என் மலர்
கடலூர்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் விருத்தாசலம் அருகே வேப்பூரில் இருசக்கர வாகன ஷோரூம் வைத்துள்ளார்.
இந்த ஷோரூமில் இன்று காலை புகை வெளியனதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் தீ மேலும் பரவி ஷோரூம் முழுவதுமாக பற்றி எரிந்தது.
தகவலறிந்த வேப்பூர் மற்றும் விருத்தாசலம் தீயணைப்புத்துறையினர் நேரில் சென்று தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் ஷோரூமில் இருந்த 2 6புதிய வாகனங்கள் மற்றும் சர்வீசுக்கு வந்த 5 பழைய வாகனங்கள் என 31வாகனங்கள் மற்றும் 3லட்ச ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் முற்றிலுமாக எரிந்தது. அதன் சேதமதிப்பு ரூ. 50 லட்சம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டு கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார்.
இவர் நேற்று இரவு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்று கொண்டு கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர்.
உடனே ஏட்டு தண்டபாணி தனது மோட்டார் சைக்கிளில் காரில் வந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி பண்ருட்டி கீழக்கொள்ளை கிராமம் அருேக சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரில் ஒருவர் திடீரென பட்டா கத்தியால் ஏட்டு தண்டபாணியை வெட்டினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதோடு ஏட்டு தண்டபாணியின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
அதிர்ச்சியடைந்த ஏட்டு தண்டபாணி உரக்க கத்தினார். சத்தம்கேட்டு கிராமத்தினர் திரண்டனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் துரத்தினர். சிறிது தூரம் சென்றதும் ஒருவரை மடக்கி பிடித்தனர். உடனடியாக அவர் காடாம் புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குபிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏட்டு தண்டபாணியை பட்டா கத்தியால் வெட்டிய நபர் வீரமணி (வயது 28) என்றும், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் வீரமணியை கைது செய்தனர்.
வீரமணியுடன் வந்த அரவிந்தன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். ரவுடி வீரமணி தாக்கியதில் காயமடைந்த போலீஸ் ஏட்டு தண்டபாணி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ரோந்து சென்ற ஏட்டுவை ரவுடி வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள், வாழைத்தார்கள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.
இதன்காரணமாக தினந்தோறும் டன் கணக்கில் தூக்கி வீசப்படும் வாழைத்தார்கள் மற்றும் கழிவுகள் ஏராளமாகக் குவிந்துள்ளது. இந்த நிலையில் வாழைத்தார் மற்றும் குப்பை கழிவுகளை சரியான முறையில் அகற்றப்படாததால் மலைபோல் குவிந்து உள்ளது.
மேலும் சாலை ஓரத்தில் வாழைத்தார்கள் மலைபோல் குவிந்து உள்ளதால் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.
இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மலைபோல் குவிந்து இருக்கும் வாழைதார்கள், குப்பைகளை அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






