search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore Collector's Office"

    • கோரிக்கை மனு அளிக்க திரண்டு வந்தனர்.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

    கடலூர்: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் கோரிக்கை மனு அளிக்க திரண்டு வந்தனர். பெண்கள் மனு அளிக்க அதிகளவில் வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கொளுத்தும் வெயிலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து பதிவு செய்த மனுக்களை அதிகாரிகளிடம் வழங்குவதற்கு அலுவலக உள்ளே செல்லும் போது கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பதற்கு நாற்காலி போடப்பட்டு அமரவைக்கப்பட்டனர். குறைதீர் முகாமிற்கு ஏராளமான பெண்கள் மனுக்களுடன் வந்ததால், கலெக்டர் அலுவலகமே பரபரப்பாக காணப்படுகிறது.

    • ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
    • கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மனுக்கள் பெற்றுவந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அலுவலக வளாகத்தில் இருந்து அழைத்து வெளியில் வரப்பட்டு, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த சத்தியவேணி. நான் வசிக்கக்கூடிய பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கட்டி இருந்து வருகின்றேன்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் திடீரென்று என் வீட்டை இடித்து விட்டனர். மேலும் எனது மகன் மற்றும் மகளை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது மட்டுமன்றி வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரம் பணத்தையும் திருடி சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது போலீசார் கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பார்கள் ஆகையால் இது போன்ற நடவடிக்கையில் இனி வருங்காலங்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடியுடன் விவசாயிகள் வந்து, உரிய நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கூட்டம் தொடங்கியதும், நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கையில் அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடிகளுடன் கூட்ட அரங்கிற்குள் வந்தனர். அதன்பிறகு அவர்கள் கலெக்டரை பார்த்து, எங்கள் பகுதியில் மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் கன மழைக்கு சேதமாகி உள்ளது. ஆனால் அதிகாரிகள் இது வரை கணக்கெடுக்க வரவில்லை. ஆகவே சேத விவரங்களை கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதை கேட்ட கலெக்டர், ஏற்கனவே பயிர்கள் மூழ்கி உள்ள விவரத்தை அலுவலர்கள் கணக்கெடுத்து உள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை கேட்டதும் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    அதையடுத்து குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் வந்து, சத்திரம் வாரச்சந்தையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. ஆகவே சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர். இதை கேட்ட கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து கூட்டம் நடந்தது.

    ராமலிங்கம் (விவசாயி):- தாளவாய்க்கால் சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து தர வேண்டும்.

    கலெக்டர்:- பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

    நரசிம்மன் (விவசாயி):- மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்டதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் மனம்தவிழ்ந்தபுத்தூர் ஏரி 25 சதவீதம் கூட நிரம்பவில்லை. அதற்கு காரணம் அந்த ஏரியை இதுவரை தூர்வாரவில்லை. ஆனால் 2 முறை தூர்வாரி விட்டதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆகவே இதில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். ஏரியை உண்மையிலேயே தூர்வார வேண்டும்.

    கலெக்டர்:- இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிவசரவணன்(விவசாயி):- உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சில உரக்கடைகளில் யூரியா, டி.ஏ.பி. போன்ற உரம் வாங்கினால் அதோடு சேர்ந்து இயற்கை உரம் அடங்கிய வாளியையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று சில உரக்கடைக்காரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

    கலெக்டர்:- யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. இது பற்றி உரக்கடைகளில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். வேளாண்மை அதிகாரிகள் இதை ஆய்வு செய்வார்கள்.

    குஞ்சிதபாதம் (விவசாயி):- பெலாந்துறை அணைக்கட்டுக்கு வரும் நேரடி வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

    முருகானந்தம் (விவசாயி):- ஜிப்சம் தட்டுப்பாடு உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 18 கிராமங்களை டெல்டா பகுதியில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு விவாதங்கள் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் ரவீந்திரன், மாதவன், செல்வராஜ், தமிழ்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடலூர் மத்திய சிறையில் கைதி மரணமடைந்தது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை என்ற மைக்கேல் (வயது 36). ரவுடியான இவர் தாதா மணிகண்டனின் தம்பி ஆவார்.

    கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏழுமலை இறந்த தகவல் குறித்து குயிலாபாளையத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மர்மமான முறையில் இறந்துபோன ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழுமலை இறந்து 3 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை.

    இதனால் ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி கோமதி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வந்த பிறகுதான் ஏழுமலையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஏழுமலையின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 4 நாட்களாகியும் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் இரவும்-பகலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர் ஜெயிலில் மர்மமாக இறந்த கைதி ஏழுமலையின் மனைவி கோமதி இன்று குடும்பத்தினருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் கலெக்டரின் உதவியாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்குள் 2 டாடா சுமோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட போலீசார் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் எனது கணவரை அடித்தனர்.

    அப்போது நான் தடுக்க சென்ற போது என்னையும், என் பிள்ளைகளையும் கீழே தள்ளிவிட்டு அடித்தனர். பின்னர் எனது கணவரை அடித்து இழுத்துச் சென்றனர். அதன்பிறகு என் கணவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வக்கீல் மூலமாக ஆரோவில் போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது போலீசார் சரியான முறையில் எங்களுக்கு பதில் தரவில்லை.

    மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் செய்தோம். இந்த நிலையில் காவல்துறையினர் என் கணவரை தாக்கி அடித்து கை மற்றும் கால் உடைத்து உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆனால் உடலில் காயம் ஏற்படுத்திய போலீசார் என் கணவரை மருத்துவமனையில் சேர்க்காமல் வானூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று காவலில் அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணத்தினால் செஞ்சி நீதித்துறை நடுவரிடம் என் கணவரை அழைத்து சென்று காவலில் அடைக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்போது என் கணவர் நடந்தவற்றை அனைத்தும் நீதிபதியிடம் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் காவல்துறையினர் செஞ்சி நீதிமன்ற நடுவரிடம் பொய்யான காரணங்களைக் கூறி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க அனுமதி வாங்கி விட்டனர்.

    என் கணவருக்கு எந்தவித சிகிச்சையும் செய்யாமல் காவல்துறையினரே உடைக்கப்பட்ட கை மற்றும் காலுக்கு கட்டு கட்டி எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அப்போது மத்திய சிறை நிர்வாகம் எங்களுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளனர்.

    ஆனால் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மத்திய சிறை காவலர்களிடம் சண்டை போட்டு சட்டத்திற்கு புறம்பாக மத்திய சிறை காவலர்களை மிரட்டி சிறையில் அடைத்து உள்ளது.

    இந்த நிலையில் போதிய சிகிச்சையை காவலர்கள் கொடுக்காததால் என் கணவர் கடந்த 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கடலூர் மத்திய சிறைச்சாலையில் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்.

    காவல்துறையினர் என் கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அடித்து கை கால்களை உடைத்து காயங்கள் ஏற்படுத்தி கொலை செய்த மேற்கண்ட காவல்துறையினர் மீது தகுந்த விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் என் கணவர் இழந்ததால் நான் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கின்றோம். எனவே மேற்கண்ட காவலர்களிடமிருந்து அரசிடமிருந்து என்னுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது அப்போது வக்கீல்கள் சுந்தர், திருமேனி, வினோத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    மணல் குவாரி அமைக்காததை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து மாட்டுவண்டி மணல் குவாரிகளை இயக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாட்டுவண்டிகளோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையின் இருபுறமும் மாட்டுவண்டி மற்றும் மாடுகளை நீண்ட வரிசையில் நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், நகரசெயலாளர் பரணி, ஒன்றிய செயலாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×