search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையில் நனைந்த நெல்மணிகளை படத்தில் காணலாம்.
    X
    மழையில் நனைந்த நெல்மணிகளை படத்தில் காணலாம்.

    விருத்தாசலம் அருகே பலத்த மழை- 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசம்

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சி.கிரனூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிப்பினால், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்மணிகளை குவியல் குவியலாகக் குவித்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழையால், நெல்மணிகள் தண்ணீரில் நனைந்து விட்டதாகவும், நேற்று இரவு பெய்த கன மழையால், சுமார் 50,000 மூட்டை, கொள்முதல் செய்யும் அளவிலான நெல்மணிகள் மழையில் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம், விவசாயிகள் 10 நாட்களாக முறையிட்டும், நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பதற்கான, எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், மூட்டை ஒன்றுக்கு 50 முதல் 55 ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சமாக கேட்பதாகவும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு, பின்னர் 45 ரூபாய் மூட்டைக்கு தருவதாக விவசாயிகள் சம்மதித்த பின்னரும் அதிகாரிகள் திறக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கனமழை பெய்வதால், நெல்மணிகள் ஈரப்பதம் அடைவதை தவிர்ப்பதற்காக, வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபடும் ஆட்களுக்கு கூலி, நெல்லை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் தார் பாயின் வாடகை கூலி, சாப்பாடு மற்றும் இதர செலவுகள் என நாள்தோறும் ஒவ்வொரு விவசாயிகளும் 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

    எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காவிட்டால் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×