என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவையில் கள்ளத்த–னமாக மதுவிற்பனை நடக்கிறது.
    • கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அ.தி.மு.கவினர் தனிதீர்மானம் கொண்டு வருவோம்.

    கோவை,

    கோவை கரடிமடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.கவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

    அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் பொது–மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி–யுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடக்கிறது.

    குறிப்பாக கோவை கரடிமடையில் அ.தி.மு.கவை சேர்ந்த செல்வராஜ் என்பவர், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதை கேள்வி கேட்டுள்ளார்.

    இதற்காக அவரை அந்த டாஸ்மாக்கை நடத்தும் தி.மு.க.வை சேர்ந்த ராகுல், கோகுல் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவர் பலியாகி விட்டார். இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தியுள்ளனர்.

    இந்த கொலை சம்பவத்தில் கொலை–யாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் துணையாக உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அ.தி.மு.கவினர் தனிதீர்மானம் கொண்டு வருவோம். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அ.தி.மு.கவினர் போராடுவோம்.

    கோவையில் கள்ளத்த–னமாக மதுவிற்பனை நடக்கிறது. இதனை தடுக்காத போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார்.
    • படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை சாஸ்திரி நகரைச்சேர்ந்தவர் முனியப்பன்(வயது 39).

    இவர் காரமடை காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஈரம் படிந்த கை உடன், டி.வி செட்டாப் பாக்ஸை துடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனியப்பனுக்கு மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளன.

    இவரது மனைவி அமுதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். எனவே முனியப்பன் தனியாக பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், காரமடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 2022ல் 4599 டிரிப்கள் 348 சிறப்பு ரெயில்கள் மூலம் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    • 380 சிறப்பு ரெயில்களில் 25,794 பொதுப் பெட்டிகளும் 55,243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன.

    கோவை,

    இந்தியன் ரெயில்வேயில் நாடு முழுவதும் 380 கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு கோடை சீசனில், ரெயில்வே பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரெயில்வே 380 சிறப்பு ரெயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளது.

    2022ல் 4599 டிரிப்கள் 348 சிறப்பு ரெயில்கள் மூலம் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரெயில்வே இந்த ஆண்டு கூடுதலாக 1770 டிரிப்களை இயக்குகிறது.

    கடந்த கோடையில் சராசரியாக ஒரு ரெயிலுக்கு 13.2 டிரிப்புகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு சிறப்பு ரெயிலுக்கு 16.8 டிரிப்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த வருடம் பாட்னா-செகந்திராபாத், பாட்னா-யஸ்வந்த்பூர், பரௌனி-முசாபர்பூர், டெல்லி-பாட்னா, புது தில்லி-கத்ரா, சண்டிகர்-கோரக்பூர், ஆனந்த் விஹார்- பாட்னா, விசாகப்பட்டினம்-புரி-ஹவுரா, மும்பை-பாட்னா, மும்பை-கோரக்பூர் டிரிப்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    இந்த 380 சிறப்பு ரெயில்களில் 25,794 பொதுப் பெட்டிகளும் 55,243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன. ஜெனரல் கோச்களில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது, அதே சமயம் ஸ்லீப்பர் கோச்களில் 72 பேர் பயணிக்க முடியும். கோடை கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரெயில்வே சிறப்பு பயணங்களை இயக்கத் தயாராகியுள்ளன.

    இந்த சிறப்பு ரெயில்கள் மூலம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது.

    தேவையின் அடிப்படையில், ரெயில்களின் எண்ணிக்கை மற்றும் டிரிப்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.
    • 3 பெண்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி ரோகினி (வயது32).

    சம்பவத்தன்று இவரும் இவரது கணவரும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பெண்கள் 3 பேர் ரோகினி கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.

    இதனை பார்த்த ரோகினி சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுமதி என்ற லட்சுமி (22), செல்வி (25), மஞ்சு(28) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் காரமடையை சேர்ந்த சுஜிதா (36) என்ற பெண்ணிடம் ரூ.26 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 3 பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சாந்தி காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார்.
    • இது குறித்து சாந்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையம் கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது50).

    இவரது மகன் விக்னேஷ் (26). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி அவரது வீட்டில் அலமாரியில் தங்க நகைகள் வாங்கி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அவர் காசி கோவிலுக்கு யாத்திரைக்காக சென்று இருந்தார். பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 27 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகையை அவரது மகன் விக்னேஷ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
    • 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது48).

    இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    பஸ் கலிக்கநாயக்கன்பாளையம் அருகே வளைவில் சென்ற போது 3 பேர் மது போதையில் சத்தம் போட்டபடி நடுரோட்டில் வந்ததனர்.

    இதனை பார்த்த டிரைவர் விஜயகுமார் ஹாரன் அடித்தார். ஆனால் அவர்கள் ரோட்டை விட்டு விலகாமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் டிரைவர் மற்றும் கண்டெக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    காயம் அடைந்த டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகியோர் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • இன்றில் இருந்தே கும்பாபிசேக நாள் வரை அன்னதான நிகழ்ச்சிகளும் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி இன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், மதியம் 2 மணிக்கு முளைப்பாளியை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நிலத்தவர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருக்குடங்கள் கேள்வி சாலைக்கு புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு முதலாம் கால வேள்வி பூஜைகள், 108 வகையான காய்கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகள், நடைபெறுகிறது.

    வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு என் வகை மருந்து சாற்றுதல் நடைபெறுகிறது.

    24-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜைகள், 6 15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்து அடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மணிக்கு மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    9 மணிக்கு அலங்கார பூஜைகள், 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் இன்றில் இருந்தே கும்பாபிசேக நாள் வரை அன்னதான நிகழ்ச்சிகளும் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துசமய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
    • பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    கோவை,

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

    அப்படி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. மலர் கண்காட்சி தொடங்கியதையொட்டி கண்காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுமே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    நீலகிரிக்கு சுற்றுலா வரும் அனைவரும் மேட்டுப்பாளையம் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    கோவையில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதாலும், கண்காட்சி நடந்து வருவதாலும் இந்த பஸ்களில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று காலை கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் ஊட்டிக்கு செல்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து இருந்தனர்.

    அவர்கள் நீலகிரிக்கு செல்லக்கூடிய பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டியத்து கொண்டு ஏறி நீலகிரிக்கு பயணித்தனர். இதனால் நீலகிரிக்கு செல்லும் அனைத்து பஸ்களுமே நிரம்பி காணப்பட்டது.

    • சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், மொத்த கொள்முதல் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மறுபொட்டலமிடுபவர், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும், உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில், தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு 'ஏதுவாக www.foodsaftey.tn.gov.in என்ற புதிய இணையதளத்தையும், tn food safety consumer app என்ற செயலியையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதிகளுடனும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஸ்கீரீன் ரீடர் அணுகள் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்டராய்டு ஐஓஎஸ்ஸில் பதிவிறக்கம் செய்யலாம்.

    மேலும், இந்த இணையத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தொடர்பு எண்கள், சேவைகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த இணைய இணைப்புகள் குறிப்பாக பதிவு மற்றும் உரிமம் விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள், புகார் வசதிகள் போன்ற அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்கள்பொது மக்கள் இதற்கான இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.

    மேலும், புகார்தாரரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியதா வது:-

    "நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி, ஆர்யுசிஒ, உணவு செரிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு குறும்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், யூடியூப் போன்ற சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
    • அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனை மலை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட தாலுகாக்களில் அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிக்கூடங்கள் உள்ளன.

    இங்கு கடந்த மாதம் 23-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடந்தது. அதன்பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நடப்பாண்டு கல்வி ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், நகராட்சி, சுயநிதி பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடங்கள் உள்ளன.

    இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து பாடப்புத்தகங்களுமான புதிய பாடப்புத்தகங்கள் வந்து சேர்ந்து உள்ளன. அவை கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    அதேபோல ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்க- நடுநிலைப் பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன.

    பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் ஆய்வு நடந்தது.
    • டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூட பஸ்களுக்கான போக்குவரத்து ஆய்வு, தாராபுரம் சாலையில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் நடந்தது.

    உதவி கலெக்டர் பிரியங்கா, வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது டிரைவர்களுக்கு கண் மற்றும் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை வட்டாரத்தில் உள்ள 66 தனியார் பள்ளிக்கூடங்களில் 374 பஸ்கள் இயங்கி வருகின்றன.

    அந்த வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 30 வாகனங்களில் கண்காணிப்பு காமிரா, வேகக்கட்டுப்பாடு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவை இடம்பெறாதது தெரியவந்தது.

    படிக்கட்டுகளிலும் உறுதித்தன்மை இல்லை. எனவே அந்த வாகனங்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிக தடை விதித்து உள்ளனர்.

    அப்போது பள்ளிக்கூட வாகனங்களில் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அந்த வாகனங்களை மீண்டும் தணிக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள அருகம்பாளைத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 27). கூலித் தொழிலாளி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.

    கடந்த 14-ந் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் கரவழிமாதப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்.

    இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது அவரது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது என கூறினார். இதனை அவர்கள் உண்மை என நம்பினர்.

    பின்னர் பாலசுப்பிரமணியம் சிறுமியை தனது வீட்டில் வைத்து 5 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே பாலசுப்பிரமணியம் சிறுமியை திருமணம் செய்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சூலூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து 5 நாட்களாக சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் சம்பவம் குறித்து கருமத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 5 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×