search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டபோது எடுத்த படம்.
    X
    பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டபோது எடுத்த படம்.

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் 23 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 தேர், 5 கொடிமரம், 5 கோபுரங்கள், 5 நந்திகள் என அனைத்தும் 5 ஆக அமையப்பெற்றுள்ளது தனி சிறப்பாகும். இந்த கோவிலை சுற்றிலும் உள்ள பகுதியில் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். திருவிழா காலங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் போது இடவசதி இன்றி பக்தர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனால் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 1993-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கோவிலில் இருந்த தேர்கள் எரிந்து சாம்பலானது. இதனால் தேர் நிறுத்துமிடம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றவில்லை. மேலும் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து கோவில் அருகில் உள்ள 32 கடைகளை அகற்றுவதற்கு கோவில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணைய நீதிமன்றம் மற்றும் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இந்த வழக்கின் முடிவில் 32 கடைகளையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விருத்த கிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 32 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக நேற்று இந்து சமய அறநிலையத்துறை கடலூர் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன் ஆகியோர் 2 பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு வந்தனர். இதில் 9 கடைகளை அகற்றக்கூடாது என அதன் உரிமையாளர்கள் மேல் முறையீடு செய்ததால், அவர்களின் கடைகளை தவிர்த்து மீதமுள்ள 23 ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் இடிக்க தொடங்கினா். இன்றும் (வெள்ளிக்கிழமை) ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×