search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
    X
    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

    அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடியுடன் வந்த விவசாயிகள் - நிவாரணம் வழங்க கலெக்டரிடம் வலியுறுத்தினர்

    கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடியுடன் விவசாயிகள் வந்து, உரிய நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கூட்டம் தொடங்கியதும், நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கையில் அழுகிய மக்காச்சோளம், பருத்தி செடிகளுடன் கூட்ட அரங்கிற்குள் வந்தனர். அதன்பிறகு அவர்கள் கலெக்டரை பார்த்து, எங்கள் பகுதியில் மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் கன மழைக்கு சேதமாகி உள்ளது. ஆனால் அதிகாரிகள் இது வரை கணக்கெடுக்க வரவில்லை. ஆகவே சேத விவரங்களை கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதை கேட்ட கலெக்டர், ஏற்கனவே பயிர்கள் மூழ்கி உள்ள விவரத்தை அலுவலர்கள் கணக்கெடுத்து உள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை கேட்டதும் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    அதையடுத்து குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் வந்து, சத்திரம் வாரச்சந்தையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. ஆகவே சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர். இதை கேட்ட கலெக்டர், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து கூட்டம் நடந்தது.

    ராமலிங்கம் (விவசாயி):- தாளவாய்க்கால் சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைத்து தர வேண்டும்.

    கலெக்டர்:- பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள்.

    நரசிம்மன் (விவசாயி):- மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி விட்டதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் மனம்தவிழ்ந்தபுத்தூர் ஏரி 25 சதவீதம் கூட நிரம்பவில்லை. அதற்கு காரணம் அந்த ஏரியை இதுவரை தூர்வாரவில்லை. ஆனால் 2 முறை தூர்வாரி விட்டதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆகவே இதில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். ஏரியை உண்மையிலேயே தூர்வார வேண்டும்.

    கலெக்டர்:- இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிவசரவணன்(விவசாயி):- உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சில உரக்கடைகளில் யூரியா, டி.ஏ.பி. போன்ற உரம் வாங்கினால் அதோடு சேர்ந்து இயற்கை உரம் அடங்கிய வாளியையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று சில உரக்கடைக்காரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

    கலெக்டர்:- யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. இது பற்றி உரக்கடைகளில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். வேளாண்மை அதிகாரிகள் இதை ஆய்வு செய்வார்கள்.

    குஞ்சிதபாதம் (விவசாயி):- பெலாந்துறை அணைக்கட்டுக்கு வரும் நேரடி வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

    முருகானந்தம் (விவசாயி):- ஜிப்சம் தட்டுப்பாடு உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 18 கிராமங்களை டெல்டா பகுதியில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு விவாதங்கள் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் ரவீந்திரன், மாதவன், செல்வராஜ், தமிழ்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×