என் மலர்tooltip icon

    கடலூர்

    நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு காதலன் திடீரென மறுத்ததால், விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு தாயாருடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ஒன்றியத்துக்குட்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் 19 வயதுடைய வாலிபர். இவரும் அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்து வரும் 19 வயதுடைய மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவ்வப்போது திருமண ஆசை வார்த்தை கூறி, மாணவியுடன் வாலிபர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி கர்ப்பமான தகவலை காதலனிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறி கர்ப்பம் கலைவதற்கான மாத்திரைகளை மாணவிக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவிக்கு கர்ப்பம் கலைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர், வாலிபரின் உறவினர்களிடம் சென்று கேட்டபோது அவர்கள் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காதலர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அந்த வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவி, நேற்று தனது தாயாருடன், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கதறி அழுதார்.

    தொடர்ந்து அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் விரைந்து வந்து அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரையும், அவருடைய தாயாரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 5 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து இன்று சாம்பல் செல்லும் லாரி மோதி மேலக்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்த் என்பவர் உயிரிழந்தார். 

    இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய அந்த லாரியை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மொத்தம் 5 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், 30-க்கும் மேற்பட்ட லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   

    சிறுமியின் தாயார் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் புஷ்பராஜ் மீது புகார் செய்தார்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருதாமேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் புஷ்பராஜ் (வயது 23) கூலி தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று மதுபோதையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

    மேலும் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதார். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் புஷ்பராஜ் மீது புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வாலிபர் புஷ்பராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர்.

    கைதான அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சி.கிரனூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பினால், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்மணிகளை குவியல் குவியலாகக் குவித்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழையால், நெல்மணிகள் தண்ணீரில் நனைந்து விட்டதாகவும், நேற்று இரவு பெய்த கன மழையால், சுமார் 50,000 மூட்டை, கொள்முதல் செய்யும் அளவிலான நெல்மணிகள் மழையில் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம், விவசாயிகள் 10 நாட்களாக முறையிட்டும், நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பதற்கான, எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், மூட்டை ஒன்றுக்கு 50 முதல் 55 ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சமாக கேட்பதாகவும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு, பின்னர் 45 ரூபாய் மூட்டைக்கு தருவதாக விவசாயிகள் சம்மதித்த பின்னரும் அதிகாரிகள் திறக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கனமழை பெய்வதால், நெல்மணிகள் ஈரப்பதம் அடைவதை தவிர்ப்பதற்காக, வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபடும் ஆட்களுக்கு கூலி, நெல்லை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் தார் பாயின் வாடகை கூலி, சாப்பாடு மற்றும் இதர செலவுகள் என நாள்தோறும் ஒவ்வொரு விவசாயிகளும் 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

    எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காவிட்டால் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
    கொரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே, மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுரை கூறினர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

    மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க வசதியாக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைதோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்றாலும், ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து, தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அந்த புகார் பெட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர்.

    அந்த வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைத்து, மனு கொடுக்க வந்த மக்களை போலீசார் வழிமறித்தனர். பின்னர் கொரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே, மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுரை கூறினர்.

    இதையடுத்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அச்சமடைந்து, மனு அளிக்காமலே திரும்பி சென்றதையும் காண முடிந்தது.
    கடலூரில், மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க அமைதிக்குழு அமைக்கப்படும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவர்களிடைய தொழில் ரீதியான பிரச்சினை இருந்து வந்தது. இதை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மீனவர்களின் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். அதன்படி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவர்கள் முக்கிய பிரதிநிதிகள் தலா 21 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தனித்தனி அறைகளில் அதிகாரிகள் அமர வைத்தனர். முதலில் சோனாங்குப்பம் மீனவர்களிடம் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் பேசி, குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் இருந்த அறைக்கு சென்று, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

    அதன்பிறகு 2 மீனவ கிராம முக்கியஸ்தர்களையும் ஒரே அறையில் அமர வைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை கலெக்டர் நடத்தினார். அப்போது சோனாங்குப்பம் மீனவ பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் பங்கேற்றனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத் சிங், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் தொழில் சார்ந்த பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தனர். கூட்டம் முடிந்ததும் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவ கிராமங்களுக்கு இடையே தொழில் ரீதியான பிரச்சினை உள்ளது. அதாவது துறைமுகம், மீன்பிடி இறங்கு தளத்தில் மீன் இறக்கும் போது, விற்பனை செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து 2 பேரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்ன அடிப்படையில் 2 மீனவ கிராம பிரதிநிதிகளும் ஒரு குழுவை அமைத்து கொடுத்தால், பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம் என்றார்கள்.

    அதன்படி மீனவ பிரதிநிதிகள், வருவாய்த்துறை, போலீஸ், மீன்வளத்துறை ஆகிய அலுவலர்கள் அடங்கிய அமைதிக்குழு ஏற்படுத்தப்படும். மீனவர்கள் தங்கள் தொழில் சார்ந்த பிரச்சினைகளை இந்த குழுவில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இது முடிவு அல்ல. தொடர்ந்து இது போன்ற கூட்டங்களை நடத்தி, மீனவர்கள் சுமுகமாக வாழ வலியுறுத்தப்பட்டது. இதை 2 தரப்பினரும் ஏற்றுக் கொண்டார்கள். விரைவில் அமைதிக்குழு அமைக்கப்படும். இந்த அமைதிக்கூட்டத்தில் சுருக்குமடி வலை பிரச்சினை பற்றி பேசவில்லை. சட்டத்துக்குட்பட்டு, அரசாணையில் என்ன சொல்லப்பட்டு உள்ளதோ, அந்த வலையை தான் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறுகையில், மீனவர்களிடம் அசாதாரண சூழ்நிலை கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதிகாரிகளின் நம்பிக்கையையும் சம்பாதிக்க வேண்டும். சக மீனவர்களின் நம்பிக்கையையும் சம்பாதிக்க வேண்டும். மீனவர்கள் பின்நோக்கி போகாமல் முன்னோக்கி கடந்து வர வேண்டும். அமைதி இல்லாததால் அதை பேச முடியவில்லை. தற்போது அந்த அமைதிக்குழுவை ஏற்படுத்த இருக்கிறோம். இதில் யார், யார் இடம் பெறுவார்கள் என்று பின்னர் அறிவிக்கப்படும். சட்டத்துக்குட்பட்ட வலைகளை தான் பயன்படுத்த வேண்டும். வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம். இந்த கூட்டம் ஒரு நல்ல ஆரம்பம். ஏற்கனவே மீனவர்கள் செய்த தவறுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வாபஸ் பெற முடியாது என்றார்.

    கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய ஊராட்சிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிசு வழங்கினார்.
    கடலூர்:

    தமிழகத்தில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் பல்வேறு துறைகளின் மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணிகள், துண்டு பிரசுரம் வழங்குதல், சைக்கிள் பேரணி, கலை நிகழ்ச்சிகள், சோப்பினால் கைகளை சுத்தம் செய்யும் முறை, உறுதிமொழி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோலம் வரைதல், ஓவியம் வரைதல், சொற்றொடர் உருவாக்குதல், விழிப்புணர்வு மொழி வடிவம் உருவாக்குதல், வீடியோ குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    அந்த வகையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கோலம் வரைதல், ஓவியம் வரைதல், சொற்றொடர் உருவாக்குதல், விழிப்புணர்வு மொழி வடிவம் உருவாக்குதல், வீடியோ குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு துறைகளின் மூலம் நடத்தப்பட்டது. இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    மேலும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய கடலூர், நடுவீரப்பட்டு, பரங்கிப்பேட்டை வட்டம் டி.எஸ்.பேட்டை, காட்டுமன்னார்கோவில் வட்டம் வீரனந்தபுரம் ஆகிய ஊராட்சிகளை பாராட்டி, பரிசு வழங்கினார். பின்னர் கலெக்டர் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் வளர்ச்சி திட்ட இயக்குனர் பவன்குமார் கிரியப்பனவா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டதை கண்டித்து நிலக்கரி லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கொண்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அந்த வகையில் சுரங்கம் 1 ஏவில் இருந்து வெளியேற்றப்படும் நீரை வடலூர் அருகே உள்ள பார்வதிபுரம், கருங்குழி வடக்குப்பகுதி மற்றும் நயினார்குப்பம், மருவாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் தற்போது சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் குறுவை நெல் சாகுபடி செய்து இருந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், பயிர்கள் கருக தொடங்கி விட்டது.

    இதையடுத்து விவசாயிகள், என்.எல்.சி. நிறுவனத்திடம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை வழக்கம் போல் வழங்கிட கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரையில் வழங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பார்வதிபுரம் பகுதி விவசாயிகள், என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை சுரங்கப்பகுதியில் தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார், என்.எல்.சி. அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, அதிகாரிகள் தரப்பில் 3 நாட்களில் சுரங்கத்தில் இருந்து செங்கால் ஓடை வழியாக மீண்டும் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    புவனகிரியில் கொள்ளைமுயற்சியில் ஈடுபட திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூர் சுடுகாடு அருகே 5 பேர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அதில், கிள்ளை தளபதி நகரை சேர்ந்த சரவணன் மகன் லட்சுமணன் (வயது 23), கீழமணக்குடி குமாரசாமி மகன் வெங்கடேசன்(44), கீரப்பாளையம் ஆனந்தன் மகன் விக்னேஷ்(26), புவனகிரி லட்சுமிகாந்தன் மகன் மாரிமுத்து(24), முட்லூர் காசிலிங்கம் மகன் மூர்த்தி(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 5 பேரும் சேர்ந்து புவனகிரி பகுதியில் கூட்டுக் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றது விசாரணையில் வெளியானது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மத்திய சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பிளேடு, கஞ்சா, பீடி, சிகரெட் ஆகிய பொருட்களை சோதனை செய்து சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை கடலூர் மத்திய சிறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சோதனையில் உள்ளூர் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சென்று கைதி அறைகள் மற்றும் கைதிகளை செய்தனர்.

    இந்த திடீர் சோதனை காலை 6 மணி முதல் நடந்தது.

    சோதனையில் கைதிகளிடம் இருந்து தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பான்மசாலா மற்றும் ஆயுதங்கள் கிடைக்கின்றதா? என்பது சோதனை முடிவில் தெரியவரும் இதுமட்டுமன்றி அல்-உம்மா தீவிரவாதிகள் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதா ? அவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனையும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், சிறை அலுவலர் பாலு உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் மத்திய சிறைச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் மாத பூச ஜோதி தரிசனத்தை வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இந்த சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தையொட்டி ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்திற்கான ஜோதி தரிசனம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆனால் இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசாணை மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படியும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும், பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, 7-ந்தேதி(அதாவது நாளை) நடைபெறும், மாத பூச ஜோதி தரிசனத்தின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை, மாத பூச ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனல் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற தளத்தில் நேரலையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
    வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது குறைவாக உள்ளதால் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. பாசனத்திற்காக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் 15.60 கன அடியாக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 1 வாரமாக கீழணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை. ஆனால் தற்போது கீழணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரிக்கு 85 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது குறைவாக உள்ளதால் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஏரியின் நீர்மட்டம் 40 கன அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×