என் மலர்tooltip icon

    கடலூர்

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க. மூடி வருகிறது என முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் கூறியுள்ளார்.
    கடலூர்:

    அ.தி.மு.க. கடலூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், மாதவன், கந்தன், வினோத்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

    அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் நவநீதகண்ணன், அண்ணா தொழிற்சங்க அவை தலைவர் பன்னீர்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் அய்யப்பன், சந்தானகிருஷ்ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா.பா.பாண்டியராஜன், தலைமை கழக பேச்சாளர் பஞ்சாட்சரம், மாவட்ட அவை தலைவர் சேவல்குமார், மாநில மீனவரணி தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, பொருளாளர் ஜானகிராமன்ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தி.மு.க. ஆட்சியில் மற்றொரு கார் கம்பெனியை மூட முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தை வழங்குவதில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் வழங்கி வந்தோம்.

    தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசையும். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க. மூடி வருகிறது.

    நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்கள். இதுவரை நடக்கவில்லை. திட்டமிடல் இல்லாத அரசாக தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்தது. தற்போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அ.தி.மு.க. ஆட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், தமிழ்ச்செல்வம், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், ராமசாமி உள்பட பலர்க லந்து கொண்டனர்.

    முடிவில் பேரவை துணை தலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.
    நீரைபாசனத்திற்குபயன்படுத்தினால் சாகுபடிக்கு தகுதியற்ற நிலமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கியுள்ளதால் சரியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி போத்திரமங்கலம் ஆகிய 2 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    தற்போது சில மாதங்களாக வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இதன்மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் இந்த அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகள் தண்ணீர் அருந்தி வருகின்றன. அப்பகுதி விவசாயிகள் தண்ணீரில் குளித்தும் வருகின்றனர் .

    தற்போது தண்ணீர் மிகுந்த துர்நாற்றத்துடன் வருவதாகவும் சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ஆவினங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழ் அதிக அளவில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் அதிக அளவில் வாய்க்காலில் நீர் நிலையில் கொட்டி வருகின்றனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை, கடலூர் மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் பல முறை தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் அவ்வழியில் செல்லும் பொதுமக்கள், பாதசாரிகள், பஸ்சில் பயணம் செய்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோர், முகத்தில் துணியை வைத்துக் கொண்டு மூடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் நீரைபாசனத்திற்குபயன்படுத்தினால் சாகுபடிக்கு தகுதியற்ற நிலமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கியுள்ளதால் சரியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம், இங்கு குவிந்துள்ள குப்பை, கழிவுகளை அகற்றவும், மீண்டும் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இலவச பட்டா வேண்டி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே கோதண்ட ராமாபுரம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    கடலூர் மாவட்டம் கோதண்டராமாபுரம் உப்ப கேணி காலனியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சார்ந்து 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். மேலும் நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருவதோடு, எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை. ஆகையால் நாங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தில் மனைபட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    அபகரிக்கப்பட்ட பூர்வீக சொத்தை மீட்டுத்தர கோரி கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தந்தை மற்றும் மகன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் வழங்கினர்.

    இந்த நிலையில் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் சென்று இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனக் கூறி, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ருட்டி பணிக்கன்குப்பம் சேர்ந்தவர் பழனி என்றும், திமுக முன்னாள் கிளைக் செயலாளராக இருந்துள்ளார் என தெரியவந்தது. இவரது மகன் முருகேசன். இவர்கள்தான் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களது பூர்வீக சொத்தை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஏமாற்றி எழுதி அபகரித்துக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் சொத்தை மீட்டு தர வேண்டும் என பழனியும், முருகேசனும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரியிடம் மனு அளித்து விட்டு சென்று விட்டனர்.
    கோடை வெயில் மற்றும் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீரால் அப்பகுதியில் குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் கேப்பர் மலை, திருவந்திபுரம் பகுதிகளிலிருந்து ராட்சத குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போதுமான குடிநீர் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருவதை அறிந்த மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தினந்தோறும் கோடை வெயிலை சமாளிக்க வேண்டியும், குடிநீர் பற்றாக்குறை போக்குவதற்கும் வாகனங்கள் மூலம் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் கடலூர் சாவடி பகுதியில் இன்று காலை குடிநீர் குழாய் திடீரென்று உடைந்து கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோடை வெயில் மற்றும் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீரால் அப்பகுதியில் குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இது சம்பந்தமாக கடலூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அனைத்து தரப்பு மக்களும் வேதனை அடைந்ததோடு, இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    கடலூர் துறைமுகம், தைக்கால் தோணித்துறை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் துறைமுகம், தைக்கால் தோணித்துறை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,

    கடலூர் அருகே தைக்கால் தோனித்துறை அருகில் தனியார் கெமிக்கல் கம்பெனி நிறுவனத்தில் சுற்றுசுவர் மழைக்காலத்தில் விழுந்து விட்டது. இதன்மூலம் சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த கம்பெனி உட்புறம் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் மர செடிகளை தீ வைத்து கொளுத்தி விட்டனர். அதில் உள்ள விஷ பாம்புகள் ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்துகின்றது. இரவு நேரங்களில் ஊரிலுள்ள மக்கள் யாரும் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
    கலெக்டர் அலுவலகத்திற்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்காக மூதாட்டி ஸ்டிரச்சரில் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் திருவந்திபுரம் அருகே கே.என். பேட்டையை சேர்ந்தவர் சேஷாச்சலம். இவரது மகள் பேபி (வயது 60). மாற்றுத்திறனாளி. இவர் திருமணமாகாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த 2 வாரத்திற்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையே எக்ஸ்ரே எடுத்து ஆபரேஷன் செய்ய உள்ளதால் அங்கிருந்த மருத்துவர்கள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான அட்டை வாங்கி வரும்படி கூறி உள்ளனர்.

    இதையடுத்து அவரது உறவினர்கள் மூதாட்டி பேபியை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கான ஆராய்ச்சி ஸ்டிரச்சரில் கொண்டு செல்லப்பட்டார்.

    இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் 10 நிமிடத்திலேயே காப்பீட்டு திட்டத்திற்கான அட்டையை வழங்கினார். பின்னர் அவர் மீண்டும் ஆம்புலன்சில் சென்றுவிட்டார். கலெக்டர் அலுவலகத்திற்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்காக மூதாட்டி ஸ்டிரச்சரில் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சி மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் தலைமையில் நடைப்பெற்றது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி ஒன்றியத்தில் 42 கிராமங்களில் மே தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வீரப்பெருமா நல்லூர் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம பொதுமக்கள் கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பான குடிநீர், வீடு, சமூக பாதுகாப்பு ஆகியவைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சி மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தமிழ்ச்செல்வி ஆறுமுகம் தங்கதுரை,வேளாண் துரை, ஜெயதீசன் ஆசிரியர் மற்றும் வார்டு உறுப்பினர் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி கவுசர் தலைமையில் பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம், அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளக்கரை வே.காட்டு பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களிடையே கடந்த 29-ந் தேதி முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

    தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களிடையே சமரசம் பேசி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களின் ஒருபிரிவை சேர்ந்த பெற்றோர் சிலர் திருப்பாதிரிபுலியூர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் பள்ளி முன்பு பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நேற்று காலை பள்ளி சீருடை அணியாமல் வந்த மாணவர்கள் சிலர் திடீரென பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து பள்ளிக்குள் புகுந்தனர். 10-ம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர். போலீசாரும், ஆசிரியர்களும் சத்தம்கேட்டு அங்கு வந்ததால் அவர்கள் தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவர்கள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளக்கரைசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பி ரண்டு சபியுல்லா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடந்த பள்ளி அமைந்துள்ள இடம் திருப்பாதிரிபுலியூர் மற்றும் நடுவீரப்பட்டு ஆகிய 2 போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது.

    இதனால் நேற்றைய போராட்டத்தின்போது யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் 2 போலீஸ் நிலைய அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பின்னர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.

    தாக்குதல் சம்பவம் குறித்து காயமடைந்த மாணவர் ஒருவர் திருப்பாதிரிபுலியூர் போலீசில் புகார் செய்தார். நேற்று இரவு மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் 14 மாணவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மேலும் சம்பவம் நடந்த பள்ளி அருகிலும், வெள்ளக்கரை பகுதியிலும் இரவிலிருந்தே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வெள்ளக்கரை அரசு பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி கவுசர் தலைமையில் பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம், அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதேபோல பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும் அறிக்கை பெறப்படும்.

    இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒழுக்கத்தை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் இவ்வாறு மோதல்கள் ஏற்படுவதை தவிர்ப்பது, இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிகள், அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் போன்றவைகள் கவுன்சிலிங்கின்போது வலியுறுத்தப்படும்.

    இந்த பள்ளி மட்டுமல்லாது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு வரிசை எண்கள் பொறிக்கப்பட்ட புதிய வகை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்றவற்றை இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து துறை போலீசார் சார்பில் டிரைவருக்கு ஓட்டுனர் உரிமம், வாகனங்களில் அரசு ஆவணங்கள் உள்ளிட்டவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு வரிசை எண்கள் ஒட்டி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களுக்கு வரிசை எண்கள் பொறிக்கப்பட்ட புதிய வகை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

    போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதன் மூலம் புதிய வகை வரிசை எண் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்களில் ஆவணங்கள் சரியாக பராமரிக்க படுவதாக எளிதாக அறியப்படும். மேலும் ஸ்டிக்கர் இல்லாத ஆட்டோக்களை எளிமையாக கண்டறிந்து ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்பதனை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள எளிதாக இருக்கும் என போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தெரிவித்தார். அப்போது போக்குவரத்து துறை போலீசார் உடனிருந்தனர்.

    விருத்தாசலம் அருகே 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னியன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர், ராயப்பன், ஜான் பால். இவர்கள் 3 பேரும் தனித்தனி கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    நேற்று இரவு அவர்கள் அப்பகுதியில் உள்ள மாதா கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது ஜான் பால் என்பவர் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி சேகர் மற்றும் ராயப்பன் வீடுகளுக்கும் தீ பற்றி எரிந்தது. இதை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பார்த்து தீயணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் 3 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகியது. வீடுகள் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.

    இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம் அருகே தலையில் வெட்டுகாயங்களுடன் குளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தை அருகே நஞ்சமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அய்யப்பன் (வயது 20). சமையல் வேலை செய்துவந்தார்.

    இவர் கடந்த 20ந் தேதி கண்ணன் குடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.நேற்று மாலை முதல் அய்யப்பன் திடீரென மாயமானார். பல இடங்களில் அவரைபற்றி விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அதே ஊரில் உள்ள கோணங்குளத்தில் தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மாயமான அய்யப்பன்தான் குளத்தில் வெட்டுகாயங்களுடன் பிணமாக கிடந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

    அவர் குளத்தில் தவறிவிழுந்து இறந்தாரா? அப்போது அவரது தலையில் காயம் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் அவரை வெட்டிக்கொன்று பின்னர் குளத்தில் உடலை வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் வெட்டுகாயங்களுடன் குளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×