என் மலர்
கடலூர்
கடலூர் நகரம் கடல்சார்ந்த பகுதியாகும். எனவே எப்போதும் ஓரளவு கடல்காற்று வீசக்கூடும். கடலூர் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக தேவனாம்பட்டினம் சில்வர்பீச் உள்ளது. அங்கு தான் கடலூர் நகரமக்கள் பொழுதைபோக்குகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது கொரோனா இல்லாததால் கடற்கரைக்கு செல்ல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டது. அதன்படி கடலூர் மக்கள் கடற்கரைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீரை வைத்து பல்வேறு பகுதிகளில் விவசாயம் நடந்து வருகிறது. வயல்வெளி பகுதியில் தற்போது பசுமையாக காட்சியளிப்பதால் ஓரளவு குளுமை நிலவுகிறது.
ஆனால் கடந்த சிலநாட்களாக வெயில் கடலூர் நகர் பகுதியில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தியதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.
இன்று முதல் அக்னிநட்சத்திரம் தொடங்கிஉள்ளது. எனவே வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க ஏராளமான மக்கள் கடற்கரைக்கு சென்று கடலில் ஆனந்த குளியல் போட்டு வருகிறார்கள்.
தாழங்குடா, சுபஉப்பலவாடி, தேவனாம்பட்டினம் கடற்கரையில் தற்போது பொதுமக்களின் கூட்டம் அதிகம் உள்ளது. கடலில் இறங்கி ஏராளமான மக்கள் குளித்து மகிழ்கிறார்கள்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது.
வணிகர் தினத்தை முன்னிட்டு பண்ருட்டியில் நாளை (5ந்தேதி) அனைத்து கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாநாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கொரோனா தொற்று தாக்கத்தால் இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இதன்படி, நாளை (5ந் தேதி) முதல் தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள் தொடங்குகிறது. இந்தத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 244 பள்ளிகளிலிருந்து 15,136 மாணவர்கள், 15,842 மாணவிகள் என மொத்தம் 30,978 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மே 10ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர்.
மே 6ஆம் தேதி தொடங்கும்10ம் வகுப்பு பொதுத் தேர்வை 445 பள்ளிகளைச் சேர்ந்த 18,489 மாணவர்கள், 17,096 மாணவிகள் என மொத்தம் 35,585 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வு மே 23ந் தேதியும், பிளஸ் 1 தேர்வு மே 31ந் தேதியும்,10 ம் வகுப்பு தேர்வுகள் மே 30ஆம் தேதியும் நிறைவடைகின்றன. மேல்நிலைத் தேர்வுக்காக கடலூர் மாவட்டத்தில் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், கல்வி மாவட்டங்கள் வாரியாக விருத்தாசலம் 31, கடலூர் 36, சிதம்பரம் 23, வடலூர் 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 152 தேர்வு மையங்கள் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தலா 7 தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.பூபதி தகவல் தெரிவித்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் கருமகாரியம் கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூபாய் 7.5 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து இன்று நடந்த விழாவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கரும காரிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார். தாசில்தார் சிவாகார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி துளசி, துணைத் தலைவர் சசிகலா ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், திமுக ஊராட்சி செயலர், ஜனார்தனன் ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 478 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தாட்கோ மூலம் அரசு, அரசு சாரா அமைப்புகளில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தூய்மை பணிபுரிவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 2,12,000 மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினையும் மற்றும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 4 மாற்றுத்திறனாளிகள் இறந்தமைக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.68,000 க்கான காசோலை வழங்கப்பட்டது.
சிதம்பரம் வட்டம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பார்வதி என்பரின் மகள் சத்தியப்பிரியா நீரில் மூழ்கி இறந்தமைக்காக அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1,00,000 க்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜீத்சிங், கற்பகம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் தமிழக அரசு சொன்ன விதிமுறைகளைப் பின்பற்றாமல் இரவு நேரத்தில் நெல் கொள்முதல் செய்து கொண்டு விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவதாக புகார் எழுந்து உள்ளது.
இது மட்டுமல்லாமல் விவசாயிகளை மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்தால்தான் நெல் கொள்முதல் செய்வேன் என்று ஏழை எளிய விவசாயிகளை மிரட்டி வாட்டி வதைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் மக்கள் கட்சி, வெலிங்டன் நீர்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி டைவர்ஷன் சாலை மார்க்கெட்டிங் கமிட்டி எதிரில் உள்ள திருமண மண்டபம் அருகில் குளம் ஒன்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று அதிகாலை பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தின் அருகில் கிடந்த செல்போன், நாப்கின்பேடு, உள்ளாடை துணிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார்? கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு சிறிது நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட காவல் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுறுத்தலின் பேரில் லேடிஸ் பர்ஸ்ட் என்ற புதிய காவல் உதவி எண் மூலம் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணிற்கு 53 புகார்கள் வந்தன. 9 புகார்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 4 புகார்களில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
கணவன் குடித்துவிட்டு மனைவியிடம் ஆபாசமாக திட்டி, சண்டை போடுவதாக 13 புகார்கள் மீது சம்மந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் கணவன், மனைவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவரை எச்சரித்தும் , ஒழுங்காக குடும்பம் நடத்த தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியின் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்தபோது காவல் உதவி எண்ணிற்கு தொடர்புகொண்டு தான் படிக்கவேண்டும். தற்போது திருமணம் வேண்டாம். அதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறியதால் காவல்துறையினர் பெற்றோரிடம் நேரில் சென்று படிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி அவரின் கல்லூரி படிப்பு தொடர வழிவகை செய்யப்பட்டது.
கனவனை இழந்த 29 வயது பெண்ணின் மாமியார் கல்வி சான்றிதழ் , ஆதார்கார்டு ஆகியவற்றை வாங்கிவைத்துக்கொண்டு தரமறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதின் பேரில் அவரது மாமியாரை வரவழைத்து கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார்கார்டு போண்ற ஆவணங்களை பெற்று புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமண நிச்சயதார்த்தம் அன்று மாப்பிள்ளைக்கு கார் வாங்க ரூபாய் 2 லட்சம் பணத்தை கொடுத்ததாகவும் பிறகு மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சனை கேட்டதால் திருமணம ஒப்பந்தம் முறிக்கப்பட்டதாகவும் வாகனத்துக்கு வாங்கிய பணம் ரூபாய் 2 லட்சம் கொடுக்க மறுப்பதாக கூறியதின்பேரில் விசாரணை மேற்கொண்டு பணத்தை பெற்று அப்பெண்ணிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே காராமணிக்குப்பம் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவரும் இவரது நண்பர்களான மணிகண்டன், பிரசாந்த் ஆகியோர் வெள்ளகேட் பகுதியில் சாப்பிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ள கேட் எம்ஜிஆர் சிலை அருகே மோட்டார் சைக்கிளில் மற்றொரு வாலிபர் வந்து கொண்டிருந்தார். அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோட்டார் சைக்கிளை இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் தங்களது நண்பர்களை அழைத்து சம்பவ இடத்தில் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜ்குமார், மணிகண்டன், கந்தன் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பில்லாலி சேர்ந்த விக்கி விஜய் பிரபு மற்றும் 8 பேர் மீதும், கந்தன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தோட்டப்பட்டு சேர்ந்த மணி, காராமணிக்குப்பம் சேர்ந்த ராஜ்குமார், நெல்லிக்குப்பம் சேர்ந்த மணிகண்டன், கீழ் பட்டாம்பாக்கம் சேர்ந்த பிரசாந்த் மற்றும் பலர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 29). இவரிடம் திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் சாமி என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் வங்கி மூலம் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால் பணம் வாங்கி இதுநாள் வரை வேலை வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்டதற்கு தர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சண்முகம் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் சாமியைத் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பூங்குணம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). சிங்கப்பூரில் மெக்கானிக்காக உள்ளார். இவர் தற்போது புதிய வீடு கட்டுகிறார். இதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
புதிய வீடு கட்டுவதால் தற்போது வசிக்கும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள வீட்டு மாடியில் தூங்கினார். நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை சுரேஷ் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 45 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளை போனதை கண்டு பதறிபோனார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் வீட்டுக்கு வந்து கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகர் மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏரிக்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணை மூலம் நீர்வரத்து இருக்கும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இதனால் வீராணம் ஏரி பாசன பகுதியில் நெற்பயிர் சாகுபடி செய்து அறுவடை முடிந்து உள்ளது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்புவதின் அளவு குறைக்கப்பட்டது.
என்றாலும் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பும் வகையில் கீழலணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 42.20 அடியாக உள்ளது. வடலாறு வழியாக 224 கன அடி வருகிறது.
கடந்த மாதம் 30ந் தேதிவரை சென்னை மாநகர் குடிநீருக்காக 61 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னைக்கு குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. எனவே கடந்த 3 நாட்களாக சென்னைக்கு 65 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.
தொடர்ந்து வெயில் வறுத்து எடுத்து வந்தால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதின் அளவு குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






