search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1000 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் ஆகியோர் அறிவுறுத்தினர்.
    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்துவது, என்.எல்.சி. மருத்துவமனை செயல்பாடுகள் தொடர்பாக என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் தலைமை தாங்கி தாங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, என்.எல்.சி. தலைவர் ராகேஷ் குமார், சுரங்கங்கள் இயக்குனர் பிரபாகர் சவுகி, நிர்வாக இயக்குனர் சுரேஷ்சந்திர சுமன், தலைமை பொது மேலாளர் லட்சுமி காந்தராவ் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தனது சமூக பொறுப்புணர்வு நிதியை கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.மேலும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது :-

    என்.எல்.சி. தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. அதைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று என்.எல்.சி. அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினோம். கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். அதிகமான உயிரிழப்பு அங்கு ஏற்படுகிறது. அதை தடுப்பதற்காக அரசு விதிகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும்.

    ஒரு தெருவில் 3 அல்லது 4 பேர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதியை தனிமைப்படுத்தும் பகுதியாக அறிவிக்க வேண்டும். இதை அங்குள்ள நில எடுப்பு தாசில்தார்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதலாக 1000 படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள், செறிவூட்டிகள், சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள அனைத்து மருத்துவ உபகரணங்களும், மருந்துகள், டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் இயங்கக்கூடிய தற்காலிக மருத்துவமனையை துரிதமாக அமைத்து அப்பகுதியில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

    என்.எல்.சி.யில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். தற்போது 100 சதவீத பணியாளர்களுடன் நிர்வாகம் இயங்கி வருகிறது. இதை மாற்றி அரசு அறிவித்தபடி 50 சதவீத பணியாளர்களை சுழற்சி முறையில் பணி அமர்த்த வேண்டும்.

    கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கூடுதல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது தொடர்பான குழுவை அரசு அமைத்துள்ளது. இதை மாவட்ட குழுவும் கண்காணிக்கும்.

    கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 160 படுக்கை வசதிகள் தயாராகி வருகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர்.
    Next Story
    ×