என் மலர்tooltip icon

    கடலூர்

    ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் சென்று செல்லும்போது, அரசு அனுமதி இன்றி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன் பயன்படுத்தி செல்வதால் வாகனங்களில் செல்லக் கூடியவர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நாள் முழுவதும் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் சென்று செல்லும்போது, அரசு அனுமதி இன்றி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன் பயன்படுத்தி செல்வதால் வாகனங்களில் செல்லக் கூடியவர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இதன் காரணமாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் எழுந்தன.

    இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்றவற்றை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அரசு அனுமதியின்றி அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன் பயன்படுத்தியது தெரியவந்தது. பின்னர் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து ஆட்டோ டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் வருங்காலங்களில் இந்த ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பண்ருட்டி சிறையில் ஒழுங்கீனமாகநடந்து கொண்ட வார்டன் மற்றும் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் கிளை சிறை உள்ளது. இங்கு ஏட்டாக ராஜவேல், வார்டனாக சதீஷ்குமார் பணியாற்றி வருகிறார்கள்.

    சம்பவத்தன்று சதீஷ்குமார் பணியில் இருந்தபோது கிளை சிறையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் அங்கு வந்தார். அப்போது ஏட்டு ராஜகோபால் வார்டன் சதீஷ்குமாரிடம் வந்து இருப்பவர் எனக்கு தெரிந்தவர்தான். எனவே அவரை அனுமதிக்கும்படி கூறினார். ஆனால் அதற்கு சதீஷ்குமார் மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.

    ஆத்திரம் அடைந்த ராஜகோபால் அங்கு கிடந்த தடியால் சதீஷ்குமாரை தாக்கினார். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சதீஷ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

    சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் 2 பேரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணியின்போது ஒழுங்கீனமாக 2 பேரும் நடந்து கொண்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வார்டன் மற்றும் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ரவுடி மகாராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
    கடலூர்:

    கடலூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கெடிலம் ஆற்றின் கரையோரம் ஒருவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சென்னை ரெட்ஹில்சை சேர்ந்த மஜா என்கின்ற மகாராஜன் (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் ரவுடி கோஷ்டி தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த கோஷ்டிக்கு எதிராக மற்றொரு கோஷ்டியாக மதி தரப்பினர் செயல்பட்டு வந்துள்ளனர்.

    இரு தரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்தது. எனவே முன்விரோதம் காரணமாக தற்போது மகாராஜன் தலைமறைவாக இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ரவுடி மகாராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதுதொடர்பாக அந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசாரிடம் கடலூர் மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    10-க்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் அதிகமான தண்ணீரை எடுத்து வந்தது தெரியவந்தது.
    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள கூத்தப்பாக்கம் பகுதிகளில் வீட்டு குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் அளவுக்கு அதிகமாக எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக சக்தி நகர், பங்காரு ராஜா நகர், விஜய லட்சுமி நகர், பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டுக் குடிநீர் குழாயில் மின்மோட்டார் பயன்படுத்துவதாக ஊராட்சிமன்றத் தலைவர் ஜல்லி சரவணனுக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன், ஊராட்சி செயலாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்களும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் அதிகமான தண்ணீரை எடுத்து வந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.அதோடு வீட்டு உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    பண்ருட்டியில் வீட்டுமனை பட்டா கேட்டு 200 குடும்பத்தினர் மனு கொடுத்திருந்ததையடுத்து தாசில்தார் பல்லவ ராயன் நத்தம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா கிராமம் ஒன்றியத்தை சேர்ந்த பாலூர் காலனி, பல்லவ ராயநத்தம் இருளர் குடியிருப்பு ஆகிய இடங்களில் ஆதி திராவிடர்கள் மற்றும் இருளர் வகுப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கொடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் பாலூர், பல்லவ ராயன் நத்தம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார். இவருடன் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ஸ்ரீதர், பண்ருட்டி மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    கடலூரில் பீஸ்ட் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படாததால் விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ந் தேதி வெளிவர உள்ளது. விஜய் சினிமா ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி திரையரங்குகளில் காட்டப்படும்.

    பீஸ்ட் படத்திற்கு விஜய் ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்காக கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு காலை முதலே கூட்டமாக திரண்டனர். ஆனால் அந்த தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார், கிழக்கு மாவட்ட பொருளாளர் சுகுமார் முன்னிலையில் இளைஞர் அணி நிர்வாகிகள் புருஷோத்தமன், பச்சையப்பன் மற்றும் ரசிகர்கள் அந்த திரையரங்கிற்கு வந்து சிறப்பு காட்சி ரத்து குறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அந்த பேச்சுவார்த்தை உடன்படாததால் அவர்கள் இன்று காலை அண்ணா சாலையில் சாலை மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படாததால் புதுநகர் போலீசார் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பிடித்து புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    புவனகிரி - விருத்தாசலம் செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்க சாலை மைய பிரிப்பான் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புவனகிரி:

    புவனகிரி - விருத்தாசலம் செல்லும் சாலை 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டது. இந்த சாலை பல கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தி போடப்பட்டது.

    இந்த மாநில நெடுஞ்சாலை 2 வழி சாலையாக போடப்பட்டுள்ளது. புதியதாக போடப்பட்ட சாலையில் போக்குவரத்து தொடங்கப்பட்டதிலிருந்து விபத்துகள் அதிகமாக நடைபெற்று உயிர் சேதம் விளைவித்து வருகிறது.

    இதனை தடுக்க சாலை மைய பிரிப்பான் அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக மைய பிரிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கடலூர் முதுநகரில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் வசுந்தராயன் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25)கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெங்கடேசனுக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தினால் தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த பாதிப்பு முழுமையாக சரியாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வெங்கடேசன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கடலூர் முதுநகர் போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் நேரில் வந்து வெங்கடேசன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி கமி‌ஷனர் பார்த்த சாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், பணி மேற்பார்வையாளர் வாசு, உதவி கல்வி அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி வரவேற்றார்.

    விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது வேல் முருகன் எம். எல்.ஏ விடம் ஆசிரியர்கள் மின்விசிறிகள் வேண்டுமென கோரிக்கை வைத்ததை தொடர்ந்து உடனடியாக தனது சொந்த செலவில் மின் விசிறி வாங்கி கொடுத்தார்.

    நிகழ்ச்சியில் த.வா.க மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், த.வா.க நகர செயலாளர் கார்த்திக், வி.சி.க நகர செயலாளர்கள் புலிக்கொடியன், திருமாறன், கவுன்சிலர்கள் ஸ்ரீதர், செல்வகுமார், மலையான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கடலூர் பகுதியில் சிங்கம் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவியதை அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பீதி அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழி, மாவடிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வாழைதோட்டம் மற்றும் கரும்புதோட்டம் உள்ளது. இந்த விளைநிலங்களுக்கு விவசாயிகள் அதிகாலை முதல் இரவு வரை வேலைபார்த்து வருகிறார்கள். எனவே இந்த நிலங்களில் விவசாயிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.

    இன்று அதிகாலை இந்த பகுதியில் சிங்கம் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனை அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பீதி அடைந்தனர். காலை நேரத்தில் வயல்களுக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை மற்றும் திருப்பாதிரிபுலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். திருமாணிக்குழி பகுதியில் செம்மண்குவாரி உள்ளது. இந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் லாரியில் ஏற்றி வருகிறார்கள்.

    எனவே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருநபர் விளையாட்டாக சமூக வலைதளங்களில் சிங்கம் நடமாட்டம் உள்ளதாக பரப்பியதை ஒப்புக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து அது புரளி என தெரியவந்தது. இதனால் போலீசாரும், கிராம விவசாயிகளும் நிம்மதியடைந்தனர். என்றாலும் வடமாநில நபரை போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

    திட்டக்குடி அருகே இரும்பு கடையில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தில் எம்.எஸ்.ஆர் பழைய மரம், பழையஇரும்பு கடை நடத்தி வருபவர் சம்சுதீன் . இவர் திட்டக்குடியில் ஏ.எம்.கே., நகரில் வசித்து வருகிறார். திட்டக்குடி ராமநத்தம் மாநில நெடுஞ்சாலை ஓரம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இடத்தில் தரை வாடகைக்கு எடுத்து பழைய மரம், பழைய இரும்பு சாமான்கள், அருகால், கதவு போன்ற பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 17-ந் தேதி லால்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு திட்டக்குடி திரும்பியுள்ளார். பின் கீழ்ச்செருவாயில் உள்ள தனது குடோனுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு குடோனை சுற்றி அமைந்துள்ள தகரத்தை எடுத்துவிட்டு அது வழியாக புகுந்து உள்ளனர்.

    பின்னர் 16 டன் பழைய இரும்புக் கம்பி, 2 டன் மற்றும் அலுமினியம், பித்தளை, செம்பு, துச்தி ,கடப்பாரை உள்ளிட்ட பழைய சாமான்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து சம்சுதீன் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பத்தாரர்கள் இன்று முதல் 13- தேதி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், நல்ல உடல்நலம் நல்ல ஒழுக்கம் உள்ளவராகவும், நிர்வாக திறமை மற்றும் சமூக சேவையில் ஈடுபடுபவராகவும், எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாதவராகவும், எந்த ஒரு ஜாதி மத அரசியலமைப்பில் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும். ஊர்க்காவல் படையில் பணிபுரிந்தவராக இருந்தால் அதன் விபரம் தெரிவிக்க வேண்டும். ஊழியராக இருப்பின் தம் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பத்தாரர்கள் இன்று முதல் 13- தேதி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    ×