என் மலர்
கடலூர்
சொத்து வரி உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து கடலூரில் அ.தி.மு.க சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.
அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட கழக செயலாளர் பாண்டியன் எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் குமார், முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மீனவர் அணி தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட இணை செயலாளர் உமா மகேஸ்வரி பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் மாதவன், வர்த்தக அணி செயலாளர் வரதராஜன், மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஜி.எம்.வினோத், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, தகவல் தொழில் நுட்ப அணி வெங்கட்ராமன், மாவட்ட அ.தி.மு.க. இணைசெயலாளர் பத்திரக்கோட்டை கல்யாணசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினியர் கலையரசன், அ.தி.மு.க. தகவல்தொழில் நுட்ப பிரிவு கோவை மண்டல துணைத்தலைவர் சத்திரம் எஸ்.வி.ராதாகிருஷ்ணன், பண்ருட்டிநகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர் மோகன், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன், அண்ணா தொழிற் சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். இதில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழமாகும். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும்.
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலாப்பழம் தான். அது என்றும் தனி சுவை உடையது. இப்பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் ஆகும்.
ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது.
ஆங்காங்கே உள்ள தோட்டங்களில் காய்த்து தொங்கும் இந்த பலாப்பழங்களை சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் பார்த்து பரவசமடைகின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும். அதன்படி இந்த சீசன் காலத்தில்தான் பலாப்பழம் அதிகமாக விற்பனையாகும்.
இந்த ஆண்டுக்கான பலாப்பழ சீசன் கடந்த கார்த்திகை மார்கழி மாதங்களில் மழை காரணமாக இல்லை அது இந்த மாதம் தொடங்கி உள்ளது. ஒரு பலாப்பழம் 150 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவால் பலாப்பழ விற்பனை கடந்த ஆண்டு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பலா மண்டி அதிபர் நடுப்பிள்ளையார்குப்பம் பாலமுருகன், சுரேஷ் ஆகியோர் கூறுகையில், பண்ருட்டியில் 3 கிலோமீட்டர் வரை 100-க்கும் அதிகமான பலா மண்டி உள்ளன. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் பண்ருட்டியிலிருந்து பலாப்பழங்கள் அனுப்பப்படுகிறது என்றனர்.
கடலூர் தாலுக்கா தொண்டமாநத்தம் நாயுடு தெரு ரகு. அவரது மகள் ரம்யா (வயது19), இவர் பண்ருட்டி அருகே வேககொல்லை பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
இவர் கடந்த 4-ந்தேதிகாணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறு இவரது பாட்டி காடாம்புலியூர் போலீசில்புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி சென்னை சாலை ரெயில்வே மேம்பாலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக ரெயில்கேட் பராமரிப்பு பணிக்கான வேலை நடந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொது மக்களும், வியபாரிகள் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தணிகைச் செல்வம், மாநில வர்த்தகர் அணி பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ரெயில்வே கேட்டை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் கிளை சிறை உள்ளது. இங்கு ஏட்டாக ராஜவேல், வார்டனாக சதீஷ்குமார் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று- சதீஷ்குமார் பணியில் இருந்தபோது கிளை சிறையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் அங்கு வந்தார். அப்போது ஏட்டு ராஜகோபால் வார்டன் சதீஷ்குமாரிடம் வந்து இருப்பவர் எனக்கு தெரிந்தவர் தான். எனவே அவரை அனுமதிக்கும்படி கூறினார்.
ஆனால் அதற்கு சதீஷ்குமார் மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.
ஆத்திரம் அடைந்த ராஜகோபால் அங்கு கிடந்த தடியால் சதீஷ்குமாரை தாக்கினார். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சதீஷ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து உள்ளனர். சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் 2 பேரை வரவழைத்து விசாரணை நடத்த உள்ளார். அப்போது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசு விழாவுக்காக இன்று மாலை வருகிறார். நாளை (5-ந் தேதி) நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் தி.மு.க.வினர் விழா ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
முதல்வர் வருகையையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 500 போலீசார் கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில், நல்லூர், கண்டபங்குறிச்சி, திருப்பெயர், மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளதால் பொது மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அப்பகுதியில் திருட்டு, கஞ்சா விற்பனை, 2 தரப்பினர் மோதல் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது
இதனை தடுக்க சேலம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே கண்டப்பங்குறிச்சியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வேப்பூர் போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை தொடர்ந்து, கண்டபங்குறிச்சி பகுதிக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் புறக்காவல் நிலையம் அமைக்க தேவையான இடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, விருத்தாசலம் ஏ.டி.எஸ்.பி., அங்கித் ஜெயின், மற்றும் வேப்பூர் போலீசார் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் போலீஸ் சரகம் கீழ்ராதம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது இவர் அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பிரேம் குமாரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது கூரை வீட்டில் திடீர் என தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் அருகில் உள்ள மாணிக்கம் வீட்டிலும் தீ பற்றியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் குறையவில்லை.
இதுபற்றி உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்த தீயை அணைத்தனர். என்றாலும் 2 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.
விபத்து பற்றி திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். அவர்கள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து விவசாயி. அவரது மனைவி மீனாட்சி. இவர்கள் 2 பேரும் வீட்டின் வெளிப்புறம் தூங்கிக்கொண்டிருந்தனர். அதே வீட்டில் இன்னொரு அறையில் அவரது மகன் பெரியசாமி, மருமகள் தூங்கினர்.
நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவை நூதன முறையில் திறந்து உள்ளே சென்றனர். பின்னர் 2 அறைகளில் உள்ள பீரோவைத் திறந்தனர். பின்னர் அதிலிருந்த சிறிய நகை வைக்கும் பெட்டியை வீட்டுக்கு பின்னால் உள்ள கரும்பு வயலுக்கு தூக்கி சென்றனர். அதனை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, 53 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் பெரியசாமி விவசாய நிலத்திற்கு மின் மோட்டாரை இயக்க செல்லும்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவுகள் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம்-நகை கொள்ளை போனது தெரியவந்தது,
இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை முடிந்துள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் வீராணம் ஏரி நீர்மட்டம் வேகமாக குறைந்தது. நீர்மட்டம் குறைந்தால் சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும்.
எனவே வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கிவைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கீழ் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரிக்கு அதிகஅளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் தேக்கிவைக்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43.35 அடியாக உள்ளது. ஏரிக்கு 449 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீர் தேவைக்காக 67 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.






