என் மலர்
கடலூர்
பண்ருட்டி:
கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறையே பயன்படுத்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை வணிக வளாகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது துப்புரவு அலுவலர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் துப்புரவு மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நகராட்சி தொடர்ந்து ஆய்வுப் பணி மேற்கொள் ளப்படும் என்று ஆணை யாளர் மகேஸ்வரி அறிவித்தார்.
பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவருக்கும் மோனிசா (வயது 20) என்ற பெண்ணுக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிசாவுக்கு நர்சிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தன்னால் அவ்வளவு செலவு செய்ய இயலாது என ஆதிகேசவன் மறுத்துவந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிகேசவன் தனது அக்காள் வீட்டு விஷேசத்துக்கு நகைகள் வாங்கி கொடுத்தார். இதில் மனமுடைந்த மோனிசா தன்னை படிக்க வைக்க செலவு செய்யாத கணவர் அவரது அக்காள் வீட்டுக்கு செலவு செய்கிறாரே என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆதிகேசவன் கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் புவனகிரி பேரூராட்சியில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக் பாஷா பணியில் இருந்த போது தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வீரமணி செயல் அலுவலர் கையெழுத்தை இவரே போட்டு ரூ. 90 லட்சத்து 93 ஆயிரத்து 400 காசோலைகள்மூலம் பணமோசடி செய்துள்ளார்.
தற்போது புவனகிரி பேரூராட்சியில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கு தணிக்கையில் வீரமணி மோசடி செய்துள்ளார் என்பதும் அதன் பின்னர் அவர் பணிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.
உடனே தற்போது பணியில் உள்ள புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
மேலும் போலீசார் இந்த பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று வேறு ஏதாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டிக்குப்பத்தை அடுத்த ஆத்திரிக்குப்பம் பகுதியில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம், போலீஸ்காரர் வெங்கடேசன் ஆகியோர் ஆத்திரிக்குப்பம் முந்திரி தோப்பில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரகாந்த், பால முருகன், சிவா ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு சதுரங்கவேட்டை என்ற சினிமா வெளியானது. அதில் கோவில் கோபுரங்கள் மீது உள்ள கலசங்களை திருடி விற்று மோசடியில் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு இரிடியம் மோசடி என்று பெயர். இந்த கலசங்களை வாங்கி வீட்டிலோ, அலுவலகங்களிலோ வைத்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது.
இதேபோல சம்பவம் பண்ருட்டியில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜாகீர். தொழில் அதிபர். இவருக்கும், இவருடைய நண்பர் ஒருவருக்கும் பண்ருட்டி அருகே புலவன் குப்பத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
உலகநாதன் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், அதற்கு ரூ.4.5 லட்சம் பணம் கொடுத்தால் அதை தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஜாகீர் சிறுக சிறுக சேர்த்த ரூ.4.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.
நேற்று இரிடியத்தை வாங்கி கொள்ள வருமாறு ஜாகீரை உலகநாதன் அழைத்தார். இதை நம்பி தனது நண்பருடன் ஜாகீர் பண்ருட்டிக்கு வந்தார். நேற்று முழுவதும் அவர்களை அலைக்கழித்த உலகநாதன் இரவு அவர்களை சந்தித்தார். அப்போது மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தால் இரிடியம் தருவதாக கூறியுள்ளார்.
இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த உலகநாதன் சிகிச்சை பெறுவதற்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது உலகநாதன், அவரது நண்பர் நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கும்பல் இதுபோன்ற இரிடியம் மோசடியில் ஈடுபட்டு பல பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மேலும் யாரிடமெல்லாம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் உத்தரவின்படி சமரச விழிப்புணர்வு நாளாக இன்று (9-ந் தேதி) கொண்டாடும் விதமாக கடலூர் மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில் குமார் தலைமை தாங்கி மாவட்ட சமரச தீர்வு மையத்தில் முன்பாக நெகிழி பலகையை திறந்து வைத்தார்.
தொழிலாளர் நல நீதிமன்றம் தலைவர், நிரந்தர மக்கள் நீதிமன்றம் ( பொறுப்பு ) சுபா அன்புமணி, குடும்ப நல நீதிபதி புவனேஸ்வரி, போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, மகிளா நீதிமன்ற நீதிபதி பால கிருஷ்ணன், எஸ்.சி. எஸ்.டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ் , தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், முதன்மை சார்பு நீதிபதி பஷீர், கூடுதல் சார்பு நீதிபதி மோகன்ராஜ், சிறப்பு சார்பு நீதிபதி ( நில எடுப்பு ) ஜெனிபர், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 1 , சிவபழனி, குற்றவியல் நிதித்துறை நடுவர் எண்-2 ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 3 ரகோத்தமன், கூடுதல் மகிளா நிதித்துறை நடுவர் சுரேஷ் பாபு, மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள், புதுச்சேரி சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட மாணவ-மாணவிகள் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவ-மாணவிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சமரசர்கள் ஆகியோர் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரத்தை வழங்கினார்கள்.
இப்பேரணி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் சமூக நல அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு கடலூர் மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி நகராட்சியில் கும்பகோணம் சாலை, லிங்க் ரோடு, கடலூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள துரித உணவகங்கள், பெட்டிக்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகள், பழக்கடைகள், தேநீர் விடுதிகள் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே.கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சுந்தர மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணை சுமார் 10 லிட்டர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
அதேபோல் செயற்கை வண்ணம் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிக்கன் 5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. முட்டை கடைகளில் ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான முட்டைகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். கெட்டுப்போன, உடைந்த முட்டைகளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். விதிமுறைகளை மீறி கடை நடத்திய 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 -இன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் பஸ் வெளியே வரும் வழியில் இந்திரா காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இங்கு நேற்று ஜவுளி எடுப்பது போல் நடித்து ஜவுளி திருடிய பெண் ஒருவரை கடையிலுள்ள சி.சி.டி.வி., கேமராவில் கடையின் உரிமையாளர் பார்த்து விட்டார்.
கையும் களவுமாக பிடிபட்ட அந்த பெண்ணை பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின்னர் அந்த பெண் குள்ளஞ்சாவடியை சேர்ந்த தமிழ் (வயது 55) என்று தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 19-ந்தேதி காலை10 மணிக்கு கலெக்டர் தலைமையில் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
மேலும் முன்னாள் படை வீரர்கள் சுய தொழில் செய்திட ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கில் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை மூலம் வழங்கப்படுகின்ற பயிற்சி மற்றும் சலுகைகள் குறித்து விரிவுரையாற்றவுள்ளனர். இத்தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடையலாம்.
முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரிபவர்களின் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் அசுபதி. (வயது73). இவர் இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தனது மகனுடன் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூரில் எங்களுக்கு சொந்தமான வீட்டில் தனி தாசில்தார் நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு கடந்த 2012-ம் ஆண்டு வாடகைக்கு விடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வரை எங்கள் வீட்டில் வாடகைக்கு அந்த அலுவலகம் இயங்கி வருகின்றன.
தற்போது அந்த கட்டிடத்தை காலி செய்ய பலமுறை நேரில் தெரிவித்தும், எழுத்து மூலமாக தெரிவித்தும் இதுநாள்வரை காலி செய்யவில்லை. மேலும் பல மாதமாக வாடகை பாக்கி நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் பாக்கி தொகையை வங்கி மூலமாக செலுத்தினர்.
ஆனால் தற்போது எங்களுக்கு சொந்த பயன்பாட்டுக்காக எங்கள் வீட்டை காலி செய்ய வலியுறுத்தியும், இதுநாள்வரை காலி செய்யவில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எங்கள் வீட்டில் இயங்கி வரும் அலுவலகத்தை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எங்கள் வீட்டை காலி செய்யாவிட்டால் வருகிற 11-ந் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.






