என் மலர்
கடலூர்
புண்ணிய பூமியாம் இந்த பாரத தேசத்தில் சக்தியானவள் ஆன்மாக்களை உய்யும்பொருட்டு பல அவதாரங்களில் பல இடங்களில் அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் சக்தியின் அவதாரமாக கடலூர் துறைமுகம் பகுதியில் ஐந்து கிணற்று மாரியம்மன் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் விநாயகர், முருகன், அய்யப்பன், பாவாடைராயன், காத்தவராயன், பேச்சியம்மன் ஆகிய பரிவாரங்களுடன் அமைய பெற்றுள்ளது. இந்த கோவில் தற்போது புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதன்படி ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 4-ந் தேதி காலை நடக்கிறது. முன்னதாக 2-ந் தேதி காலை 9 மணிக்கு தேவதாஅனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹாசங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நவகிரக தனபூஜை, தீர்த்த ஸங்கிரணம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
மாலை 6 மணி அளவில் மங்கள இசை தொடங்குகிறது. அதன்பின்னர் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்கு ரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்பஅலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் காலயாகபூஜை ஆரம்பம், மூல மந்திரஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
வருகிற 3-ந் தேதி காலை 8.30 மணி அளவில் மங்களஇசை தொடங்குகிறது. அதன்பின்னர் விசேஷசந்தி, 2-ம் காலயாகபூஜை ஆரம்பம், மூலமந்திரஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
மாலை 5.30 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து விஷேசசந்தி, 3-ம் காலயாகபூஜை ஆரம்பம், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூலமந்திரஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
4-ந் தேதி காலை 7 மணி அளவில் மங்கள இசை தொடங்குகிறது. அதன் பின்னர் விஷேசசந்தி, 4-ம் காலயாக பூஜை ஆரம்பம், கோபூஜை, நாடிசந்தனம், தத்வார்ச்சனை, மூலமந்திரஹோமம், அஸ்த்திரஹோமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது.
9.45 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும் 10.10 மணிக்கு ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.15 மணிக்கு அய்யப்பன் சன்னதி விமான கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.
இந்த கும்பாபிஷேகவிழா திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி நடைபெறுகிறது.
விழாவில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கடலூர் மாநகராட்சி பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை செடல் உற்சவதரார்கள் குழு தலைவர் கணேசன், கவுரவத்தலைவர் டாக்டர் இராம.முத்துக்குமரனார், செயலாளர் கயிலை உதயவேலு, துணை செயலாளர் அரங்கநாதன், துணை பொருளாளர் சதீஷ் மற்றும் செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் பலர் செய்து வருகிறார்கள்.
புவனகிரி:
புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் உள்ளது. அந்த கிராமங்களில் விவசாயிகள் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் பயிர் செய்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் வங்கி மூலம் மற்றும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தின் மூலமும் கடனுதவி பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் நிலத்திற்கு உரிய இடங்கள் மற்றும் பட்டா மாறுதல் போன்ற சான்றுகள் அளித்த தன் பெயரில் வங்கியில் கடன் கொடுக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த கிராமத்திற்கு சென்று விவசாயிகளிடம் ஒரு ஏக்கருக்கு உரிய நிலவரியை வாங்குவது வழக்கம். இதனை ஜமாபந்தியில் கணக்கு தணிக்கை செய்வார்கள். தற்போது எந்த ஒரு கிராம நிர்வாக அலுவலரும் விவசாயிகளிடம் சென்று நிலவரி வசூல் செய்வது உதாரணமாக அவர்கள் அந்தந்த விவசாயிகளிடம் நேரில் சென்று உங்களுக்கு எத்தனை ஏக்கர் உள்ளது இதற்கு இவ்வளவு தொகை செலுத்துங்கள் என்று கூறி அதற்குரிய தொகையை பெற்று அதற்கு ரசீது கொடுக்க வேண்டும். இதுதான் வழக்கமாக உள்ளது.
இதனை பின்பற்றாமல் ஒரு சில கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய தொகைக்கு அதிகமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு ரசீது தருகிறேன் என்று கூறிவிட்டு வந்து விடுகின்றனர். அதற்கு ரசீது கொடுப்பது கிடையாது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் சென்று பட்டா சிட்டா அடங்கல் போன்றவை அரசு நிவாரணம் போன்றவைகள் வாங்குவதற்கு அடிக்கடி செல்ல வேண்டி உள்ளதால் அவரை கடுமையாக கேட்க முடியாது.
உரிய ரசீது கொடுப்பதில்லை.இதற்கான அக்கறையும் காட்டுவதில்லை. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதனை அலட்சியமாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைப்பளு என்று வாங்காமல் பல்வேறு காரணங்களைக் காட்டி தவிர்த்து விடுகின்றனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருவாயும் விவசாயிகளுக்கு நன்மையும் உண்டாகும்.
இல்லை என்றால் ஆன்லைன் இ- சேவை மையம் மூலம் மின்சார கட்டணம் போன்று விவசாயிகளுக்கு நிலவரி கட்டுவதற்கு தமிழக அரசு அதற்குரிய ஒரு ஆப்பை தயார் செய்து கொடுத்து அதில் பெயர், பட்டா எண், ஊர் தெரிவித்து இசேவை மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதனால கிராம நிர்வாக அலுவலர் பற்றாக்குறையையும் தவறு செய்வதும் தவிர்க்கப்படும்.
1978-80-ம் ஆண்டு வேளாண்மை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 42 ஆண்டுகளுக்குப் பிறகு பண்ருட்டி ஐஸ்வர்யா ரவிசேகர் தலைமையில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆத்தூர் கருணாநிதி, திருச்செங்கோடு அன்பழகன், சேலம் ராமநாதன் முன்னிலை வகித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட அரசு பணிநிறைவு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் வேளாண்மைத்துறையிலும், தோட்டக்கலைத்துறையிலும் அலுவலர்களாகவும், உதவி இயக்குநர்களாகவும் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தி.மு.க. சார்பில் தற்போது வார்டு செயலாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த உதயன் (வயது 41) என்பவர் வார்டு செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க. வார்டு செயலாளர் உதயவாணன் சம்பவத்தன்று உதயனிடம் எனக்கு வழங்க உள்ள வார்டு செயலாளர் பதவியை பறிக்க எண்ணுகிறாயா? எனக்கூறி கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த உதயன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி செயற்குழு கூட்டம் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் பாஸ்கர், செயலாளர் சக்திவேல், கூட்டமைப்பு தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளர் சீனிவாசன், அலுவலக செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆகஸ்டு 17-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழாவை மணி விழாவாகக் கொண்டாடுவது. அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கான பிரச்சினையை நிர்வாகத்துடன் பேசி சரியான தீர்வு காணுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை திடீரென்று கூரைவீட்டில் தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென எரியத் தொடங்கியது.
இதனைப் பார்த்த சரஸ்வதி வீட்டில் இருந்து அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியாததால் நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஜெயா என்பவரது பங்க் கடை கீற்றுக் கொட்டகையில் திடீர் என தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து ஒரே பகுதியில் கடை மற்றும் வீடு எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இந்த ஓடையின் கரையோரத்தில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை அகற்றும் பணி இன்று நடந்தது.
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதை கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் காந்தி சிலை அருகே பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டம் பற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 42). இவரது வீட்டுக்கு அருகே பிரியாணி கடையில் புதுச்சேரி மாநிலம் அரியூர் சேர்ந்த தயாநிதி (வயது 25) என்கிற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று விஜயலட்சுமி, தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் விஜயலட்சுமி வந்த போது தயாநிதி வழி மறித்து வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை கடத்தி சென்ற தயாநிதியைதேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி களத்து மேடு ஏரியில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 200 வீடுகள் இடிக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கியது.
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பரமணியம் உத்தரவுபடி பண்ருட்டி தாசில்தார் சிவா.கார்த்திகேயன், பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
எந்தவித அசாம்பாவித சம்பவங்கள் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி நகர மின் வாரிய பணியாளர்கள் இடித்த வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை அகற்றினர். வீடு இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மாற்று இடம், வீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாசில்தார் சிவா. கார்த்திகேயன் தெரிவித்தார்.






