என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுத்ததால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப்பணி வளையமாதேவி கிராமத்திற்கு வந்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களை தடுத்து நிறுத்திய போலீசார்
- பயிரிட்டு வரும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாலிக், சின்னதுரை ஆகியோர் வளையமாதேவி கிராமத்திற்கு வந்தனர்.
கடலூர்:
என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாகத்திற்காகவும், 3-ம் சுரங்கம் அமைப்பதற்காகவும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வளையமாதேவி, கரிவெட்டி போன்ற கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இங்கு கடந்த ஒரு வாரகாலமாக வாய்க்கால் அமைக்கும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அங்கு பயிரிட்டு வரும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டமும், அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
அங்குள்ள மக்களை காண்பதற்காக வந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தினமும் திருப்பி அனுப்படுகின்றனர். இந்நிலையில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாலிக், சின்னதுரை ஆகியோர் வளையமாதேவி கிராமத்திற்கு வந்தனர். இவர்களை அங்கிருந்த போலீசார் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் தடுத்து நிறுத்தினர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார். இதையடுத்து அங்கேயே கோஷங்கள் எழுப்பி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






