என் மலர்
செய்திகள்

கடலூரில் மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க அமைதிக்குழு - கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
கடலூரில் மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க அமைதிக்குழு - கலெக்டர் தகவல்
கடலூரில், மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க அமைதிக்குழு அமைக்கப்படும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவர்களிடைய தொழில் ரீதியான பிரச்சினை இருந்து வந்தது. இதை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மீனவர்களின் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். அதன்படி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவர்கள் முக்கிய பிரதிநிதிகள் தலா 21 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தனித்தனி அறைகளில் அதிகாரிகள் அமர வைத்தனர். முதலில் சோனாங்குப்பம் மீனவர்களிடம் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் பேசி, குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் இருந்த அறைக்கு சென்று, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அதன்பிறகு 2 மீனவ கிராம முக்கியஸ்தர்களையும் ஒரே அறையில் அமர வைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை கலெக்டர் நடத்தினார். அப்போது சோனாங்குப்பம் மீனவ பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் பங்கேற்றனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத் சிங், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் தொழில் சார்ந்த பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தனர். கூட்டம் முடிந்ததும் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவ கிராமங்களுக்கு இடையே தொழில் ரீதியான பிரச்சினை உள்ளது. அதாவது துறைமுகம், மீன்பிடி இறங்கு தளத்தில் மீன் இறக்கும் போது, விற்பனை செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து 2 பேரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்ன அடிப்படையில் 2 மீனவ கிராம பிரதிநிதிகளும் ஒரு குழுவை அமைத்து கொடுத்தால், பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம் என்றார்கள்.
அதன்படி மீனவ பிரதிநிதிகள், வருவாய்த்துறை, போலீஸ், மீன்வளத்துறை ஆகிய அலுவலர்கள் அடங்கிய அமைதிக்குழு ஏற்படுத்தப்படும். மீனவர்கள் தங்கள் தொழில் சார்ந்த பிரச்சினைகளை இந்த குழுவில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இது முடிவு அல்ல. தொடர்ந்து இது போன்ற கூட்டங்களை நடத்தி, மீனவர்கள் சுமுகமாக வாழ வலியுறுத்தப்பட்டது. இதை 2 தரப்பினரும் ஏற்றுக் கொண்டார்கள். விரைவில் அமைதிக்குழு அமைக்கப்படும். இந்த அமைதிக்கூட்டத்தில் சுருக்குமடி வலை பிரச்சினை பற்றி பேசவில்லை. சட்டத்துக்குட்பட்டு, அரசாணையில் என்ன சொல்லப்பட்டு உள்ளதோ, அந்த வலையை தான் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறுகையில், மீனவர்களிடம் அசாதாரண சூழ்நிலை கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதிகாரிகளின் நம்பிக்கையையும் சம்பாதிக்க வேண்டும். சக மீனவர்களின் நம்பிக்கையையும் சம்பாதிக்க வேண்டும். மீனவர்கள் பின்நோக்கி போகாமல் முன்னோக்கி கடந்து வர வேண்டும். அமைதி இல்லாததால் அதை பேச முடியவில்லை. தற்போது அந்த அமைதிக்குழுவை ஏற்படுத்த இருக்கிறோம். இதில் யார், யார் இடம் பெறுவார்கள் என்று பின்னர் அறிவிக்கப்படும். சட்டத்துக்குட்பட்ட வலைகளை தான் பயன்படுத்த வேண்டும். வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம். இந்த கூட்டம் ஒரு நல்ல ஆரம்பம். ஏற்கனவே மீனவர்கள் செய்த தவறுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வாபஸ் பெற முடியாது என்றார்.
Next Story






