என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதிகளை மீறிய 5 கடைகளுக்கு நோட்டீஸ்- பண்ருட்டி அதிகாரிகள் அதிரடி
பண்ருட்டி:
பண்ருட்டி நகராட்சியில் கும்பகோணம் சாலை, லிங்க் ரோடு, கடலூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள துரித உணவகங்கள், பெட்டிக்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகள், பழக்கடைகள், தேநீர் விடுதிகள் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே.கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சுந்தர மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணை சுமார் 10 லிட்டர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
அதேபோல் செயற்கை வண்ணம் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிக்கன் 5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. முட்டை கடைகளில் ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான முட்டைகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். கெட்டுப்போன, உடைந்த முட்டைகளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். விதிமுறைகளை மீறி கடை நடத்திய 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 -இன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.






