என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதியை சேர்ந்தவர் அறிவழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் பூங்கொடிக்கும், அவரது கணவர் அறிவழகனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பூங்கொடி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பூங்கொடி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சோழதரம் போலீசில் புகார் செய்யப்பட் டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் பூங்கொடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் சிதம்பரம் ஆர்.டி.ஓ. மதுபாலனும் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் முதுநகர் அருகே சிப்காட் பகுதியில் குடிகாடு என்ற இடத்தில் கடலூர் மாவட்ட மொத்த டாஸ்மாக் குடோன் அமைந்துள்ளது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம், இங்கு கொண்டு வந்து இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.
அதன் பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 148 சில்லரை மதுபான விற்பனை கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம். இங்கு மதுபான பெட்டிகளை லாரியில் இருந்து இறக்கவும், ஏற்றவும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர்.
கடலூர் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் மூலமாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் இப்பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சுப்புராயன் கண்டன உரையாற்றினார். தண்டபாணி, சுந்தர், மோகன், கோவிந்தன், சண்முகம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தால் டாஸ்மாக் குடோனில் மதுபானபாட்டில்கள் இறக்கும் மற்றும் ஏற்றும் பணிகள் பாதிப்படைந்தது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடி மாதம் என்றாலே பெண்களுக்கான பிரத்யேக மாதமாகும். இதில் ஆடி மாதம் 18ந்தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. இவ்விழா காவிரியின் கரையோர பகுதியில் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் காவிரி தாய்க்கு காணிக்கை தரும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற வேண்டியும் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலி பூஜை நடத்தி, வழிபடுவார்கள்.
புதுமண தம்பதிகளை பொறுத்தவரையில் திருமணத்தன்று சூடிய மாலைகளை பத்திரப்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று அதை ஆற்றில் விடுவது வழக்கம். இதன் மூலமாக நீரில் மாலை அடித்து செல்வது போன்று, புதுமண தம்பதிகளின் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்கள் மூடப்பட்டு இருந்தாலும் வெளியில் நின்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சாமி கும்பிட்டு வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து புதுமணத்தம்பதிகள் கடலூர் பகுதியில் காவிரி ஆறு இல்லாத காரணத்தினால் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு தனது கணவருடன் பெண்கள் சென்றனர்.
பின்னர் தங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மாலையை சூரிய பகவானை வணங்கி கடலில் விட்டனர். அப்போது ஒரு சில தம்பதிகள் மட்டும் சிறிது நேரத்திற்கு ஒரு முறை தங்கள் மாலைகளைப் தண்ணீரில் விட்டு சென்றதை காணமுடிந்தது.
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர்.
இது தவிர சென்னையில் இருந்து நாகை, தஞ்சை செல்லும் வாகன ஓட்டிகளும் புதுச்சேரி மாநிலம் வழியாக தான் வந்து செல்கிறார்கள். இதற்கிடையில் கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே புதுச்சேரி மாநில எல்லையில் அந்த மாநிலத்தை சேர்ந்த போலீசார் திரளாக நின்று கொண்டு கடலூர் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்குள் செல்லும் தமிழக வாகனங்களை நிறுத்தி கொரோனா வரி என்ற பெயரில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அபராத தொகை வசூல் செய்கின்றனர்.
அதாவது, இரு சக்கர வாகன ஓட்டிகள் முக கவசம், ஹெல்மெட் அணிந்து அனைத்து வாகன ஆவணங்களையும் காண்பித்தாலும் புதுச்சேரி மாநில போலீசார் அடாவடியாக கொரோனா வரி என்ற பெயரில் கட்டாய அபராத தொகை வசூல் செய்கின்றனர். அபராத தொகை செலுத்தினால் மட்டுமே புதுச்சேரி மாநிலத்திற்குள் அனுமதிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
அபராத தொகை வழங்காத வாகன ஓட்டிகளை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்காமல் அடாவடியாக பேசி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக வாகன ஓட்டிகள் பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுச்சேரி போலீசார் சின்ன கங்கணாங்குப்பம் அருகில் தமிழக வாகன பதிவு எண் கொண்ட வாகனங்களை நேற்று மதியம் வழிமறித்து கொரோனா வரி எனக்கூறி கட்டாய அபராத தொகையை வசூல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வாகன ஓட்டிகள் அனைவரும் ஒன்று திரண்டு புதுச்சேரி மாநில போலீசாரை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல், உரிய ஆவணம் இல்லாமல் செல்லும் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை விடுகிறீர்கள். ஏன் எங்களிடம் மட்டும் அபராத தொகை வசூல் செய்கிறீர்கள் என்று புதுச்சேரி மாநில போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஒரு சிலர் தங்கள் வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி, போலீசாரை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு, உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி போலீசார் தெரிவித்தனர்.
இதை கேட்ட தமிழக வாகன ஓட்டிகள் வருங்காலங்களில் இதுபோன்ற அபராதம் வசூலித்தால் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்துவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 18-வது வார்டு பகுதியில் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த பகுதிக்கு சீல் வைத்தனர். மேலும் அந்த பகுதியில் யாரும் செல்லாத வகையில் தென்னங்கீற்று கொண்டு தடுப்பு கட்டைகள் அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.
மேலும் தெருக்கள் முழுவதும் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் உடனடியாக இப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் ராஜா முத்தையா பல் மருத்துவமனை அருகே அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல் மருத்துவ கல்லூரியில் படிக்கும் பயிற்சி டாக்டர் ஒருவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அவருடன் படிக்கும் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டா்கள், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்தனா். அதன்படி பல் மருத்துவமனை அருகே இருந்த ராஜா முத்தையா செட்டியார் சிலையின் தலையில் கேக் வைத்து, வெட்டி பிறந்தநாளை கொண்டாடினா். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததாக பயிற்சி டாக்டர்கள் 8 பேரை பல் மருத்துவக்கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
இதற்கிடையே இடைநீக்கம் செய்யப்பட்ட பல் டாக்டர்கள் 8 பேரும், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ‘நாங்கள் செய்தது தவறு, எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி நேற்று கோவிலில் உள்ள உண்டில்கள் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 101 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றி உள்ள மணவாளநல்லூர், கோமங்கலம், முகுந்த நல்லூர், கொடுக்கூர், பெரம்பலூர், தொரவளூர், பரவலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
குறுவை அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறைவடைந்த நிலையில் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்லை குவியல் குவியலாக கொண்டு வந்து கோமங்கலம் கிராமத்தில் திறக்கப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர்.
கடந்த சில தினங்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீரானது தேங்கி நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்தது. மேலும் விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல் குவியல்களிலும் மழை நீர் புகுந்ததால் நெல் மணிகள் அனைத்தும் முளைத்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் விவசாயிகளின் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் அனைத்து நெல் மூட்டைகளும் நனைந்து முளைத்து விட்டது.
எனவே கோமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தலைவராக இருந்த மு.கருணாநிதி, தி.மு.க. ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததும், பொதுமக்களுக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்தன. பின்னர் அவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக, செம்மண்டலத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதற்கிடையே அந்த தொலைக்காட்சி பெட்டிகள் வினியோகம் செய்யப்படுவதற்கு முன்பாக, 2011-2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இதனால் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவில்லை. மாறாக அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தது. இதனால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல், சமுதாய நலக்கூடத்திலேயே முடங்கியது.
இதற்கிடையே 2016-2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றதால், தொலைக்காட்சி பெட்டிகள் தொடர்ந்து அந்த சமுதாய நலக்கூடத்திலேயே வைக்கப்பட்டிருந்தன. மேலும் சமுதாய கூடத்தின் ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் திறக்கப்படாத வகையில் தகரத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் 2 ஆயிரம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், சுமார் 10 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்காக கொடுக்கப்படாமல், சமுதாய நலக்கூடத்திலேயே முடங்கி கிடக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சமுதாய நலக்கூடத்தை சுற்றியுள்ள இப்பகுதியில் வசிக்கும் 150 குடும்பத்தினருக்காக கடந்த 2004-ம் ஆண்டு இந்த சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்குவதற்காக தி.மு.க. ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொண்டு வந்து இந்த சமுதாய நலக்கூடத்தில் வைக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் எங்களுக்கு வழங்கப்படாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலக்கூடத்திலேயே கிடந்து வீணாகி வருகிறது. மேலும் சமுதாய நலக்கூட கட்டிடமும சேதமடைந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக சமுதாய நலக்கூட இருட்டறையில் 2 ஆயிரம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் யாருடைய கண்களுக்கும் விருந்தளிக்காமல் வீணாகி வருவதால், தொலைக்காட்சி பெட்டி வழங்காவிட்டாலும், அதனை அகற்றி விட்டு, சேதமடைந்த சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும், அங்கு கிடக்கும் தொலைக்காட்சி பெட்டியில் நல்ல நிலையில் இருப்பதை தேர்ந்தெடுத்து, பள்ளிகள், விடுதிகள் உள்ள அரசு கட்டிடங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தி.மு.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு செம்மண்டலம் பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக, 2 ஆயிரம் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்தன. அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அந்த தொலைக்காட்சி பெட்டிகள் வினியோகம் செய்யப்படவில்லை.
அதன்பிறகு கடந்த 10 ஆண்டுளாக அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்ததால், அவை குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் அனைத்தும் பழுதாகி, பயன்படுத்த முடியாத நிலையில் தான் தற்போது உள்ளது. இதனால் விரைவில் வேறு ஒரு கட்டிடத்திற்கு தொலைக்காட்சி பெட்டிகளை இடமாற்றம் செய்துவிட்டு, சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடலூர்:
கடலூர் செந்தாமரைநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் நகர தொழிற் சங்க தலைவராக உள்ளார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் சுரேசின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கொண்டு வந்த 2 பெட்ரோல் குண்டுகளை சுரேஷ் வீட்டின் வாசலில் வீசினர். அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இந்த சத்தம் கேட்டு சுரேஷ் வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வெளியே வந்து பார்த்தனர். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சுரேஷின் வீட்டின் முன்பு திரண்டனர்.
சுரேஷின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார்செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
தடயவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கபட்டனர். சுரேஷின் வீட்டின் முன்பு பதிவாகி இருந்த கைரேகை, தடயங்களை சேகரித்தனர்.
மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கபட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை சுரேஷ் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக சுரேசின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






