search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் மழை"

    • கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் சேதமான விளைநிலங்களை நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வெள்ளப்பாதிப்பு தடுப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    கடலூர்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 8-ந்தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக சிதம்பரம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கனமழை நீடித்தது. சிதம்பரத்தில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீ. மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 8-ந்தேதி முதல் 28 மணி நேரத்தில் 33.25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதன் பின்னர் மறுநாள் ஓரளவு மழை குறைந்தது.

    மறுநாள் அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அப்போது விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் கடலூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடானது. கடலூர் நகர் பகுதியான பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், குண்டுஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

    கடலூர் சிப்காட் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் உள்ளதால் தற்போதும் அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    சிதம்பரம் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் 23,118 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. 242 வீடுகள் மழைக்கு இடிந்தது.

    மேலும் கனமழைக்கு 30 பசுமாடுகளும், 37 ஆடுகள் உள்ளிட்ட 108 கால்நடைகள் பலியானது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தண்ணீரால் சூழப்பட்ட நெற்பயிர் 1 ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வரை பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    எனவே நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கடலூர், சீர்காழி பகுதிகளில் வெள்ள சேதங்களை இன்று காலை (14-ந் தேதி) ஆய்வு செய்வதாக அறிவித்தார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புதுவையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு இரவு தங்கினார்.

    இன்று காலை புதுவையில் இருந்து கார் மூலம் கடலூர் புறப்பட்டார். கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் சேதமான விளைநிலங்களை நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அளவிலான வெள்ளப்பாதிப்பு தடுப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெள்ள பாதிப்பை விளக்கி கூறினார்.

    அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு, சி.வே.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் வடிகால் வசதி சீரமைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகை பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரால் சூழப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி சார்பில் வெள்ளபாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்ட எல்லையில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

    ×