என் மலர்
கடலூர்
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல் அருங்குணம் சுடுகாடு பகுதியில் பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 20) என்பவர் சாராயம் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது, இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராயம், 25 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று உண்டியல் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் தலைமையில் ஆய்வாளர் ஜெயசித்ரா முன்னிலையில் ஆன்மீக தொண்டர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 211 வருவாய் கிடைத்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து கூட்டுறவு மருந்து கடையை கடலூர் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது மருந்துகள் மற்றும் மாத்திரைகள் விற்பனை விபரத்தை ஆய்வு செய்து பொது மக்களின் தேவைக்கேற்ப மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்ய விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் ஏழை எளிய மக்கள், விலைவாசி உயர்விலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கப்படும் மருந்துகளின் விற்பனை விலையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது. மருந்துகளை வாங்கும் நுகர்வோருக்கு கணினி மூலம் ரசீது வழங்கப்படுகிறது. வயதானவர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகிய வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்று விநியோகம் செய்யும் வசதி கூட்டுறவு மருந்தகங்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என தெரிவித்தார். ஆய்வின்போது விருதாச்சலம் களஅலுவலர் சுரேஷ், சங்க செயலாளர் ஜெய்சன் உடனிருந்தார்.
கடலூர்:
கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பல்வேறு குற்றத்தில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலை வளாகத்தில் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சிறை அலுவலக துணை சிறை அலுவலர் சம்பத் மற்றும் போலீசார் சிறை வளாகத்தில் உள்ள வெளி சிறை பகுதியில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு செல்போன் மற்றும் 3 பேட்டரிகள் இருந்தது.
இதனைத்தொடர்ந்து பொருட்களை பறிமுதல் செய்து பயன்படுத்திய நபர்கள் யார்? இதற்கு யார் யார் உடந்தை? என்கிற பல்வேறு கோணத்தில் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் துணை சிறைத் துறை அலுவலர் சம்பத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம்வ.உ.சி நகரில் பிரசன்ன மாரியம்மன் கோவில் உள்ளது.
நேற்று இரவு கோவில் நிர்வாகி சுரேஷ்குமார் வழக்கம் போல இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் .அப்போது இதை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம ஆசாமி அந்த உண்டியலை உடைத்து பணம் நகை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார்.
இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வழியாக சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் போலீஸாரை கண்டவுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதனால் உண்டியலில் இருந்த நகை பணம் தப்பியது.
இதுபற்றி கோவில் தர்மகர்த்தா சுரேஷ்குமார் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:
தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசியநெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த பணி கிடப்பில் கிடந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் மரண சாலையாக மாறியுள்ள பண்ருட்டி சென்னை சாலை,பண்ருட்டி கும்பகோணம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது. வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து போக்குவரத்தை சீரமைத்தனர்.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவரது மனைவி சேர்ந்து வாழாமல் இருந்து வந்ததால் கடந்த சில வருடங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். எனவே முருகன் கடலூர் அருகே எஸ்.புதூர் சேர்ந்த உறவினர் அருள் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்குள்ளவர்களிடம் வழக்கம்போல் முருகன் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் திடீரென்று மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து முருகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியானது.
இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை அணுகி ஏற்கனவே தாங்கள் வைத்த நிபந்தனைகளின்படி ‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட கூடாது என்று மனு கொடுத்தனர்.
இன்று சூர்யாவின் புதிய படம் வெளியாகும் நிலையில் பா.ம.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. இதனால் அந்த படம் வெளியாகும் தியேட்டர்களில் இன்று அதிகாலை முதலே போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட்டன.
கடலூரில் கிருஷ்ணாலயா தியேட்டரில் இந்த படம் வெளியானது. காலை 7 மணிக்கு ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர் முன்பாக போலீசார் அதிகாலை முதலே குவிக்கப்பட்டிருந்தனர்.
தியேட்டரின் முன்பக்க கதவு மூடப்பட்டு இருந்தது. காட்சிக்கான கூப்பன், டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் சோதனை செய்த பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம் திரையிடப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் வன்னியர் பாளையத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள நிலையில் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் பெருமளவில் குறைந்து வரும் நிலையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தற்போது இந்த பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடும் மைதானம் முழுவதும் முட்புதர்களாக காட்சி அளித்து வருகின்றது. இதன் காரணமாக மாணவர்கள் சரியான முறையில் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இங்கு உள்ள விளையாட்டு பொருட்களில் மாணவர்கள் விளையாட செல்ல வேண்டுமானால் முட்புதர்களை கடந்து செல்லக் கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏதேனும் விஷப்பூச்சிகள் அல்லது பாம்பு போன்றவை இருந்தால் மாணவர்களுக்கு தெரியாமல், அதன்மீது படும்போது ஏதேனும் கடித்து விடுமோ? என்ற அச்சத்தில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தவித்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக முட்புதர்களை அகற்றி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வந்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மங்கலம்பேட்டை:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தம் நெறிஞ்சிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 45).
இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, அரங்கூர், காமராஜ் தெருவை சேர்ந்த பிரகாஷ் (22) என்பவர் குடியிருந்து, வீடு கட்டும் வேலையை கவனித்து வந்தார்.
நேற்று இரவு 8 மணி அளவில் அவரது வீட்டில் பிரகாஷ் மனைவி திவ்யா, அவரது குழந்தை உள்பட யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
இதில், பிரகாஷ் வீட்டில் இருந்த ரொக்கப் பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
இதுகுறித்து, தகவல் அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஸ்ரீரங்கம், முகமது புன்யாமின், கார்த்திக் ராஜா, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






