என் மலர்
கோயம்புத்தூர்
- கூட்டத்தில் மன அழுத்தம் போக்குவது எப்படி என்பது குறித்து டாக்டர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
- மன அழுத்தம் வராமல் தவிர்க்க, போலீசாருக்கு வாராந்திர விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாநகரில் செயல்படும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஸ்டேஷன்ஸ் ஹேப்பினெஸ் ஆபீசர் என்ற பெயரில் மகிழ்ச்சி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்களாகவும், போலீசார் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் பற்றியும் நன்கு அறிந்தவர்களாகவும், இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்த பாதிப்பு இருக்கும் போலீசாரை கண்டறிந்து, அவர்களுடன் பேசி தாங்களாகவோ, அதிகாரிகள் மூலமாகவோ பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான், மகிழ்ச்சி அதிகாரிகளின் பணி.
சமீபத்திய டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்கு பிறகு போலீசார் மன அழுத்தத்துக்கு தீர்வு காண்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி போலீஸ் நிலையங்களில் பணியாற்ற உள்ள மகிழ்ச்சி அதிகாரிகள் கூட்டம் கோவை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் 30 மகிழ்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மன அழுத்தம் போக்குவது எப்படி என்பது குறித்து டாக்டர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
குடும்பச்சூழல், பணிச்சுமை, உடல் நலக்குறைபாடுகளால் ஏற்படும் மன அழுத்தத்துக்கு தீர்வு காண்பது பற்றியும் டாக்டர்கள் எடுத்து கூறினர். முன்னதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
மன அழுத்தம் வராமல் தவிர்க்க, போலீசாருக்கு வாராந்திர விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு அமைந்துள்ள பகுதிக்கு இடமாறுதல் வேண்டும் என்று கோரியவர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் அவ்வப்போது குடும்பத்தினர் சந்திப்பு, நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகிழ்ச்சி அதிகாரிகள் என்ற பெயரில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியில் இருக்கும் போலீசாரின் செயல்பாடுகளை கண்காணித்து, ஏதேனும் மன அழுத்தம் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உடனடியாக செயல்படுவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்ணம்பாளையத்தில் நடந்தது.
- 4 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, வேஷ்டி சேலைகள், பள்ளி குழந்தை–களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டது.
சூலூர்,
கோவை தி.மு.க தெற்கு மாவட்டம், கண்ணம்பாளையம் பேரூர் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்ணம்பாளையத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்.
வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, வேஷ்டி சேலைகள், பள்ளி குழந்தை–களுக்கு புத்தகப்பைகள் ஆகியவற்றை வழங்கினார்.
அதன்பிறகு கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நுழைவாயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வின் மீது அரசியல் ரீதியாக பெரிய தடை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு அமலாக்கப்பிரிவு மூலம் சோதனைகளை நடத்தி வருகிறது.
இத்தகைய சோதனை–களில் இருந்து அமைச்சர் பொன்முடி கண்டிப்பாக வெளியே வருவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
அண்ணாமலையை கண்டு தி.மு.க அஞ்சுகிறது என்று நினைப்பது எல்லாம் தவறான ஒன்று. எதற்காகவும் தி.மு.க. அஞ்சாது. இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை. இது போன்ற ரெய்டுகள் மூலம் தி.மு.க.வை முடக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் நாராயணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இருகூர் சந்திரன், சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம், கண்ணம்பாளையம் பேரூர் கழக செயலாளர் விசுவநாதன், கண்ணம்பா–ளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ரா–ஜகோபால், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் பட்டணம் ரகு, ஊராட்சி தலைவர்கள் சாந்தி ராஜேந்திரன் (அப்பநாயக்கன்பட்டி), வேலுச்சாமி (கணியூர்), மனோன்மணி கோவிந்தராஜ் (அரசூர்), எஸ்.கே.டி.பழனிச்சாமி (செஞ்சேரிபுத்தூர்), சரவணன் (பதுவும்பள்ளி), சரிதா வீரமுத்து (ஜெ.கிருஷ்ணாபுரம்), சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன், இலக்கிய அணி அமைப்பாளர் பட்டணம் செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
- போலீசார் காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் இன்று அதிகாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அதில் 2 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் அந்த கார் காந்திநகர் பஸ் நிலையம் அருகே, சாலைநடுப்புற தடுப்பில் மோதியது. இந்த விபத்தை நேரில் பார்த்த பொது மக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே காரில் பயணித்த 2 பேர் வெளியே குதித்து தப்பி ஓடி விட்டனர். எனவே பொதுமக்கள் காருக்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
அதன்பிறகு காருக்குள் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு 450 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
கோவையில் விபத்தில் சிக்கிய காருக்குள் குட்கா பாக்கெட்டுகள் மூட்டைக்கணக்கில் இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. எனவே சொகுசு காருடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
சொகுசு காரில் இருந்து தப்பி ஓடிய கும்பல் எங்கு இருந்து குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா கடத்தி வந்து விபத்துக்கு உள்ளான காருக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மாணவரிடமிருந்து 195 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- வடிவேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கோவை,
பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி எதிரே காலி இடத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ.சிவில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் முதலிபாளையம் பட்டக்காடு புதூரை சேர்ந்த கல்லூரி மாணவர் வடிவேலை (19) கைது செய்தனர். அவரிடம் இருந்து 195 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவரிடம் சோதனை செய்த போது அவர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பூச்சி என்ற கிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து நின்றது.
- காரில் வந்த 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் சிராஜுதீன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். மகாதேவபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அம்ரித் மற்றும் ஹர்ஷத். இவர்கள் 3 பேரும் காரில் மேட்டுப்பாளையம் கண்டியூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கெண்டையூர் காமராஜர் நகரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவரை உடைத்து நின்றது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
காரில் வந்த 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆன்லைனில் திரைப்படத்திற்கு ரேட்டிங் கொடுத்தால், அதிகமான லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார்.
- சைபர் கிரைம் போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை, சத்தி மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (40).
இவரது டெலிகிராமில் சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைனில் வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோகுலகிருஷ்ணன் அதன் லிங்க்கை கிளிக் செய்து தனது விவரங்களை பதிவிட்டார். பின்னர் அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த ஒருவர் தான் 'டெலி பிலிம்' நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் அவர் ஆன்லைனில் திரைப்படத்திற்கு ரேட்டிங் கொடுத்தால், அதிகமான லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார்.
மேலும் அதற்கான வழி முறைகளையும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் ஆன்லைன் திரைப்படத்திற்கு ரேட்டிங் கொடுத்ததால், எந்த விதமான முதலீடு செய்யாமல் அவருக்கு முதற்கட்டமாக வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் அனுப்பப்பட்டது.
பின்னர் அதேநபர் அவரை தொடர்பு கொண்டு சமையல் குறித்து ரேட்டிங் கொடுத்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி அதற்கான இணையதள முகவரியை கொடுத்துள்ளார்.
மேலும் இதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப சதவீத அடிப்படையில் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய கோகுலகிருஷ்ணன் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் முதலில் ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
அவருக்கு கமிஷனுடன் சேர்ந்து ரூ.14,016 கிடைத்து உள்ளது.
அதன்பின்பு அவர் அந்த நபரின் வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக ரூ.19,68,066 வரை அனுப்பியதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு அந்த நபர் கூறியதுபோல், கமிஷன் தொகை எதுவும் அனுப்பவில்லை. அந்த நபரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
- சீனாவில் இருந்து பெயிண்ட் ரோலர் மற்றும் வால்வு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
- 11-ந் தேதி அந்த உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
கோவை,
கோவை மதுக்கரை வி.எஸ்.என். கார்டனை சேர்ந்தவர் அருண்பாபு (39). இவர் சிட்கோ ெரயில்வே கேட் அருகே ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு எந்திரங்களுக்கு வால்வு தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், 8-ந் தேதி சீனாவில் இருந்து பெயிண்ட் ரோலர் மற்றும் வால்வு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும். இந்த உபகரணங்கள் நிறுவனத்தின் அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 11-ந் தேதி அந்த உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருண்பாபு இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சம் என கூறப்படுகிறது.
- முதியவர் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர்,
கோவை அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே செல்வராஜ் (வயது 55) என்பவர் குடியிருந்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் இவர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரிடம் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட செல்வராஜ், மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்ட அவர் மாணவியை மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி சென்றார்.
இதனால் பயந்து போன மாணவி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட முதியவர், மாணவியிடம் இதுபோன்று 3 முறை அத்துமீறி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது பெற்றோருடன் கேரளாவுக்கு சென்று விட்டார். கடந்த சில தினங்களாக மாணவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது தாயார் கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
அப்போது அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியான தாய், மாணவியிடம் விசாரித்தார்.
மாணவி தனக்கு நடந்த அவலங்களை தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். உடனே மாணவியின் தாய் சம்பவம் குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி விட்டு இந்த வழக்கினை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
இதையடுத்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவை பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பேரூரில் நடந்தது.
- நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க முன்வர வேண்டும்.
கோவை,
பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்டு 15-ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
கோவை பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பேரூரில் நடந்தது. சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆறுகளிலும், பாசன கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பதால் மாசு ஏற்பட்டு வருவதை தடுத்து நிறுத்த நீர்ப்பாசனத் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க முன்வர வேண்டும்.
வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகைப் பதிவை ரத்து செய்து விளைநிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 360 ஏக்கர் நிலத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை கைவிட வலியுறுத்தியும், விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி பேரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயலட்சுமிக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த நபரை உதவிக்கு அழைத்தார்.
- மர்மநபர் வேறொரு ஏ.டி.எம். கார்டை ஜெயலட்சுமியிடம் கொடுத்து விட்டு சென்றார்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி பெத்தேல் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பழனி முருகன். இவரது மனைவி ஜெயலட்சுமி(60).
இவர் கடந்த 15-ந் தேதி பணம் எடுப்பதற்காக சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒரு நபரை உதவிக்கு அழைத்தார்.
அந்த நபர் அவரிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் ஏ.டி.எம். கார்டு வேலை செய்யவில்லை என கூறி மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு வேகமாக சென்று விட்டார்.
இதனையடுத்து ஜெயலட்சுமியும் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அந்த மர்மநபர் வேறொரு ஏ.டி.எம். கார்டை ஜெயலட்சுமியிடம் கொடுத்து விட்டு அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
கோவை:
கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்.
இவர் கடந்த 7-ந் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவு செய்த 8 பேருக்கு மாநகர போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்திருந்தனர்.
இதில் யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் 2 பேரிடமும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணத்துக்கடவு:
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். இவர் முள்ளுப்பாடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இந்த தம்பதிக்கு விக்னேஷ்(8), கனிஷ் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர்.நேற்று சரவணனுக்கு பிறந்த நாள்.
இதனால் மகஸே்வரி தனது கணவருடன் கோவிலுக்கு செல்வதற்கு முடிவு செய்தார். இதற்காக காலையிலேயே எழுந்து தனது மகன்களை புறப்பட வைத்து பள்ளிக்கு அனுப்பினார்.
பின்னர் கணவருடன் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது சரவணன் வீட்டிற்கு குடிபோதையில் வந்தார்.
இதனை பார்த்த மகேஸ்வரிக்கு கோபம் ஏற்பட்டது. பிறந்தநாள் அன்று கூடவா குடித்து விட்டு வருவீர்கள் என கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே கோபம் அடைந்த மகேஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவ தொடங்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயணை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






