என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் அதிக கமிஷன் தருவதாக ஆசை காட்டி ரூ.19 லட்சம் ஏமாற்றிய கும்பல்
- ஆன்லைனில் திரைப்படத்திற்கு ரேட்டிங் கொடுத்தால், அதிகமான லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார்.
- சைபர் கிரைம் போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை, சத்தி மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (40).
இவரது டெலிகிராமில் சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில், ஆன்லைனில் வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோகுலகிருஷ்ணன் அதன் லிங்க்கை கிளிக் செய்து தனது விவரங்களை பதிவிட்டார். பின்னர் அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த ஒருவர் தான் 'டெலி பிலிம்' நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் அவர் ஆன்லைனில் திரைப்படத்திற்கு ரேட்டிங் கொடுத்தால், அதிகமான லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினார்.
மேலும் அதற்கான வழி முறைகளையும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் ஆன்லைன் திரைப்படத்திற்கு ரேட்டிங் கொடுத்ததால், எந்த விதமான முதலீடு செய்யாமல் அவருக்கு முதற்கட்டமாக வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் அனுப்பப்பட்டது.
பின்னர் அதேநபர் அவரை தொடர்பு கொண்டு சமையல் குறித்து ரேட்டிங் கொடுத்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி அதற்கான இணையதள முகவரியை கொடுத்துள்ளார்.
மேலும் இதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப சதவீத அடிப்படையில் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய கோகுலகிருஷ்ணன் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் முதலில் ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
அவருக்கு கமிஷனுடன் சேர்ந்து ரூ.14,016 கிடைத்து உள்ளது.
அதன்பின்பு அவர் அந்த நபரின் வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக ரூ.19,68,066 வரை அனுப்பியதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு அந்த நபர் கூறியதுபோல், கமிஷன் தொகை எதுவும் அனுப்பவில்லை. அந்த நபரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.






