என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் அருகே குடிபோதையில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே குள்ளஞ்சாவடி கோரணப்பட்டு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). அவரது தந்தை பாலகிருஷ்ணன். தம்பி பிரேம்குமார் ஆகியோர் பக்கத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலமுருகன் கொழுந்தியா கிரிஜா சம்பவத்தன்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தந்தை பாலகிருஷ்ணன், தம்பி பிரேம்குமார் ஆகியோர் குடிபோதையில் அசிங்கமாக பேசி கொண்டிருந்தனர். இது சம்பந்தமாக சென்று கேட்டபோது கிரிஜாவை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பாலமுருகன் தந்தை மற்றும் தம்பியிடம் கேட்டபோது, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடாம்புலியூர் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூர் அடுத்த நடுபிள்ளையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது. ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பொருட்செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

    இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் 5ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் வெகு விமர்சையாக நடந்தது.நேற்று காலை மூன்றாவது கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து ஒன்பது மணிக்கு மேல் கலச நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கருவறை விமான கலசம் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, ஓம்சக்தி என விண்ணதிரக் கோஷமிட்டனர்.

    கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் பாதிப்புகள் தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
    கடலூர்:

    தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் மற்றும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு 100 டிகிரிக்கு மேல் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் அளவு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான காற்றுடன் தொடங்கி சூறாவளி காற்றாக மாறிய நிலையில் மழை பெய்து வந்தது.

    அப்போது கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று பலமாக வீசியதால் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் மின்தடை ஏற்பட்டு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி இருளில் மூழ்கியது. இதனை தொடர்ந்து மின்சார துறை சார்பில் மின் பணியாளர்கள் உடனடியாக மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது பல இடங்களில் மின் ஒயர்கள் அறுந்தும், இன்குபேட்டர் சேதமடைந்ததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மின்சாரத் துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் முதற்கட்டமாக அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    ஆனால் கடலூர், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பகுதியில் அதிகாலை 4 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் மின்தடை காரணமாக கடும் அவதி அடைந்து வந்தனர்.

    சூறாவளி காற்று மற்றும் மழை பெய்த காரணத்தினால் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட புழுக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது. மேலும் கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் பாதிப்புகள் தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    சேத்தியாத்தோப்பு, எறும்பூர், வளைய மாதேவி, பின்னலூர், வீரமுடையாநத்தம், ஆனைவாரி, குமாரகுடி, சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இடியுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    புவனகிரி:

    தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து நெற்பயிர் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ளது.

    தற்போது விளைநிலங்களில் விவசாயிகள் உளுந்து மற்றும் எள் சாகுபடி செய்துள்ளனர். புவனகிரி மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் தற்போது உளுந்து அறுவடை முடிந்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. எனவே மக்கள் கோடை வெயில் கோரதாண்டவத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்ததால் எப்போது மழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

    அதன்படி அக்னி நடத்திரம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதைபோல புவனகிரி, தம்பிக்கு நள்ளான் பட்டினம், தெற்கு திட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது புவனகிரி பகுதியில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு ஒருசில குறுவை நாற்று நட்டுள்ளனர். இந்த கோடை மழை எள் மற்றும் குறுவை நாற்றுக்கு உகந்தது. தொடர்ந்து மழை பெய்தால் ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

    இதேபோல சேத்தியாத்தோப்பு, எறும்பூர், வளைய மாதேவி, பின்னலூர், வீரமுடையாநத்தம், ஆனைவாரி, குமாரகுடி, சாத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இடியுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    புதுப்பேட்டை, அரசூர் சாலையில் போலீஸ் நிலையம் முன்பு இருந்த மரம் ஒன்று சாய்ந்து. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் உடைந்து விழுந்து மின் ஒயர்கள் அறுந்து தொங்கியது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்றுநள்ளிரவு 12 மணி முதல்சூறை காற்றுடன் திடீர் மழை பெய்தது. இதனால் புதுப்பேட்டை, அரசூர் சாலையில் போலீஸ் நிலையம் முன்பு இருந்த மரம் ஒன்று சாய்ந்து. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் உடைந்து விழுந்து மின் ஒயர்கள் அறுந்து தொங்கியது.

    இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

    தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரி பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்புபணியில் ஈடுபட்டனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்.இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
    பண்ருட்டியில் மார்க்கெட்டுக்கு சென்ற பெண் மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாமியார் தர்கா பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (வயது 45). இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    நேற்று வீட்டில் இருந்த லட்சுமி மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த முருகன் தனது மனைவியை உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து முருகன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து லட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார். கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.
    பண்ருட்டி அருகே மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் சரகம்தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதாட்டி ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த 53 பேர், தங்களது குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர், தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்றுக்கொள்ளாத ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், பிரச்சினை தொடர்பாக மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அதன்பேரில் ஆட்டோ ஓட்டுனர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில், தேவனாம்பட்டினம் அருகில் ஆட்டோ நிறுத்தம் 11-ஐ நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் தனது உறவினருடன் சேர்ந்து 11-வது எண் ஆட்டோ நிறுத்தத்தை தாங்கள் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், நாங்கள் அங்கு ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது என்று கூறி எங்களுடன் தகராறில் ஈடுபட்டு வருகிறார். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் நிறுத்தி வந்த ஆட்டோ நிறுத்தத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு, இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்டோ டிரைவர்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து தற்போது நெற்பயிர் சாகுபடி அறுவடை முடிந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக கோடைவெயில் வறுத்தெடுத்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியிலும் மழை ஓய்ந்தது. இதனால் நீர்வரத்து குறைந்து விட்டது. கடந்த 4ந்தேதி ஏரிக்கு வடவாறு மூலம் 224 கனஅடி நீர் வந்தது. அது தற்போது 174 கனஅடியாக குறைந்தது.

    ஏரியின் நீர்மட்டம் 42.05 அடியாக உள்ளது. சென்னை மாநகர் குடிநீருக்காக 67 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. இதுகுறித்து பொதுபணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்தனர்.
    திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு எழுமாத்தூர், பட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதமாக நெல் மணிகளை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு கொட்டி வைத்துள்ளனர். நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கு உள்ள நெல்மணிகளை சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நெல் திருடிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட அப்பகுதி விவசாயிகள் அங்கு ஒன்று கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் இது குறித்து விவசாயிகள் கூறும்போது இந்த கொள்முதல் நிலையத்தில் இரவு நேரத்தில் இரவு காவலர் இல்லை. இங்கு விவசாயிகள் கொட்டி வைக்கும் நெல் மூட்டைக்கு கொள்முதல் நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லை. எனவே உடனடியாக இரவு காவலர் நியமனம் செய்ய வேண்டும். ஒரு பக்கம் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவது , இன்னொரு பக்கம் திடீர் மழையால் பாதிப்பு, நேற்று புதிதாக இரவு நேரங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை திருடி செல்கின்றனர். இதேபோல் தொடர்ந்து அவல நிலையில் தான் விவசாயிகளின் நிலைமை என கூறினார்கள்.

    காட்டுமன்னார்கோவில் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி புலியடி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 32). சம்பவத்தன்று தமிழ்மணி குருங்குடி அருகே உள்ள அய்யன் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்மணி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல ஆண்டு காலமாக தண்ணீர் தேங்காத கரம்பாக உள்ள நீர்நிலை புறம்போக்கில் வசிக்கின்ற மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கையை மாற்று இடம் கொடுக்கும் வரை செய்ய கூடாது.

    வாழ்வாதாரத்திற்கு ஏற்ப நகர்புறத்திலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். கோவில் , சர்ச் , மசூதி நிலங்களில் குடியிருக்கும் இடத்திற்கான வாடகை உயர்வை திரும்பப் பெற வேண்டும். வாடகை பாக்கி என்ற பெயரில் , இடத்தை விட்டு வெளியேற்ற கூடாது.

    அனைத்து சமய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு , இடத்திற்கான தொகையை நிர்ணயித்து ( தவணை முறையில் பெற்று ) கிரயம் செய்து , பட்டா வழங்கிட வேண்டும். புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு காலதாமதமின்றி பட்டா வழங்கிட வேண்டும். ஏழை , எளிய மக்களுக்கு வழங்கும் வீடு கட்டும் திட்டத் தொகையினை ரூ .5 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்டச் செயலாளர் சிவானந்தன் ஆகியோர் முன்னிலையில் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு மற்றும் பொது மக்கள் 300-க்கும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் பேரணியாக கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்கள் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வழங்குவதற்கு அனைவரும் திரண்டு உள்ளே சென்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 10 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த நபர்கள் கலெக்டர் நிலையத்தை முற்றுகையிட்டு அனைவரும் உள்ளே சென்று தங்கள் மனுக்களை வழங்க வேண்டும் என கூறினர்.

    அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 10 நபர்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    ×