என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    X

    கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    • காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்துள்ளார்.
    • 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று காவல் பணியில் இணைந்தார்.

    கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் விஜயகுமார். 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற இவர் சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். அப்போதுதான் பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜி. ஆனார். கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவையில் பதவியேற்று பணியில் ஈடுபட்டு வந்தார்.

    கோவை சரகம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த 4 மாவட்டங்களுக்கும் இவர் டி.ஐ.ஜி.யாக தனது பணியை செய்து வந்தார். டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் முகாம் அலுவலகமும் (வீடு) உள்ளது. இங்குதான் டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது குடும்பத்தினருடனேயே தங்கி இருந்தார்.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் எழுந்த விஜயகுமார், வீட்டை விட்டு வெளியில் வந்தார். வீட்டு வளாகத்தில் சிறிது நேரம் அங்கும், இங்கும் நடந்தார். திடீரென தனது பாதுகாவலர் ரவி வைத்திருந்த கை துப்பாக்கியை விஜயகுமார் கேட்டார். உயர் அதிகாரி கேட்பதால் பாதுகாவலரும் எந்த கேள்வியும் கேட்காமல் துப்பாக்கியை கொடுத்தார். விஜயகுமார் வீட்டுக்குள் துப்பாக்கியை கொண்டு சென்ற சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் வந்தது.

    இதனால் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதை உணர்ந்த அவரது பாதுகாவலர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கு வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக போலீஸ்காரர்களை அழைத்து கொண்டு உள்ளே சென்றார். சத்தம் கேட்டு வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவியும் எழுந்து அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தார்.

    அப்போது வீட்டிற்குள் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமார் பிணமாக கிடந்தார். அவரது கையில் துப்பாக்கி இருந்தது.

    அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கணவர் இறந்து கிடந்ததை பார்த்ததும், அவரது மனைவி கதறி அழுதார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் டி.ஐ.ஜி. வீட்டிற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த பாதுகாவலர்களிடம் விசாரித்தனர்.

    பின்னர் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் டி.ஐ.ஜி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து கோவை, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விஜயகுமார் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாத்திரை எடுத்து வந்ததாகவும் தெரிகிறது. கடந்த 3 தினங்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். அந்த அழுத்தத்திலேயே அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுமட்டுமல்லாமல் அவருக்கு வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் இருந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசா ரணை நடத்துவதற்கு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருணை நியமித்து டி.ஜி.பி. சங்கர்ஜி வால் உத்தரவிட்டார்.

    இதையடுத்து ஏ.டி.ஜி.பி. அருண் கோவை விரைந்து உள்ளார். அவர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், பாதுகாவலர், அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணைக்கு பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான முழுமையான காரணம் தெரியவரும்.

    தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் ஆகும். இவரது தந்தை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். டி.ஐ.ஜி. விஜயகுமார் வீட்டிற்கு ஒரே பிள்ளை.

    தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு கீதாவாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் படித்து வருகிறார்.

    அண்மைக் காலங்களாக போலீசார் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வது என்பது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் கூட விடுமுறை கிடைக்காததும், தொடர்ந்து பணியாற்றுவதால் ஏற்படும் மன அழுத்தத்தாலேயே தற்கொலை செய்வதாக கூறப்பட்டு வந்தது.

    தற்போது போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, திருமண நாள், பிறந்த நாளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு அது நடைமுறைக்கும் வந்துள்ளது.

    இருந்த போதிலும் போலீசார் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூட கோவையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

    போலீஸ்காரர்களுக்கு தைரியம் கொடுத்து, அறிவுரை வழங்கும் நிலையில் இருக்கும் உயர் பதவி வகித்து வரும் டி.ஐ.ஜி. ஒருவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×