என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வியாபாரியிடம் இரிடியம் மோசடி செய்து ரூ.4.5 லட்சம் சுருட்டிய என்.எல்.சி. அதிகாரி கைது

    உலகநாதன் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், அதற்கு ரூ.4.5 லட்சம் பணம் கொடுத்தால் அதை தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஜாகீர் சிறுக சிறுக சேர்த்த ரூ.4.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.
    பண்ருட்டி:

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு சதுரங்கவேட்டை என்ற சினிமா வெளியானது. அதில் கோவில் கோபுரங்கள் மீது உள்ள கலசங்களை திருடி விற்று மோசடியில் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு இரிடியம் மோசடி என்று பெயர். இந்த கலசங்களை வாங்கி வீட்டிலோ, அலுவலகங்களிலோ வைத்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது.

    இதேபோல சம்பவம் பண்ருட்டியில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜாகீர். தொழில் அதிபர். இவருக்கும், இவருடைய நண்பர் ஒருவருக்கும் பண்ருட்டி அருகே புலவன் குப்பத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    உலகநாதன் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், அதற்கு ரூ.4.5 லட்சம் பணம் கொடுத்தால் அதை தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி ஜாகீர் சிறுக சிறுக சேர்த்த ரூ.4.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.

    நேற்று இரிடியத்தை வாங்கி கொள்ள வருமாறு ஜாகீரை உலகநாதன் அழைத்தார். இதை நம்பி தனது நண்பருடன் ஜாகீர் பண்ருட்டிக்கு வந்தார். நேற்று முழுவதும் அவர்களை அலைக்கழித்த உலகநாதன் இரவு அவர்களை சந்தித்தார். அப்போது மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தால் இரிடியம் தருவதாக கூறியுள்ளார்.

    இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த உலகநாதன் சிகிச்சை பெறுவதற்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது உலகநாதன், அவரது நண்பர் நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கும்பல் இதுபோன்ற இரிடியம் மோசடியில் ஈடுபட்டு பல பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மேலும் யாரிடமெல்லாம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×