என் மலர்
கடலூர்
பண்ருட்டி:
பண்ருட்டி கும்பகோணம் சாலையில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பருப்பு மண்டி நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நள்ளிரவில் செந்தில்குமாரின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் கடையில் இருந்த முந்திரி, பாதாம் உள்ளிட்ட விலை உயர்ந்த பருப்பு வகைகளை திருடினர்.
பின்னர் பக்கத்தில் உள்ள முத்து என்பவரது பழக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கும் கையில் கிடைத்த பொருட்களை திருடி உள்ளனர். அதற்கு அடுத்ததாக உள்ள துரை என்பவரது பழைய பேப்பர் கடையிலும், மற்றொரு கடையிலும் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர்.
அதே சாலையில் உள்ள வேறொரு கடைக்கு லோடு இறக்க வந்த லாரி டிரைவர் அடுத்தடுத்து 4 கடைகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு அந்த பகுதியில் திரிந்த ஒரு நபரின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமான ஒருநபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது.
ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியநெசலூர், குளவாய் ,காட்டுமைலூர், சிறுப்பாக்கம் , அடரி, கழுதூர், கண்டப்பங்குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகள் விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து வருகிறார்கள்.
வருகிற 3ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் இறைச்சிக்காகவும் , வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க திருச்சி, மதுரை ,சென்னை, பாண்டிச்சேரி, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர்.
கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு , சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது. 9 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை 7500 முதல் 17000 முதல் 20,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
ரம்ஜான் பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 10,000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 4 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து உள்ளதாகவும் தெரிவித்தனர். ரம்ஜான் விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகளும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் பாதிரிகுப்பத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் உள்ளது. இன்று காலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் புதிய நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு கோடைகாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தலை எம்.சி.சம்பத் திறந்துவைத்தார். இதையடுத்து எம்.சி.சம்பத் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது திடீரென கடலூர் புதுபாளையம் பகுதியை சேர்ந்த எத்திராஜ், அருண் ஆகிய 2 அ.தி.மு.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரையும் சமாதானமாக போகும்படி கட்சி அலுவலகத்துக்கு வெளியே அனுப்பினர்.
ஆனால் அங்கும் அவர்களிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேரையும் தடுத்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இந்த மோதல் சம்பவம் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சுமார் 10 பேர் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர். அவர்கள் அ.தி.மு.க. அலுவலக பகுதியில் தேவையில்லாமல் கூட்டம் சேருவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குறிஞ்சி நகர் சேர்ந்தவர் முருகவேல் (வயது 32). அவரது மனைவி செல்வராணி (வயது 28). இவர்களுக்கு வேனிஷ் ( 4) என்கிற மகன் உள்ளார்.
சம்பவத்தன்று காலையில் செல்வராணி தனது மகன் வேனிஷை அழைத்துக்கொண்டு வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த முருகவேல் தனது மனைவி மற்றும் மகனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய்-மகனை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே ஆண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகேஷ் (வயது19). கடலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ.2ம் ஆண்டு படித்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை பூபாலன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மே1 ஆம் தேதியன்று தேசிய அளவில் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1 ந்தேதி காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்திட வேண்டும். இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பண்ருட்டி அருகே சந்தியாகிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 21). இவர் செம்மேடு பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கடத்தி சென்றுவிட்டார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் ராஜா வெளியே வந்துள்ளார். போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்றதை அவமானமாக நினைத்த ராஜா மனஉளைச்சலில் இருந்துவந்தார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிகிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராஜா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் தெய்வ பக்கிரி தலைமையிலும், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, அசோக் பாபு ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-
ரமேஷ்:- எங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குமுதம் சேகர்:- திருமாணிக்குழி பகுதியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த பகுதியில் தண்ணீர் பற்றாக் குறை நிலவி வருவதால், புதிதாக உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிதர வேண்டும். மேலும் அதே பகுதியில் அரசு புறம் போக்கு நிலத்தில் தனியார் சேர்ந்த நபர்கள் அத்துமீறி செம்மண் எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளி:- எங்கள் பகுதியில் 110 அடிக்கு மேல் செம்மண் குவாரிகளில் மணல் எடுப்பதால் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன்:- சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தும், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சமத்துவ நாளாக அறிவித்ததற்கும், கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் தொகையை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஞானசவுந்தரி:- எங்கள் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்டி தரவேண்டும்.
கிரிஜா செந்தில்:- எங்கள் பகுதியில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவேண்டும்
தமிழழகி அல்லாராஜ்:- எங்கள் பகுதியில் போடப்பட்டுள்ள சாலைகள் தரமற்ற சாலைகள் உள்ளது. இதனால் உடனடியாக சாலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுபாஷினி :- எங்கள் பகுதிகளில் குளங்களை தூர்வாரி நீர் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கூடத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழழகி கணவர் அல்லாராஜ் , ஒன்றிய குழுத் தலைவரிடம் சென்று நாங்கள் வைக்கும் கோரிக்கை சம்பந்தமாக கேட்காமல் இருப்பது நியாயமா? என கேட்டார்.
அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், கூட்டத்திலும் ஒன்றிய கவுன்சிலர் தான் பேச வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி இங்கு வந்து பேசுவீர்கள் என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் கவுன்சிலர் கணவரை வெளியில் அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றன.
மதுரையிலிருந்து கடலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை வடலூர் வழியாக வந்து கொண்டிருந்தது அப்போது வடலூரில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஏறி கடலூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ்சில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கினர். ஆனால் ஒரு நபர் மட்டும் இறங்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கண்டக்டர் அந்த நபரிடம் சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடலூர் பஸ் நிலையம் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் கண்டக்டர் புகார் செய்தார். அதன்பேரில் 108 ஆம்புலன்சை பஸ் நிலையத்திற்கு வரவழைத்து இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் விருத்தாசலம் வளையமாதேவி சேர்ந்த ராஜேந்திரன் என தெரிய வந்தது.
ராஜேந்திரன் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர்:
தமிழகத்திற்குள் நுழைந்த பிரஞ்சுகாரர்கள் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை வாங்கினர். பின்னர் அதனை தங்கள் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
இந்த சூழலில் ஆங்கிலேயர்கள் கடலூர் துறைமுகம் பகுதியில் கடல் வழி வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனால் கடலூர் முதுநகர் மற்றும் துறைமுகம் பகுதிகள் வரலாற்றில் சிறப்புமிக்க இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காலம் செல்ல செல்ல கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதி அசுர வளர்ச்சி அடைந்து வந்தது. இதனால் முது நகர் பகுதி வளர்ச்சி அடையாமல் இருந்து வந்தது.
கடலூரில் இருந்து விருத்தாசலம், சிதம்பரம், சீர்காழி, காட்டுமன்னார் கோவில், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வோர் கடலூர் முதுநகர் பகுதி வழியாகவே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்தப்பகுதியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதன் எதிரொலியாக அந்தப் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முடியாமல் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் கனரக வாகனங்கள் அந்த வழியாக அதிகம் செல்வதால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் முன் மிகவும் சவாலாக உள்ளது. எனவே இதுகுறித்து கடலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கனரக வாகனங்கள் செல்வதற்கு வேறு பாதை அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள், குடிநீர் வினியோகம் பணிகள், கால்வாய் சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் ஆணையாளர் விஸ்வநாதன், நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, இளநிலை பொறியாளர்கள் நாகராஜன், சண்முகம் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காலையில் துப்புரவு பணியாளர்கள் பணிகளுக்கு வருகிறார்களா? வருகைப்பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? மற்றும் துப்புரவு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுகிறார்களா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் அருகே கரையேறவிட்ட குப்பம் பகுதியில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை புதிதாக அமைப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அந்த பகுதிக்கு நேரில் சென்று விரைவில் எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு பணிகள் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் கடலூர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் நகர் பகுதியில் 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தையும் மாந கராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பார்வையிட்டு பூங்கா உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 30, 31, 32, 33 ஆகியவைகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படுகிறதா? வடிகால் வாய்க்கால் குடிநீர் சரியான முறையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதையும் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர்கள்சாய்துனிஷா சலீம், இளையராஜா, சங்கீதா செந்தில், பரணி முருகன், சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






