என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் திடீர் மோதல்
கடலூர்:
கடலூர் பாதிரிகுப்பத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் உள்ளது. இன்று காலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் புதிய நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு கோடைகாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தலை எம்.சி.சம்பத் திறந்துவைத்தார். இதையடுத்து எம்.சி.சம்பத் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது திடீரென கடலூர் புதுபாளையம் பகுதியை சேர்ந்த எத்திராஜ், அருண் ஆகிய 2 அ.தி.மு.க. பிரமுகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரையும் சமாதானமாக போகும்படி கட்சி அலுவலகத்துக்கு வெளியே அனுப்பினர்.
ஆனால் அங்கும் அவர்களிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேரையும் தடுத்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இந்த மோதல் சம்பவம் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் சுமார் 10 பேர் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர். அவர்கள் அ.தி.மு.க. அலுவலக பகுதியில் தேவையில்லாமல் கூட்டம் சேருவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.






