என் மலர்tooltip icon

    கடலூர்

    • சந்திரசேகரை வழிமறித்த ஞானவேல், அசிங்கமாக திட்டி தடியால் அடித்ததாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்த ஞானவேல், விஜயாவை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அடுத்த கானாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 38). அதே பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (35). இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற சந்திரசேகரை வழிமறித்த ஞானவேல், அசிங்கமாக திட்டி தடியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஜயா (40) என்ற பெண் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஞானவேல், விஜயாவை தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காடாம்புலியூர் போலீசார், தப்பியோடிய ஞானவேலுவை தேடி வருகின்றனர்.

    • ரிஷப வாகனத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பிரகாரவலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
    • நேர்த்தி கடனுக்காகவும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இங்கு பிரதோஷ தினத்தில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆடிமாதம் பிரதோஷ தினமான நேற்று மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவைகளும், தொடர்ந்து மகா தீபாராதனையும், பின்னர் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும் ஐதீக நிகழ்வும் நடந்தது.மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பிரகாரவலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தின்ஷா, உற்சவதாரர், சிவனடியார்கள் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • காரில் சென்னையில் இருந்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தனர்.
    • கார் என்ஜின் பகுதியில் இருந்து லேசாக புகை வந்துள்ளது .

    கடலூர்:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ரோகினி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது55) இவர் தனது மனைவி சியாமளா, மகள் சாவித்திரி, மகன் ராகுல் கிருஷ்ணன் ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தனர். காரை டிரைவர் ரமேஷ் ஓட்டி வந்தார்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வெளியே டீ குடிப்பதற்காக காரை நிறுத்திய போது கார் என்ஜின் பகுதியில் இருந்து லேசாக புகை வந்துள்ளது . உடனே காரில் இருந்து அனைவரும் இறங்கிவிட்டனர். கார் என்ஜினில் வெப்பம் அதிகமானதால் கார் தானே தீ பிடித்து மளமளவென்று எரிந்துள்ளது.இது குறித்து தகவலறிந்த வேப்பூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தியா அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சந்தியா (வயது 17).இவர் அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி என்பருக்கு சொந்தமான சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    • பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது.
    • பரவனாறு கால்வாய் அமைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில் என்எல்சி விளக்கம்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது.

    இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பரவனாறு கால்வாய் அமைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பரவானறு திசைதிருப்பம் ஏன் என்பது குறித்து என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், இதுகுறித்து என்எல்சி நிர்வாகம் கூறியதாவது:-

    அதிக பருவமழை காலங்களில் ஆற்றின் நீர்மட்டம் கூடும்போது, சுற்றியுள்ள வயல்களிலும், கிராமங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.

    அதனால் பரவனாற்றை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

    பரவனாற்றின் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் ஆண்டுக்கு 2 முதல் 3 பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.

    சுரங்கம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக பரவனாறு நிரந்தர கால்வாய் அமைக்கும் பணி முக்கியமானது.

    பரவனாறு பாதையில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் சுரங்கம்-2 வெட்டு முகம் முக்கியத்துவத்தை எட்டி உள்ளது.

    பருவமழை விரைவில் வர உள்ளதால், பரவனாற்றில் நிரந்தர ஆற்றுப்பாதையை அமைக்க வேண்டியது அவசியம்.

    புதிதாக பயிற் செய்ய வேண்டாம் என சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

    பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சிஐஎல் முன் வந்துள்ளது.

    பயிர் இழப்பீடு வழங்க, தனிநபர் பெயரில், மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே காசோலைகளை, என்எல்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

    பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால், இந்த சீரமைப்பில் உள்ள விவசாய வயல்கள், வற்றாத பாசனத்திற்கு தண்ணீர் பெறும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
    • மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டன. இன்று கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. இதில் இன்று மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    வழக்கமாக ரூ.1100-க்கு விற்பனையான வஞ்சரம் ரூ.1400-க்கும், ரூ.300-க்கு விற்பனையான பாறை ரூ. 500 -க்கும், ரூ. 250-க்கு விற்பனையான நெத்திலி ரூ. 300 -க்கும், ரூ. 200-க்கு விற்பனையான இறால் ரூ.300 -க்கும் விற்பனையாகி வந்தன.ஏற்கனவே காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீன்களை குறைந்து அளவில் வாங்கி சென்றனர். இருப்பினும் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை மீன்கள் வாங்கப் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற தெய்வகணேசன்
    • இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற தெய்வகணேசன் (வயது 32). ஆந்திராவில் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி மற்றும் குழந்தை ஆதனூரில் உள்ள, பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆந்திரா வில் இருந்து விடுமுறை யில் சின்னராசு கிளாக்காட்டிற்கு இன்று விடியற்காலை வந்தார். வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆதனூருக்கு சென்றார். இவர் புதியதாக அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலை வழியாக ஆதனூருக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் சென்றார்.

    அப்போது நெடுஞ்சாலை பணிகளுக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சின்னராசு பலியானார். அங்கு வேலை செய்தவர்கள் இது தொடர்பாக சேத்தி யாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சின்னராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    • பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம்.

    சிதம்பரம்:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் ஜெராம தீட்சிதர் வரவேற்பு அளித்து பிரசாதம் வழங்கினார். பின்னர் அவர் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியிலும் தரிசனம் செய்தார்.

    அதனை தொடர்ந்து தில்லை காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் அம்மனை வழிபட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்காலில் நிர்வாக ரீதியான ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சிதம்பரம் நட ராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழை வளர்த்தது ஆன்மிகம்தான்.

    என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம். ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது. இங்கு இடைவெளி எப்படி வந்தது? என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன்
    • வண்டு ராயன்பட்டு சாலையில் சென்றார்

    கடலூர்:

    புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன் (வயது 26). தவில் வாசிப்பவர். இவர் நேற்று இரவு புவன கிரிக்கு சென்று, இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது வண்டு ராயன்பட்டு சாலையில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கலைவாணன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலைவாணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்ற னர்.

    • முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன்
    • கணவன் -மனைவிக்கும் அடிக்கடி தகராறு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரசிங்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. தொழிலாளி அடிக்கடி குடித்து விட்டு வருவதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அப் பெண் பக்கத்து வீட்டை சேர்ந்த முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளி சரவணன் (47) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் இருந்து வந்த அப் பெண் வேறு ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

    இந்த விவகாரம் கள்ளக்காதலன் சரவணனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கள்ளக்காதலியை கொள்ளுகாரன் குட்டைக்கு வரவழைத்துள்ளார்.

    கொள்ளுகாரன்குட்டை பகுதியில் உள்ள முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்று யாருடன் மணி கணக்கில் போனில் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அப் பெண்ணை சரவணன் தன் கையில் வைத்திருந்த சுத்தியால் காலிலும், தலையிலும் அடித்துள்ளார்.

    இதில் காயம் அடைந்தஅப் பெண் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.
    • இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சினை வீரமணி (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் சாத்தப்படாடி புதுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சினை நிறுத்தினார். பஸ்சில் இருந்தவர்கள் கீழே இறங்கி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பிடிக்க ஓடினர். அவர்கள் தப்பிவிட்டனர்.இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் சென்ற பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து டிரைவர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அரசு ரேஷன்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
    • தக்காளி விலை உயர்வால் சில ஓட்டல்களில் தக்காளி சட்னியையும் ரத்து செய்துவிட்டனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடியில் காய்கறி மார்க்கெட்டில் 200 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி இந்த ஆண்டு கிலோ 100 ரூபாயை தாண்டியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைடுத்து அரசு ரேஷன்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    தக்காளி விலை உயர்வால் சில ஓட்டல்களில் தக்காளி சட்னியையும் ரத்து செய்துவிட்டனர். தற்போது தக்காளி கிலோ ரூ.100-க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் சில இடங்களில் தக்காளி கடத்தல், திருட்டு போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இதேபோல் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டிலும் மர்ம நபர்கள் தக்காளியை திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    திட்டக்குடி பஸ் நிலையம் பின்புறம் அண்ணா காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்குள்ள சில கடைகளில் கடந்த சில நாட்களாக தக்காளி திருடு போவது தெரியவந்தது.

    சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சென்றனர். பின்னர் காலை கடைகளை திறக்க வந்தபோது சில கடைகளின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கடைகளில் புகுந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ தக்காளியை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் வளையாபதி, செயலாளர் ரவிச்சந்திரன், தாயுமான், ராமன், சக்திவேல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×