என் மலர்
கோயம்புத்தூர்
- காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்துள்ளார்.
- 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று காவல் பணியில் இணைந்தார்.
கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர் சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். அப்போதுதான் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி. ஆனார். கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவையில் பதவியேற்று பணியில் ஈடுபட்டு வந்தார்.
கோவை சரகம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த 4 மாவட்டங்களுக்கும் இவர் டி.ஐ.ஜி.யாக தனது பணியை செய்து வந்தார். டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் முகாம் அலுவலகமும் (வீடு) உள்ளது. இங்குதான் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது குடும்பத்தினருடனேயே தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் எழுந்த விஜயகுமார், வீட்டை விட்டு வெளியில் வந்தார். வீட்டு வளாகத்தில் சிறிது நேரம் அங்கும், இங்கும் நடந்தார். திடீரென தனது பாதுகாவலர் ரவி வைத்திருந்த கை துப்பாக்கியை விஜயகுமார் கேட்டார். உயர் அதிகாரி கேட்பதால் பாதுகாவலரும் எந்த கேள்வியும் கேட்காமல் துப்பாக்கியை கொடுத்தார். விஜயகுமார் வீட்டுக்குள் துப்பாக்கியை கொண்டு சென்ற சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் வந்தது.
இதனால் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதை உணர்ந்த அவரது பாதுகாவலர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கு வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக போலீஸ்காரர்களை அழைத்து கொண்டு உள்ளே சென்றார். சத்தம் கேட்டு வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவியும் எழுந்து அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தார்.
அப்போது வீட்டிற்குள் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பிணமாக கிடந்தார். அவரது கையில் துப்பாக்கி இருந்தது.
அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கணவர் இறந்து கிடந்ததை பார்த்ததும், அவரது மனைவி கதறி அழுதார்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் டி.ஐ.ஜி. வீட்டிற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த பாதுகாவலர்களிடம் விசாரித்தனர்.
பின்னர் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் டி.ஐ.ஜி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கோவை, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விஜயகுமார் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாத்திரை எடுத்து வந்ததாகவும் தெரிகிறது. கடந்த 3 தினங்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். அந்த அழுத்தத்திலேயே அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் அவருக்கு வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் இருந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசா ரணை நடத்துவதற்கு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருணை நியமித்து டி.ஜி.பி. சங்கர்ஜி வால் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஏ.டி.ஜி.பி. அருண் கோவை விரைந்து உள்ளார். அவர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், பாதுகாவலர், அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணைக்கு பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான முழுமையான காரணம் தெரியவரும்.
தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் ஆகும். இவரது தந்தை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். டி.ஐ.ஜி. விஜயகுமார் வீட்டிற்கு ஒரே பிள்ளை.
தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு கீதாவாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் படித்து வருகிறார்.
அண்மைக் காலங்களாக போலீசார் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வது என்பது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் கூட விடுமுறை கிடைக்காததும், தொடர்ந்து பணியாற்றுவதால் ஏற்படும் மன அழுத்தத்தாலேயே தற்கொலை செய்வதாக கூறப்பட்டு வந்தது.
தற்போது போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, திருமண நாள், பிறந்த நாளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு அது நடைமுறைக்கும் வந்துள்ளது.
இருந்த போதிலும் போலீசார் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூட கோவையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
போலீஸ்காரர்களுக்கு தைரியம் கொடுத்து, அறிவுரை வழங்கும் நிலையில் இருக்கும் உயர் பதவி வகித்து வரும் டி.ஐ.ஜி. ஒருவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது.
- சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார்.
குனியமுத்தூர்:
கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள்(வயது70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்.
இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து நாகம்மாள், தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். கார் சக்தி நகர் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு டெம்போ சென்றது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் பள்ளங்கள் இருப்பது எதுவுமே தெரியவில்லை.
அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
பின்னால் காரில் நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்து கொண்டிருந்தார். டெம்போ சென்றால் தான் அந்த இடத்தை விட்டு நகர முடியும் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜபாண்டி தவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் டெம்போ மீட்கப்பட்டது. அதன்பின்னரே ராஜபாண்டி தனது தாயை அழைத்து கொண்டு வேக, வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால் நாகம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்து விட்டால் இதில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கும். இது தொடர்பாக எவ்வளவோ முறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலாவது இந்த சாலையை முறையாக சீரமைத்து தருவதற்கு மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மோசமான சாலையால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயராஜ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
- மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது.
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது வீட்டின் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது.
இதை பார்த்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து பார்த்தனர். அப்போது, மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அட்டுக்கல் மலைப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
- முத்தண்ணகுளம் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
- பொதுமக்கள் சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கோவை,
கோவை உக்கடம்-சுங்கம் ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு பகுதியாகும். நேற்று நள்ளிரவு நேரத்தில் உக்கடம்-சுங்கம் ரோட்டில் சுங்கத்தை நோக்கி ஒரு கார் வந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் கார் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது.
முத்தண்ணகுளம் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் கார் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி சேதம் அடைந்தது. காருக்குள் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மயங்கி விட்டார்.
உடனடியாக பொதுமக்கள் சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கோவை திருநகர், லேஅவுட்டை சேர்ந்த கவுதம்(வயது29) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு
- 5 அறங்காவலர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கோவை,
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்காக பலர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை மாநிலகுழு ஆய்வுசெய்து, இதற்கான பரிந்துரை பட்டியலை இந்து சமய அறிநிலைய ஆணையருக்கு அனுப்பி வைத்து உள்ளது. அதன்படி வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்து மகேஷ்குமார், நஞ்சுண்டாபுரம் ஜெயக்குமார், சங்கனூர் பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், தொண்டாமுத்தூர் விராலியூரை சேர்ந்த சுகன்யா ராசரத்தினம் ஆகிய 5 பேர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பரம்பரை சாராத அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் அடுத்த 2 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- போலீசார் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு காரமடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- தனியார் பஸ்களை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - காரமடை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காரமடை செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் சிறுவன் பஸ் படிக்கட்டில் நின்று இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பேருந்து சாலை வளைவில் திரும்பியது. அப்போது சிறுவன் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்த காரமடை சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு காரமடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் கருப்பசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் - கோவை சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குவதும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அதிக சப்தத்துடன் ஒலி எழுப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. காரமடை காந்தி நகர் அருகே தனியார் பஸ்சில் சென்ற காவலாளி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த நிலையில் அங்கு மேலும் ஒரு விபத்து நடந்து இருப்பது பொதுமக்களை பதற வைத்து உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் தனியார் பஸ்களை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
- இந்த ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆகஸ்டு மாதம் 1-ந்தேதிக்குள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்.
சூலூர்,
சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்றக் கோரி அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் செஞ்சேரி மலையில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் மோகன் மந்திராசலம் தலைமை தாங்கினார். காமாட்சிபுரி ஆதீனம் சாந்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், சுல்தான்பேட்டை ஒன்றிய பொதுச்செயலாளர் ரவி உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அடை மழை பெய்தது. இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து நகராமல் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும், மதுவை ஒழிப்போம், நாட்டை காப்போம், ஆகஸ்டு மாதம் 1-ந்தேதிக்குள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும். இல்லை என்றால் கடைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
காமாட்சிபுரி ஆதீனம் சாந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது இந்தியா மதுவில்லாத நாடாக மாற நாம் போராட வேண்டும். செஞ்சேரி மலையில் உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இப்பகுதியில் அனைவரும் கட்சி பேதமின்றி கோரிக்கை வைக்கின்றனர். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- பாகுபலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
- மற்றொரு கும்கி யானை விஜய் இன்று மாலை அல்லது நாளை முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் பாகுபலி யானை, வாய்ப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்தது. இதனால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சையளிப்பது என்று வனத்துறை முடிவுசெய்தது.
இதற்காக வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 4 பேர் அடங்கிய குழுவினர் மேட்டுப்பாளையம் வந்தனர். அவர்களுக்கு உதவியாக கோவை சாடிவயல் முகாமில் இருந்து வளவன், பைரவா என்ற 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன.
இதற்கிடையே பாகுபலியை பிடிக்கும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து விஜய், வசீம் ஆகிய 2 கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன. அந்த யானைகள் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை மரக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் பாகுபலியை தீவிரமாக கண்காணித்த வனத்துறை மருத்துவ குழுவினர், அந்த யானை முழு உடல் நலத்துடன் உள்ளது, எனவே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. எனவே கோவை சாடிவயல் முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் கும்கி யானைகளையும் திருப்பி அனுப்புவது என்று வனத்துறை முடிவு செய்தது.
அதன்படி கும்கி யானை வசீம் இன்று அதிகாலை மீண்டும் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
மற்றொரு கும்கி யானை விஜய் இன்று மாலை அல்லது நாளை வாகனத்தில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
- துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
- துர்காவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
கோவை,
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சசிமோகன். இவரது மனைவி துர்கா (வயது 25). இவர்கள் 2 பேரும் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது துர்கா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பகாலம் என்பதால் சசிமோகன், துர்காவை அவரது தாயார் வீட்டில் விட்டு வந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களாக வேலைப்பளு மற்றும் கர்ப்ப காலத்தில் கணவர் தன்னுடன் இல்லாதது ஆகிய காரணங்களால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அவரது தாயார் அரிசி மண்டிக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த துர்கா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது தாயார் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துர்காவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. 3 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- யோகநாதன் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் பணத்தை தவணை முறையில் கட்டியுள்ளார்.
- புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கணபதியை சேர்ந்தவர் யோகநாதன் (வயது 35). இவர் தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது டெலிகிராமுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அந்த நபர் எனக்கு பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறினார். மேலும் டெலிகிராமில் ஒரு குழுவில் என்னை இணைத்து விட்டார். அதில் பல கட்டங்களாக பணிகளை (டாஸ்க்) கொடுத்தார். பின்னர் என்னை முதலீடு செய்ய சொன்னார்.
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் நானும் சேமித்து வைத்திருந்த பணத்தை சிறுக சிறுக தவணை முறையில் அனுப்பினேன்.
முதலில் எனது பணத்திற்கு ஓரளவு பணம் கமிஷன் கொடுத்தார். இதனை நம்பிய நானும் பல கட்டங்களாக அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூ. 11 லட்சத்து 12 ஆயிரம் அனுப்பினேன். ஆனால் அந்த நபரோ எனக்கு சில நாட்களுக்கு கமிஷன் பணம் தரவில்லை. நான் கமிஷன் பணம் கேட்ட போது மேலும் பணத்தை கட்ட சொன்னார்.
அப்போது நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
- கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
அன்னூர்,
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அடுத்த மாதம் முழு பயன்பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறினார்.
அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை மற்றும் சோதனை ஓட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கினர்.
மேலும், இந்த திட்டம் சில மாதங்களில் முடியும் நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அந்த நீரை முறையாகப் பாசனத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிடுவது குறித்தும், கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் குளங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் மின்சாதனப் பொருள்களின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிப்ரவரி முதல் தொடர்ந்து குட்டைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும், திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் கூறி னார்.கூட்டத்தில் அன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கலந்து கொண்ட னர்.
- தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
- 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கோவை:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழக எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.
குறிப்பாக வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
இன்று காலையும் மழை பெய்தது. மழையுடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு, கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு மற்றும் கருமலை இறைச்சல் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வால்பாறை சாலையில் ஆங்காங்கே புதிது, புதிதாக நீர்வீழ்ச்சிகளும் தோன்றி தண்ணீர் கொட்டி வருகிறது.
கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மாணவர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மழை பெய்து கொண்டே இருப்பதால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நேற்றுமுன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 32 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 15 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 1 அடிக்கும் கீழே சென்றது.
தற்போது சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டமானது மெல்ல, மெல்ல உயர தொடங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் 0.72 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 0.79 ஆக உயர்ந்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் பெய்யும் மழையால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது.
தற்போது 6 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின் உற்பத்தி மூலமாக 6 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதேபோல் ஆழியார், பரம்பிக்குளம் அணை, திருமூர்த்தி அணை உள்ளிட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்தானது அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டும் என தெரிகிறது. கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-106, சோலையார்-66, சின்கோனா-61, வால்பாறை பி.ஏ.பி-60, வால்பாறை தாலுகா-59, சிறுவாணி அடிவாரம்-58, மாக்கினாம்பட்டி பி.டபுள்யுடி, ஐ.பி.-40, தொண்டாமுத்தூர்-37.






