த இளம்பெண், தனது குடும்பத்தினருடன் பிரபு வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு பிரபு மற்றும் அவரது பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து, அந்த இளம்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து அந்த இளம்பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பிரபு, அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று, இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போதை பொருட்களை பதுக்கியது தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தீபன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ் சிங்கார வேலன் மற்றும் போலீசார் போலீசார் தீவிர புகையிலை தடுப்பு நடவடிக்கையில்ஈடுபட்டனர்.

    அப்போது பண்ருட்டி மார்க்கெட், காந்தி ரோடு, காமராஜர்நகர், பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள பெட்டி கடை மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கடை விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லட்சம் மதிப்புள்ள பான்பராக், ஹான்ஸ்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சகிதமாக சோதனையில் ஈடுபட்ட போது பண்ருட்டியில் ஹான்ஸ் விற்பனை செய்த முக்கிய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ்பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊழியர்கள் நகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளிச் சென்று கீழ்பட்டாம்பாக்கம் மற்றும் கீழ்பாதி பகுதிகளில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். தற்போது கீழ்பட்டாம்பாக்கம் குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெறுவதாலும், கீழ்பாதியில் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாகவும் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்கள் மூலம் நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் தென்பெண்ணாற்றிலும், அதன் கரையையொட்டி உள்ள விளை நிலங்களிலும் கொட்டப்பட்டு வந்தது.

    இதற்கு விஸ்வநாதபுரம் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் இங்கு குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி நகராட்சி குப்பை வாகனத்தை அடிக்கடி சிறைபிடிப்பது, சாலை மறியல் செய்வது போன்ற பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் நெல்லிக்குப்பம் நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை வாகனத்தில் ஏற்றி வந்து விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாற்றின் கரையில் நேற்று காலை கொட்டிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து ஆத்திரமடைந்த தென்பெண்ணையாறு கரையோர விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, நகராட்சி குப்பை வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்த முயன்றார். அப்போது தென்பெண்ணையாறு மற்றும் கரையோர விளைநிலப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியும் நீங்கள் கேட்பதில்லை. ஆகையால் இந்த முறை சிறைப்பிடித்த குப்பை வாகனத்தை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம் என திட்டவட்டமாக கூறி, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் இனிவரும் காலங்களில் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டமாட்டோம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை விடுவிப்போம் என திட்டவட்டமாக கூறினர்.

    அதைத் தொடர்ந்து நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் நிர்வாகம் சார்பில் விஸ்வநாதபுரம் பகுதி மக்களிடம் வருத்தம் தெரிவித்து எழுத்து பூர்வமாக ஒரு கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில், வருங்காலங்களில் விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாறு மற்றும் கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படும் என கூறியிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை விடுவித்தனர். குப்பை கொட்டுவது தொடர்பாக நகராட்சி அதிகாரி வருத்தம் தெரிவித்து பொதுமக்களிடம் கடிதம் கொடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதனால் நகராட்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
    பண்ருட்டி அருகே பேக்கரி கடைக்காரர் சாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். பணம், நகைக்காக கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    புதுப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 55). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே தலையில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் இது பற்றி போலீசுக்கு உறவினர்கள் தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர்.

    இந்த நிலையில் பண்ருட்டியில் இட்லி வியாபாரம் செய்த சரசு(67) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் ராஜேந்திரன் மகன் விசுவநாதனை (33) என்பவரை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதாவது பணம், நகைக்காக பத்மநாபனையும் கொலை செய்ததாக கூறினார். அது பற்றி அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபனும் நண்பர்கள். நாங்கள் இருவரும் கடந்த 2.4.2019 அன்று விநாயகர் கோவில் அருகில் அமர்ந்து மது குடித்தோம். அப்போது பத்மநாபன் கையில் மோதிரம் அணிந்திருந்தார். சட்டைப்பையில் பணம் வைத்திருந்தார். அதை பறிக்க திட்டம் தீட்டினேன். பத்மநாபன் மதுபோதையில் இருந்தபோது கட்டையால் தலையில் ஓங்கி அடித்தேன். அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து நகைகையும், பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன். அவரது இறப்பு குறித்து யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் நானும், எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டேன். தற்போது போலிசில் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து விசுவநாதனை புதுப்பேட்டை போலீசார் கைது செய்து, மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் நேற்று பத்மநாபன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் கீதாஞ்சலி உடற்கூறு ஆய்வு செய்தார். பின்னர் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பேக்கரி கடைக்காரர் இறந்த வழக்கில் அவர் நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணை வந்து சேருகிறது. அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரி மூலம் பரங்கிப்பேட்டை கடைமடை வரை 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமும், பருவ காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து இருக்கும்.

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணை வந்து சேருகிறது. அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    கடந்த 2 வாரத்துக்கு முன்பு கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதோடு ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தததால் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது.

    இதன் காரணமாக ஏரி விரைவில் நிரம்பி விடும் என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். ஆனால், கீழணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் 127 கனஅடி நீர் மட்டும் வந்தது. அது இன்று 89 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 15.60 அடியாக உள்ளது. நீர்வரத்து குறைந்து விட்டதால் வீராணம் ஏரி நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    தற்போது ஆடி மாதம் பிறந்ததால் ஆடிபட்டம் தேடிவிதை என்பதற்கு ஏற்ப வீராணம் ஏரி பாசன பகுதிகளில் விவசாயிகள் உழவு பணியை தொடங்கினர். ஆனால், தற்போது நீர்வரத்து குறைந்து விட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஸ்.அழகிரி கூறினார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி நமது நாட்டின் எதிர்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகவியாளர்கள் என சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள், செல்போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. குறிப்பாக ராகுல்காந்தியின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டு ராணுவ ரகசியங்கள் கூட கண்காணிக்கப்பட்டு உள்ளது. இந்த சதி திட்டத்திற்கு மோடி அரசாங்கம் துணை போகியுள்ளது. இந்த விவகாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் தெரிந்து இருக்கிறது.

    கோப்புபடம்

    நம் வீட்டில் நடப்பது, அண்டை நாடுகளுக்கு தெரிகிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தன்னுடைய உளவு அமைப்புகளை கூட இந்திய அரசு நம்பவில்லை. அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை (அதாவது இன்று) சென்னையில் எனது தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம். அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இந்த போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூரில் விதியை பின்பற்றி மீன் வலைகளை சரி செய்ததால் 146 படகுகளில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி கூறினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் 269 விசைப்படகுகளிலும், 10 செவுல் படகுகளிலும், 3141 என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளிலும், என்ஜின் பொருத்தப்படாத 988 நாட்டு படகுகளிலும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சொத்திக்குப்பம், சோனாங்குப்பம் உள்பட 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இதற்கிடையில் மீனவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகளில் இழு வலைகளில் கண்ணி அளவு 40 மில்லி மீட்டருக்குள் இருப்பதாகவும், 240 குதிரை திறனை தாண்டி அதிக திறன் கொண்ட என்ஜின்களை பொருத்தி மீன்பிடிக்க செல்வதாக புகார் எழுந்தது.

    இது தவிர 5 நாட்டிகல் மைல் தொலைவுக்குள் மீன்பிடிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர், முடசல் ஓடை ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்களின் படகுகளை ஆய்வு செய்தனர். சென்னை, தர்மபுரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் உத்தரவின்பேரில் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

    அப்போது 269 விசைப்படகுகளில் பெரும்பாலான படகுகளில் விதிமீறல்கள் இருந்தது. இதையடுத்து 106 படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மீன் பிடி வலைகளை சரி செய்ய உத்தரவிட்டனர். சில படகுகளில் என்ஜினில் அதிக திறன் உருவாக்கும் கருவி (இன்டர் கூலர்) பொருத்தப்பட்டு இருந்ததை கண்டு அதை அகற்றினர். 240 குதிரை திறனுக்கு அதிகமாக என்ஜின் பொருத்தக்கூடாது என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    அதன்படி மீனவர்கள் மீன்பிடி வலைகளில் 40 மில்லி மீட்டருக்கு அதிகமாக கண்ணிகளை மாற்றி வந்தனர். மாற்றப்பட்ட வலைகளை காண்பித்தபிறகு தான் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதனால் மீனவர்கள் அவசர, அவசரமாக மீன்பிடி வலைகள், என்ஜின் ஆகியவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இது பற்றி மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயனிடம் கேட்ட போது, 269 விசைப்படகுகளையும் ஆய்வு செய்தோம். அதில் வலைகளில் கண்ணி அளவு 40 மில்லி மீட்டருக்கு குறைவாக இருந்த படகுகள் கண்டறியப்பட்டது. அதை சரி செய்ய அவகாசம் வழங்கினோம்.

    அதன்படி 146 படகுகளில் வலைகள் சரி செய்யப்பட்டன. 123 படகுகளில் வலைகள், என்ஜின் ஆகியவற்றை சரி செய்யவில்லை. இவர்கள் சரி செய்த பிறகு அதை காண்பிக்க வேண்டும். மற்றவர்கள் மீன்பிடிக்க செல்லலாம். அதுவும் 5 நாட்டிகல் மைல் தொலைவுக்கு மேல் சென்று தான் மீன்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம் என்றார்.

    இதனால் நேற்று மீன்பிடி வலைகளை சரி செய்த 146 விசைப்படகு மீனவர்கள் கடந்த 1 வாரத்திற்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    பண்ருட்டி அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி பஸ் நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பண்ருட்டி அவுலியா நகரைசேர்ந்த உசேன் (வயது 52). என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயி உள்பட 3 பேரிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). விவசாயி. இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகள் பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் எனது பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த உலகநாதன் (52) என்பவர் என்னிடம் வந்து பேசினார்.

    அப்போது அவர், நர்சிங் முடித்துள்ள உங்கள் மகளுக்கு 3 மாதத்தில் சுகாதாரத்துறையில் வேலை வாங்கி தருகிறேன். சென்னை வடபழனியை சேர்ந்த சசிப்பிரியா மூலம் பல பேருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என்று கூறினார். இதை நம்பிய நான், அவர் அழைத்ததன் பேரில் சென்னைக்கு சென்றேன். அங்கு உலகநாதன் என்னை சசிப்பிரியாவிடம் அறிமுகப்படுத்தினார்.

    பின்னர் 2 பேரும் எனது மகளுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி என்னிடம் வங்கி மூலமாகவும், நேரிடையாகவும் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் வாங்கினர். இதேபோல் பேர்பெரியாங்குப்பத்தை சேர்ந்த சிகாமணி மகனுக்கு மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளர் வேலை வாங்கி தருவதாக அவரிடம் ரூ.5 லட்சமும், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்த அரசு என்பவரின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சமும் வாங்கினர்.

    எங்கள் 3 பேரிடமும் மொத்தம் ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் வாங்கி இருந்தனர். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். பணத்தை திருப்பி கேட்ட போது, ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்து விட்டனர். ரூ.9 லட்சத்து 35 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல், மோசடி செய்து விட்டனர். ஆகவே உலகநாதன், சசிப்பிரியா ஆகிய 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

    இதையடுத்து இந்த புகார் மனுவை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்ரமன், அன்பழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து விவசாயி உள்பட 3 பேரிடமும் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக போலீசார் சென்னை சென்றனர். சைதாப்பேட்டையில் தங்கி இருந்த உலகநாதனை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான சசிப்பிரியாவை தேடி வருகின்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பக்தரை தாக்கிய ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழவீதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 75). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அப்போது அங்கிருந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் சிலர் காளிமுத்துவிடம் 10 மணிக்கு மேல் ஏன் கோவிலுக்கு வருகிறீர்கள் என கேட்டனர். இதனால் காளிமுத்துவுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன் பின்னர் காளிமுத்து அங்கிருந்து புறப்பட்டு கீழ சன்னதி வழியாக சென்று அங்குள்ள கடையில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் ஓமக்குளம் பகுதியை சேர்ந்த ராம்குமார் (30), மீதிகுடியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22), செங்காட்டான் தெருவை சேர்ந்த வெற்றி வேலன் (21), செல்வம் ஆகியோர் காளிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் காளிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமார், சூரியபிரகாஷ், வெற்றிவேலன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×