என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 28,994 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 994 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரையுள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு முதல் தவணை மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இப்பணியானது கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்புற, கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர தடுப்பூசியை அதிக நபர்களுக்கு செலுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களில் 28 ஆயிரத்து 994 பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்து 2-வது தவணை மட்டும் போடப்படுகிறது.
எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






