என் மலர்
கடலூர்
- நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.
- போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கூத்தன்குடி பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 36). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திட்டக்குடியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தினார். அளவுக்கு அதிகமாக குடித்ததால் தடுமாறியபடி மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.
அப்போது திட்டக்குடி-ராமநத்தம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஜெயக்குமாரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஜெயக்குமார், சம்மந்தமில்லாதவைகளை பேசினார்.
தொடர்ந்து போலீசார் அவர் மீது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளை இயக்கி வந்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரால் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாது என்பதால், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.
போதையில் தள்ளாடிய படி வீட்டிற்கு நடந்து சென்ற ஜெயக்குமார், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வந்தார். அங்கிருந்த மரவாடியில் இருந்த மரங்களை எடுத்து சாலையில் குறுக்கே வைத்தார். மரவாடியில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு அமர்ந்தார்.
அவ்வழியே வந்த வாகனங்கள், இந்த சாலையில் செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து ஜெயக்குமாருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சமீப காலமாக திட்டக்குடி பகுதியில் உள்ள இளைஞர்கள் மது போன்ற பல்வேறு போதைப் பொருட்களை உட்கொண்டு இரவு நேரங்களில் ரகளை, அராஜகம் செய்வது வாடிக்கையாகி வருகிறது. இது போன்ற போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சிப்காட் வளாக பகுதியில் டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம் மற்றும் குடோன் இயங்கி வருகின்றது.
- கூலி வழங்குவதில் அடாவடி வசூல் என சரமாரி புகார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் வளாக பகுதியில் டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம் மற்றும் குடோன் இயங்கி வருகின்றது. இந்த டாஸ்மாக் குடோன் மூலம் மது பாட்டில்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு பெட்டிக்கு 7 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சிலர் இவர்களுக்கு கூலியாக வழங்கக்கூடிய 7 ரூபாயிலிருந்து 3 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி பணத்தை வசூல் செய்வதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதி காரியிடம் புகார் அளித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 60-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழி லாளர்கள் திடீரென்று டாஸ்மாக் குடோன் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத்தகவல் அறிந்த போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமை தூக்கும் தொழி லாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதமாக இதே நீடித்து வருவதால் எங்கள் கோரிக்கையை நிரந்தரமாக தீர்க்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டாஸ்மாக் குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் ெகாண்டு செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் போராட்டம் நீடித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது
- பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.
கடலூர், ஜூன்.19-
கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலால் கடலூர் மாவட்டத்தில் மதிய வேலைகளில் அனல் காற்று வீசி வந்ததோடு இரவிலும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட்ட புழுக்கத்தால் வீட்டிற்குள் பொதுமக்கள் இருக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை 2- வது நாளாக நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்து இன்று காலை வரை பெய்தது. விடிய விடிய பெய்த மழையினால் கடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும் கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது.
இந்த மழை கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காலை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் பகுதியிலும் நேற்று இரவு முதல் காலை வரையில் மழை நீடித்தது. இந்த மழை காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள லால்பேட்டை, மாகொள்ளங்குடி, எடையார், ஆயங்குடி, அனக்கரை, வாணாமதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. புவனகிரி பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்தது. புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் புவனகிரி சுற்றி உள்ள விவசாய நிலத்திலும் தண்ணீர் வரத்து வர தொடங்கியது.
இதேபோன்று மழையினால் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் கடந்த 7 மணி நேரமாக மின்தடையில் சிக்கி இருளில் மூழ்கிய கிராம மக்கள். மேலும் ராமநத்தம் சுற்றியுள்ள வாகையூர் பகுதியில் தொடர்ச்சியாக தினம் தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரமம் அடைந்து வருகின்றனர்.கோடை வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை கடலூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
- பாபு கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
- வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார்.
கடலூர்:
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை சின்னூர் வடக்கு பகுதியை சேர்ந்த வர் பாபு மீனவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்து விட்டு மாலை கரைக்கு திரும்பினார். இதனையடுத்து வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாபு பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் பஸ் டிரைவர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
- பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி:
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போல திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
இதில் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த பஸ் மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்தது. அப்போது பஸ் முன்பக்கத்தில் டிரைவர் சீட்டிற்கு கீழே இருந்த டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.
அப்போது கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சின் டிரைவர் இதனை கவனித்தார். தாறுமாறாக வரும் பஸ் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்பதை கணித்து, பஸ்சை சாலையின் ஓரமாக இயக்கி மெதுவாக சென்றார்.
இருந்தபோதும் திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக வந்த தனியார் பஸ், கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு சென்ற பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தின் போது, இடி இடித்தது போல் பலத்த சத்தம் எழுந்தது. இதில் 2 தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
விபத்தில் 2 பஸ்சின் முன்பக்கமும் முற்றிலும் சேதமடைந்தது. முன்பக்க இடிபாடுகளுக்கு இடையே பயணிகளும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவர் அங்காளமணி (வயது 33), திருவெண்ணைநல்லூர் முருகன் (45), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனுவாசன் (55) என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் அடையாளம் தெரியவில்லை. இவரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பஸ்களிலும் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. மேலும், பண்ருட்டி போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், திருவண்ணாமலையில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு வந்த பஸ் டிரைவரை மீட்க முடியாத நிலை உருவானது. இவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தார். உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும், கிரேன், பொக்லைன் போன்ற எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.
இதில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.
காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது. படுகாயமடைந்தவர்களில் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அத்தியாவசிய தேவையான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
- குடிநீர் வீணாகி வருவதால் அடிப்படை தேவையை பொதுமக்கள் எப்படி சமாளிப்பார்கள்?
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு பொது மக்களுக்கு கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலையிலிருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் மூலம் கடலூர் - சிதம்பரம் சாலையில் குளம் போல் குடிநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீரில் சென்றனர். மேலும் அந்த பகுதியில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.\
இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவான நிலையில் கடும் வெப்பம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வாகனங்கள் மூலமாக இலவசமாக குடிநீர் வழங்கி வந்தாலும், இதுபோன்ற குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாகி வருவதால் அடிப்படை தேவையை பொதுமக்கள் எப்படி சமாளிப்பார்கள்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து பெருக்கெடுத்து சாலையில் வீணாக ஓடும் குடிநீரை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- மனமுடைந்த சுப்பிரமணியன் பூச்சி மருந்து குடித்து மயங்க நிலையில இருந்தார்.
- திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருவந்திபுரம் கே.என். பேட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 59). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி ஜோதிக்கும் குடும்ப சண்டை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் பூச்சி மருந்து குடித்து மயங்க நிலையில இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது.
- மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து தற்போது வரை 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீசி வருவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பகலில் 104 டிகிரி வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள மழையில் நனைந்து படியும், நடந்து சென்ற பொது மக்கள் குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. அதே சமயத்தில் இந்த திடீர் மழையால் குளிர்ந்த காற்று வீசிவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- லட்சுமணன்மஞ்சக்குப்பம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அன்னவல்லி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 34). கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. பின்னர் மோட்டார் சைக்கிளைமர்ம நம்பர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொது மக்களை தடுத்து நிறுத்தி மிரட்டி கொண்டிருந்தார்.
- சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
கடலூர்:
ரெட்டிச்சாவடி அருகே சப்- இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் பொது மக்களை தடுத்து நிறுத்தி மிரட்டி கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
பின்னர் கத்தியுடன் இருந்த வாலிபரை பிடித்து விசாரிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர் திடீரென்று சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கத்தியால் தாக்க முயற்சித்தார். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது, புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த சக்தி (வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் சக்தி மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
- மகிழ்ச்சி அடைந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதல் வியாபாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
- 61 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை இன்று சிறிது குறைந்து காணப்பட்டதால் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர்.
கடலூர்:
கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமுலில் இருந்தது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 14 ந்தேதி முதல் ஜூன் 15 ந்தேதி வரை 61 நாட்களாக மீன்பிடித்தடைக் காலம் இருந்து வந்தது. இந்நிலையில் தடைக்காலம் முடிந்து 15-ந்தேதி மீனவர்கள் ஆர்வமுடன் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. தடைக்காலத்தில் சிறிய வகை படகுகள் மட்டுமே சென்று மீன்களைப் பிடித்து வந்த நிலையில் இருந்தபோது குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக மீன்கள் கடந்த 61 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் மீன்விலை உயர்ந்து காணப்பட்டதால் அசைவ பிரியர்கள் இறைச்சியை அதிகளவில் வாங்கி சென்றனர்.
இந்நிலையில் அனைத்து வகையான படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை அதிக அளவிலான மீன்கள் கடலூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு விற்பனைக்காக வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அசைவ பிரியர்கள் அதிகாலை முதல் வியாபாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர். கடந்த 61 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை இன்று சிறிது குறைந்து காணப்பட்டதால் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைகாலத்தின் போது 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் 800 ரூபாய்க்கும், 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன் 600 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் 300 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனவா மீன் 200 ரூபாய்க்கும் விற்பனையானது. இதே போல் ஒரு கிலோ இறால் 450 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 250 ரூபாயாக குறைந்து விற்பனையானது. இதன் காரணமாக கடலூர் துறைமுகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
- கணவரிடம் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.
- உறவினர்கள் ரூபினாவை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடியை சேர்ந்தவர் ரூபினா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தனது கணவரிடம் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனை தொடர்ந்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரூபினாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இவர் ஏற்கனவே 2 முறை வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் அவரது உறவினர்கள் ரூபினாவை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில், தற்போது 3-வது முறையாக வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






