என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் வன்னியர் பாளையத்தில் முட்புதராக காட்சி அளிக்கும் அரசு தொடக்க பள்ளி
கடலூர்:
கடலூர் வன்னியர் பாளையத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள நிலையில் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் பெருமளவில் குறைந்து வரும் நிலையில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தற்போது இந்த பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடும் மைதானம் முழுவதும் முட்புதர்களாக காட்சி அளித்து வருகின்றது. இதன் காரணமாக மாணவர்கள் சரியான முறையில் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இங்கு உள்ள விளையாட்டு பொருட்களில் மாணவர்கள் விளையாட செல்ல வேண்டுமானால் முட்புதர்களை கடந்து செல்லக் கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏதேனும் விஷப்பூச்சிகள் அல்லது பாம்பு போன்றவை இருந்தால் மாணவர்களுக்கு தெரியாமல், அதன்மீது படும்போது ஏதேனும் கடித்து விடுமோ? என்ற அச்சத்தில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தவித்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக முட்புதர்களை அகற்றி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வந்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






