என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 19-வது ஆண்டில் நீலகிரி மலை ரெயில் அடிவைத்துள்ளது.
    • பெரம்பூர் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில், அதநவீன வசதிகளுடன் பெட்டி உருவாக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த மலைரெயிலானது, பல்வேறு மலைகள் மற்றும் குகைகளை தாண்டியும், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான பள்ளத்தாக்குகளை கடந்து செல்கிறது.

    அடர்வனத்திற்கு நடுவே செல்வதால் பல இயற்கை காட்சிகள், வனவிலங்குகளை பார்க்கலாம் என்பதால் இந்த ரெயிலில் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என்பதே நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணமாக இருக்கும்.

    இப்படிப்பட்ட இந்த மலைரெயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது.

    யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 19-வது ஆண்டில் நீலகிரி மலை ரெயில் அடிவைத்துள்ளது.

    இதனை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக பெரம்பூர் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில், அதநவீன வசதிகளுடன் பெட்டி உருவாக்கப்பட்டது. இந்த பெட்டி சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு சிறப்பு மலைரெயிலுடன் இணைக்கப்பட்டது.

    இந்த அதநவீன வசதிகளுடன் கூடிய மலைரெயில் இயக்கம் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற தினத்தில் தனது பயணத்தை தொடங்கியது.

    முன்பு இயங்கிய மலை ரெயிலில் மற்ற ரெயில்களை போல் ஜன்னல் இருக்கும். அதனை திறந்து நாம் இயற்கை காட்சிகளை பார்க்க வேண்டிய சூழல் இருந்தது.

    மேலும் கால்களை மடக்கியபடியே நீண்ட தூரம் பயணிக்கும் நிலையும் காணப்பட்டது.

    ஆனால் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெட்டியில் மலைரெயில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே பயணிக்கும் போது, வனத்தின் இயற்கை காட்சிகளையும், அங்கு நிற்கும் வன விலங்குகள், சீதோஷ்ண நிலை, அங்குள்ள அருவிகள் நீர்வீழ்ச்சிகளை ஜன்னலை திறக்காமல், நாம் இருந்த இடத்தில் இருந்தே கண்டுகளிக்கும் விதமாக அலுமினியத்தால் ஆன கண்ணாடிகளால் பரந்து விரிந்த கதவுகளுடன் கூடிய மிகப்பெரிய ஜன்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக நாம் இயற்கை அழகுகளை கண்டு ரசிக்கலாம்.

    இதுதவிர பயணிகள் கால் நீட்டி அமருவதற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. குஷன் வகையிலான இருக்கைகள் போடப்பட்டு பயணிகள் நன்றாக தங்கள் கால்களை நீட்டி கொண்டே பயணம் செய்யலாம்.

    சாதாரணமாக ரெயில் சென்று கொண்டிருக்கும் போது குலுங்குவது நமக்கு தெரியும். ஆனால் இந்த பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள ரோலர் தாங்கு உருளைகளால் நமக்கு ரெயில் குலுங்குவது உள்பட எந்தவித அசைவுகளும் தெரியாமல் செல்லும்.

    மேலும் பெட்டி முழுவதும் எல்.இ.டி. விளக்குகள், செல்போன் சார்ஜ் போடுவதற்கான வசதிகளும் இந்த பெட்டியில் உள்ளது.

    ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலைரெயிலில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய பெட்டிகள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பயணிக்கவே சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புகின்றனர்.

    • தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன.

    கோவை:

    தமிழகத்தில் சிறு-குறு நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நூல் பொருட்கள் தயார் செய்யப்பட்டு ஆடை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு அதிகரித்தது. இன்னொருபுறம் மாநில அரசு மின்கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதனால் பஞ்சு மில்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறின.

    இந்த நிலையில் தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், துணிகள் ஏற்றுமதிக்கான வரியை குறைக்க வேண்டும், வெளிநாட்டில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும், வங்கிகளில் கடன்வட்டி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பஞ்சாலைகள் கடந்த வாரம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

    எனவே அவர்களுடன் மத்திய-மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு எட்டப்பட வில்லை.

    இதனை தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறு, குறு நூற்பாலைகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கின. அவர்களின் போராட்டம் தற்போது 3-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு தினமும் சுமார் 35 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தமிழக பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, அங்கு வேலை பார்த்த 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது. இன்னொருபுறம் பஞ்சாலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்த சுமார் 10 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் பஞ்சாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, கடந்த 3 நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாலை நிறுவனங்களுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற தொன்மையான சக்திவாய்ந்த தியானம் கற்றுக்கொடுக்கப்படும்.
    • இப்பயிற்சியை தினமும் செய்வதன் மூலம் மனம் குவிப்புத்திறன் அதிகரிக்கும்.

    மன அழுத்தம் உள்ளிட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் 7 நாள் ஈஷா யோகா வகுப்பு கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    இவ்வகுப்பு ஜூலை 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காந்திபுரம், பீளமேடு, ஆர். எஸ் புரம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், சிங்காநல்லூர், செல்வபுரம், மற்றும் சோமனூரில் ஆகிய இடங்களில் நடைபெறும்.

    தினமும் இரண்டரை மணி நேர நடைபெறும் இவ்வகுப்பில் 'ஷாம்பவி மஹாமுத்ரா' என்ற தொன்மையான சக்திவாய்ந்த தியானம் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் செய்வதன் மூலம் மனம் குவிப்புத்திறன் அதிகரிக்கும், மனதில் தெளிவு ஏற்படும், உணர்வில் சமநிலை உருவாகும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    கூடுதல் விபரங்களுக்கு: 8300052000 / 9486894868 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

    • 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன.
    • நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    கோவை:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதர் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

    மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்த பட்சம் ரூ. 30 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றார்போல் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    இது குறித்து தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.

    நாங்கள் மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லர்களுக்கு அவற்றை பிரித்து வழங்குகிறோம். அவர்கள் அளவுக் கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பி தருவர். நாங்கள் அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கீரின்பிரிண்டிங் செய்து கொடிகளை தயாரிக்கிறோம்.

    கொரானா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25 ஆயிரம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை. 2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் வருகின்றன. இதனால் டெய்லர்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சி கொடிகளின் ஆர்ட ர்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயா ரிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவர்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்கு வைத்து ள்ளோம். இவற்றுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.

    இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாலா கூறியதாவது:-

    நாங்கள் தயாரிக்கும் தேசியக் கொடிகள் கோவை மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு மொத்தமாக 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் பெறப்பட்டன.

    நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பெறப்பட்ட ஆர்டர்க ளின் பேரில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்கள் அதிக அளவில் பெறப்பட்டு வருவதால் இந்த ஆண்டும் 1 லட்சம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100 போதைமாத்திரைகள், 14 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போதைப்பொருள் கிடைத்தது எப்படி? பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

    கோவை, 

    கோவையில் போதை மாத்திரை, கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், செட்டிபா ளையம் பகுதியில் சிலர் போதை மாத்திரை, போதைப்பொருள் ஆகியவற்றை பதுக்கி கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போத்தனூர் போலீசார் நேற்று செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் மெத்தபிட்டமின் என்ற போதைப்பொருள், போதை மாத்திரை இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரித்த போது, அவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதற்காக இதனை வைத்திருந்ததும், அதற்காக அங்கு காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் போதை பொருட்க ளை விற்பனை செய்த போத்தனூர் ரோடு சங்கம் நகரை சேர்ந்த ஷாஜகான்(33), அவரது மனைவி மரியா(29), உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த யாசிக் இலாகி(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 100 போதைமாத்திரைகள், 14 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்தது எப்படி? பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

    • கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • வீட்டு தேவைக்காக புதிதாக காய்கறி வெட்டும் கத்தியை வாங்கியுள்ளார்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் அமைப்பினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    கலெக்டர் அலுவலகம் வருவோரை போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி வருகின்றனர்.

    அதன்படி இன்று வந்தவர்களையும் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் புதிதாக வாங்கப்பட்ட காய்கறி வெட்டு கத்தி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் எதற்காக கத்தியுடன் வந்தீர்கள் என விசாரணை நடத்தினர். அவர், டவுன்ஹால் பகுதியில் வீட்டு தேவைக்காக புதிதாக காய்கறி வெட்டும் கத்தியை வாங்கியுள்ளதாகவும், மனு அளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறினார். போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பெற்றுக்கொண்டு உள்ளே மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 12-ந் தேதி இரவு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்
    • சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 12-ந் தேதி இரவு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அவரை அவரது தாய் அக்கம்பக்கத்தினர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து மாணவியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாணவி சென்னையில் இருப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் சென்னைக்கு விரைந்து சென்றனர். சென்னை வண்டலூர் பஸ் நிறுத்தத்தில் மாயமான சிறுமி வாலிபர் ஒருவருடன் நின்றிருந்தார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியையும், வாலிபரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    மேலும் இந்த வழக்கை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி உயிருக்கு போராடிய குதிரையை காப்பாற்ற முடியாமல் மற்றொரு குதிரை கண்ணீர் வடித்தது.
    • மெத்தன போக்கால் குதிரை அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் கிடந்தது.

    குனியமுத்தூர்,

    சுந்தராபுரம் -மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகே ஒரு குதிரை வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடியது.

    இதை பார்த்த மற்றொரு குதிரை அதன் அருகே சென்று சோகத்துடன் நின்றது. சக தோழனை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்துடன் அந்த குதிரை கண்ணீர் வடித்தபடி அங்கும், இங்கும் சென்றது.

    குதிரைகளின் இந்த பாசப்போராட்டம் அந்த வழியாகச் சென்றவர்களை கண்ணீர் வடியச் செய்தது. அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கோவை மாநகராட்சி மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டோம். ஆனால் இதுவரை யாரும் குதிரையை அப்புறப்படுத்த வரவில்லை.

    சுந்தராபுரம் சாலையில் அடிபட்டு கிடக்கும் குதிரை யை அப்புறப்படுத்தி, கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தால் அது உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கால் இன்னும் அந்த குதிரை அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.

    • வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • மக்களிடம் இருந்து தப்பியோடிய சந்தன கருப்புவையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    கோவை:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அடுத்த மருதங்குடியை சேர்ந்தவர் டேவிட் (வயது34). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு (34).

    இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கீரணத்தம் கல்லுக்குழி ஹவுசிங்போர்டு எதிரே உள்ள காளான் கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று 2 பேரும் கடையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற சிறுமிகளை பார்த்து இவர்கள் 2 பேரும் ஆபாச சைகளை காட்டி அழைத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சியான சிறுமிகள் சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு அந்த கடையின் அருகே சென்றனர்.மக்கள் வருவதை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்குள்ளாக வாலிபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் வலி தாங்க முடியாத சந்தன கருப்பு அவர்களிடம் இருந்து தப்பித்து, அங்கிருந்து ஓடி விட்டார். ஆனால் டேவிட் மக்களிடம் மாட்டி கொண்டார்.

    பொதுமக்கள் அவரை நையப்புடைத்து, அங்குள்ள அறையில் பூட்டி வைத்து விட்டனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு வெளியில் அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், வாலிபரை அடிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அதன்பின்னர் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதற்கிடையே மக்களிடம் இருந்து தப்பியோடிய சந்தன கருப்புவையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    அவர்கள் 2 பேரிடம் அங்கு வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது
    • கோவை பந்தயசாலை மின்வாரிய செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

    கோவை,

    கோவை பந்தயசாலை துணை மின்நிலையத்தில் நாளை (18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, பந்தயசாலை, அண்ணாசிலை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலான பந்தயசாலை பகுதி, கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரையான திருச்சி ரோடு, சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரையான புலியகுளம் ரோடு, ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர், பாப்பம்மாள் லே அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது.இந்த தகவலை கோவை பந்தயசாலை மின்வாரிய செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

    • பவானி ஆற்றில் குளித்து முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசியை பெற்றனர்.
    • அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

     மேட்டுப்பாளையம்,

    ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வருகிற அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆடி மாத அமாவாசை தினத்தில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம்.

    மேலும்,ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    முன்னதாக பவானி ஆற்றில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு படையிலிட்டும், தர்ப்பணம் செய்தும் வழிபட்டு முன்னோர்களின் ஆசியினை பெற்றுச்சென்றனர்.

    கோவை, திருப்பூர் ஈரோடு நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு ச்சென்றனர்.மேலும்,ஆடி அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும், படையலிட்டும் வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பதால் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள நந்தவனம் பகுதியில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்து பொதுமக்கள் முன்னோர்களின் ஆசியினை பெற்று சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நந்தவனத்தின் செயலாளர் சிபிஎஸ் பொன்னுச்சாமி செய்திருந்தார்.

    இதேபோல ஆனைமலை மாசாணியம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • 2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
    • போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் ஐ.டி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இதையடுத்து மாணவியை, அவரது தாய் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதை கேட்டதும் மாணவியின் தாய் அதிர்ச்சியானார். இதற்கிடையே இந்த தகவல் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவியும், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரும் 6-ம் வகுப்பில் இருந்து தற்போது கல்லூரி வரை ஒன்றாக படித்து வருவது தெரியவந்தது.

    நீண்ட நாள் பழக்கம் என்பதால் இவர்களது நட்பு காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 5 வருடங்களாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்பு தேர்வின் போது விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது மாணவி, தனது காதலரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அந்த சமயம் அங்கு யாரும் இல்லாததால் காதலர், தான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகளை தெரிவித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் தற்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×