என் மலர்
கடலூர்
- குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார்.
- குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார்.
கடலூர்:
வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 29). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்த சந்தியாவிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்தியா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று மாலை சந்தியாவை தேடி ராமமூர்த்தி செம்மாங்குப்பத்திற்கு வந்தார். குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார். இதில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அங்கிருந்த கயிறை எடுத்த சந்தியா, தனது தந்தையின் உதவியுடன், ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா செம்மாங்குப்பத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரனை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பண்ருட்டி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- வீரமுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பைத்தம்பாடி மேல்காவனூரை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). இவர் வயலுக்கு அடிப்பதற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து உள்ளார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே மின் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சக்திவேல் குடிபோதையில் தகாத வார்தையால் திட்டி தாக்கியுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையம் ஓடை தெருவில் மின் கம்பிகளுக்கு இடையூராக இருந்த மரக்கிளைகளை அப்பகுதி மின் ஊழியர்கள் நேற்று வெட்டி அகற்றியுள்ளனர். வெட்டிய மரக்கிளைகள் வீடுகளின் முன்பு கிடந்துள்ளது. அதே தெருவை சேர்ந்த சிறபி சக்திவேல் (38) என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து உள்ளார்.
இதனையடுத்து தன் வீட்டின் முன்பு இருந்த மரக்கிளைகளை பார்த்து, மின் அலுவலகத்திற்கு போன் செய்து அப்பகுதி மின் ஊழியரை வரவழைத்தார். வயர்மேன் காத்தவராயன் (40) அங்கு வந்தபோது அவரை சக்திவேல் குடிபோதையில் தகாத வார்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த வயர்மேன் காத்தவராயன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்க ப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
- சிறிய வகை நெத்திலி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சங்கரா மீன் 400 ரூபாய்க்கும், சிறிய வகை சங்கரமீன் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வஞ்சிரம் ஒரு கிலோ 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடோரா வகை மீன் கிலோ 550 ரூபாய்க்கும், பன்னி சாத்தான் மீன் 450 ரூபாய்க்கும், நெத்திலி வகை மீன் 250 ரூபாய்க்கும், சிறிய வகை நெத்திலி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீன்களை குறைந்த அளவில் வாங்கி சென்றதை காண முடிந்தது. இருப்பினும் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை மீன்கள் வாங்கப் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- 10ம் தேதி இரவு, அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.
- சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலூர்:
புதுச்சத்திரம் அருகே, கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; பஹ்ரைனில் வேலை செய்து வருகிறார். ஊருக்கு வந்திருந்த அவரை, மீண்டும் வெளிநாடு செல்வதற்காக, கடந்த 10ம் தேதி இரவு, அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். பின்னர் காரில் ஊர் திரும்பிக் கொண்டிதிருந்தனர். காரை தரங்கம்பாடியை அடுத்த கீழப்பெரும் பள்ளம் சத்தியசீலன் (38) ஓட்டினார். கார் கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கொத்தட்டை பஸ் நிறுத்தம் அருகே, வந்தபோது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டிரைவர் சத்தியசீலன், சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் படுகாயமடைந்த கார்த்திகேயன் மனைவி வளர்மதி (30) மகன் ஹரிஹரன்(10) வளர்மதியின் தங்கை வனிதா (29) தாய் வெண்ணிலா(60) வனிதாவின் ஆறு மாத குழந்தை விக்ராந்த், வளர்மதியின் தம்பி வளர்ச்செல்வனின் மூன்று மாத குழந்தை லக்க்ஷனா ஆகியோரை மீட்டு, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், விக்ராந்த், லக்க்ஷனா இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர். வளர்மதி, ஹரிஹரன் ஆகியோர் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
- போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
- குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட ப்பெற்றுள்ளது.
அவ்வறிப்பின்படி 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் அம்பேத்கர் பிறந்தநாள்விழா தொடர்பில் கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 20-ந் தேதி கடலூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள்2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கபடவும் உள்ளன. பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவ ர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சு ப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் நேரில் ,அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 19.07.2023-இக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அம்பேத்கர் பிறந்தநாள்விழா பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் பின்வருமாறு:
பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் அம்பேத்கரின் இளமை பருவம், பூனா உடன்படிக்கை, அய ல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி, பவுத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசிலமைப்புச் சட்டம், சமூக நீதி என்றால் என்ன, அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கர் கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தம்மமும், கூட்டாட்சி கோட்பாடும்,பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பவுத்தமும் பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும்தொடங்கும். இப்போட்டிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்கின்றனர்.
- இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது .
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-ற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. எனவே, வருகிற 21 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு , ஐ.டி.ஐ , டிப்ளமோ , பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளங்கோவன் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார்.
- இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை செம்ப ருத்தி நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (51,) இவர் கடந்த மாதம் 3-ந் தேதி சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றார். அங்கு, கம்ப்யூட்டர் டிசை னிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி சவூதி அரேபியா நாட்டில் உயிரிழந்தார். பக்ரீத் பண்டிகை காரண மாக, சவூதி அரேபியாவில் அரசு விடுமுறை என்பதால் இளங்கோவன்ன் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் இருந்தது.
இந்த நிலையில், இளங்கோவன் உடலை மீட்டு தமிழ்நாட்டிற்கு எடுத்து வரவேண்டும் என அவரது உறவினர்கள், சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தா னிடம் கோரிக்கை வைத்த னர். இந்த கோரிக்கையை ஏற்று இந்திய தூதரகத்துக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. இதன் காரணமாக, இளங்கோவனின் உடல் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்து, பின்னர், மங்கலம் பேட்டை யில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையி னர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், ராதாகிருஷ்ணன்எம்.எல்.ஏ. ஆகியோர் மங்கலம் பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர், இளங்கோ வனின் இறுதிச் சடங்கிற்காக அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக நிதி உதவி வழங்கினர். அப்போது, விருத்தாசலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உடனி ருந்தனர். நிதி உதவியை பெற்றுக் கொண்ட இளங்கோவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உயிரிழந்த இளங்கோவ னுக்கு கவுரி என்கிற மனை வியும், காயத்ரி (வயது. 21) என்கிற மகளும், ஜீவன்ராஜ் (வயது.12) என்கிற மகனும் உள்ளனர்.
- செல்வம் பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார்.
- ரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வம், துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார். அதனைத் தொடர்ந்து, சென்னை உளவுத்துறையில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வீரசேகர் குறிஞ்சிப்பாடி இன்ஸ் பெக்டராக மாறுதல் செய்யப் பட்டார். இவர் நேற்று குறிஞ்சிப் பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் வீரசேகருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்
- ஹபிபுனிஷா வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அவுலியா நகர் பனங்காட்டுத் தெருவை சேர்ந்தவர் சையத் முகமத் மனைவி ஹபிபுனிஷா (வயது 22). வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார். இதுவரை வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.
- ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.
- என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இங்கு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நிறைவேற்றப்படாததால் இன்று (15-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இது குறித்த சமாதான பேச்சுவார்த்தை கட லூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் (பொறுப்பு) பூமா தலைமை தாங்கினார். இதில் என்.எல்.சி. உதவி பொது மேலாளர் உமா மகேஸ்வரன், பயிற்சி துணை கலெக்டர் அபிநயா, நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது என்.எல்.சி. உயர் அதிகாரிகளிடம் பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வேண்டும் என கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
தங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (சனிக்கிழமை) இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும் போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது.
இன்று மாலை வரை அரசிடம் பேசி உத்தரவாதம் அளிக்காவிட்டால் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
- பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர்.
- தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.
கடலூர்:
சிதம்பரத்தில் பள்ளிக்கு வராமல் வீதியில் சுற்றித்திரிந்த மாணவர்களை போலீஸார் அழைத்துச் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் நகர பகுதியில் பள்ளி சீறுடையுடன் பள்ளிக்கு செல்லாமல் வடக்கு வீதியில் சில மாணவர்கள் சுற்றி திரிந்தனர். அப்போது நகர பகுதியில் ரோந்து பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி இதனை கண்டார். அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்த ஏ.டி.எஸ்.பி., மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீ சாரிடம் மாணவர்களை ஒப்படைத்து, பள்ளிக்கு அழைத்து சென்று விட கூறினார். மாணவர்களை அழைத்து சென்ற போக்குவரத்து போலீசார், தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, மாணவர்களை அவரவர் வகுப்பறையில் விட்டுச் சென்றனர்.






