search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    நீர்வரத்து குறைந்தது- வீராணம் ஏரி நிரம்புவதில் சிக்கல்

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணை வந்து சேருகிறது. அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரி மூலம் பரங்கிப்பேட்டை கடைமடை வரை 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமும், பருவ காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து இருக்கும்.

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணை வந்து சேருகிறது. அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    கடந்த 2 வாரத்துக்கு முன்பு கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதோடு ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தததால் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது.

    இதன் காரணமாக ஏரி விரைவில் நிரம்பி விடும் என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். ஆனால், கீழணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் 127 கனஅடி நீர் மட்டும் வந்தது. அது இன்று 89 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 15.60 அடியாக உள்ளது. நீர்வரத்து குறைந்து விட்டதால் வீராணம் ஏரி நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    தற்போது ஆடி மாதம் பிறந்ததால் ஆடிபட்டம் தேடிவிதை என்பதற்கு ஏற்ப வீராணம் ஏரி பாசன பகுதிகளில் விவசாயிகள் உழவு பணியை தொடங்கினர். ஆனால், தற்போது நீர்வரத்து குறைந்து விட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×