என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    வேகமாக குறைந்துவரும் வீராணம் ஏரி நீர்மட்டம்

    வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரை வைத்து தற்போது நெற்பயிர் சாகுபடி அறுவடை முடிந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக கோடைவெயில் வறுத்தெடுத்து வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதியிலும் மழை ஓய்ந்தது. இதனால் நீர்வரத்து குறைந்து விட்டது. கடந்த 4ந்தேதி ஏரிக்கு வடவாறு மூலம் 224 கனஅடி நீர் வந்தது. அது தற்போது 174 கனஅடியாக குறைந்தது.

    ஏரியின் நீர்மட்டம் 42.05 அடியாக உள்ளது. சென்னை மாநகர் குடிநீருக்காக 67 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. இதுகுறித்து பொதுபணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து வீராணம் ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×