என் மலர்
கோயம்புத்தூர்
- தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன.
- காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது.
கோவை:
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி ஆடி மாதம் தொடங்கியது. ஆடி தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் காற்று வேகமாக வீசி வருகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலைகளில் தற்போது மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 106 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. அங்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. இதனால் காற்றின் வேகம் சற்று குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் நாட்கள் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று காற்றாலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்தவரும், இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கஸ்தூரி ரங்கன் கூறியதாவது:-
காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காற்றாலைகள் மூலம் முறையே 12 ஆயிரம் மில்லியன் யூனிட் வீதம் ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனை அரசு போதிய அளவில் கொள்முதல் செய்வது இல்லை. அனல் மின்நிலையங்கள் மூலம் போதியஅளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது.
எனவே அரசாங்கம் காற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்வது இல்லை. மத்திய மாநில அரசுகள் காற்றாலைகள் தயாரிக்கும் மின்சாரத்தை போதிய அளவில் கொள்முதல் செய்ய வேண்டும், எங்களுக்கான சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும், பழைய காற்றாலைகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது.
- சிறுவாணி பகுதியில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவை:
கோவை மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்குள்ள அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால் கோவை மட்டு மின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். அவர்கள் அங்குள்ள அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
கேரளாவில் பெய்து வரும் மழையால் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் கடந்த 5-ந் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பொது மக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக நேற்று முதல் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சிறுவாணி பகுதியில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் கோவை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். அவர்கள் அங்குள்ள சாடிவயல் ஒடையில் குளித்து விட்டு திரும்பி வந்தனர்.
- திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த சிறுவன் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார்.
- சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஹரிஹரன் (வயது 15). இவர் வத்தலகுண்டில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் -ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஹரிஹரன் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியேறி தேனியில் இருந்து திருப்பூருக்கு சென்றார்.
பின்னர் திருப்பூரில் இருந்து கோவை வடவள்ளிக்கு வந்த அவர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின்னர் இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் சிறுவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- மாநில பொருளாளர்ஆறுமகம் தலைமை தாங்கினார்.
- தொண்டாமுத்தூர் வட்டார பகுதி நிர்வாகிகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வடவள்ளி,
கோவை பேரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில பொருளாளர்ஆறுமகம் தலைமை தாங்கினார்.
துணைச்செயலாளர் வி.பி.ராமசாமி, செல்வநாயகி, பலராம், முகமது அலி, காளிமுத்து, ஆறுச்சாமி முன்னிலை வகித்தனர். இதில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதி நிர்வாகிகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது நரசீபுரம் பச்சாவயல் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வீடு இல்லாதவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கோவை,
கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஆகஸ்டு 20-ந்தேதி மதுரையில் நடக்க உள்ள வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்பது, கோவையில் தி.மு.க அரசுக்கு எதிராக நாளை(20ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்காக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை. ஆளும் தி.மு.க அரசு தொண்டாமுத்தூர் தொகுதியை கடந்த 2 ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறது.
எனவே ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.
ஆளுங்கட்சி எத்தனையோ பொய் வழக்குகள் போட்டாலும், எதற்கும் அஞ்சாமல் அ.தி.முக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார்.எனவே தி.மு.க ஆட்சியை தூக்கி வீச மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.
- சம்பவத்தன்று தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு வியாபாரம் செய்ய சென்றார்.
- தனலட்சுமி நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 65) காய்கறி வியாபாரி.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வியாபாரம் செய்ய சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய தனலட்சுமி பீரோவில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காய்கறி வியாபாரி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- காலை 8 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.
- விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைப்பு, திருகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அந்த வகையில் வனபத்திரகாளி அம்மன் கோவிலின் 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. காலை 8 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு பவானி ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் அலங்கார அணிக்கூடை, அம்மன் விருத்தம் அழைப்பு நடந்தது. அப்போது பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கள இசை முழங்க, தலைமை பூசாரி ரகுபதி அணிக்கூடையை தலையில் சுமந்து எடுத்து வந்தார். அதன்பிறகு கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் முதலாவதாக தலைமை பூசாரி ரகுபதிக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் அம்மன், சிம்ம வாகனம், உற்சவமூர்த்தி, அம்மன் திரிசூலம் உள்ளிட்ட அம்சங்களுக்கு காப்பு கட்டினர். இதனை தொடர்ந்து கோவில் அறங்காவலர் வசந்தா, சம்பத், நாகேந்திரன் ஆகியோருக்கு காப்புகள் கட்டப்பட்டன.இதனைத் தொடர்ந்து நெல்லித்துறை கிராம மக்கள் முன்னிலை யில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு அம்மனிடம் வைத்து எடுக்கப்பட்ட பூ மற்றும் பொரி ஆகியவற்றை அம்மனுக்கு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வருகிற 21-ந்தேதி லட்சார்ச்சனை, 22-ந்தேதி கிராமசாந்தி, 23-ந்தேதி காலை 10 மணியளவில் கொடியேற்றம் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைப்பு, திருகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.ஆடிகுண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், திருக்கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
- லாரியின் முன்பக்க டயர் வாலிபர் மீது ஏறி இறங்கியது.
- சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அங்குள்ள தனியார் வணிக வளாகம் அருகே சென்ற போது அவர் திடீரென சாலையின் நடுவே சென்று அந்த வழியாக சென்ற லாரி முன்பு விழுந்தார். இதில் லாரியின் முன்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் தலைநசுங்கி பலியானார். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் பின்னர் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடைமேடை பயன்பாட்டுக்கு வராத காரணத்தால், ஒரு சில சமூக விரோத செயல்களும் அப்பகுதியில் நடைபெற்றது.
- நடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து.
குனியமுத்தூர்,
கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு நடைமேடை ஒன்று நிறுவப்பட்டது.
ஆனால் நீண்ட ஆண்டுகளாக அது பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. மேலும் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால், ஒரு சில சமூக விரோத செயல்களும் அப்பகுதியில் நடைபெற்றது.
எனவே பயன்பாட்டிற்கு இல்லாத இந்த நடைமேடையை மாற்றி அமைத்து குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவை மாநகராட்சி அங்கிருந்த நடைமேடையை அகற்றி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நிறுத்தினர்.
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடைமேடையை அரசு பள்ளி முன்பாக நிறுவப்பட்டது.
ஆனால் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக நிறுவப்பட்ட நடைமேடை இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அந்த நடை மேடையில் ஏறி யாருமே சாலையை கடந்து வலது புறம் இருந்து இடது புறம் சென்றதாக தெரியவில்லை.
பள்ளி மாணவ, மாணவிகளும் வழக்கம் போல சாலையின் குறுக்கே நடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் நடைமேடை அப்பகுதியில் அமைத்தும் பயன் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் வழக்கம் போல் தான் உள்ளது.
இது குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி சார்பாக இந்த நடைமேடைக்கு ஒரு திறப்பு விழா ஏற்பாடு செய்து, அதில் பொதுமக்களை நடக்க வைத்தால், அச்சூழ்நிலை சராசரியான வாழ்க்கையாக மாறிவிடும். அல்லது காலை மற்றும் மாலை சமயங்களில் பள்ளி முடிந்து வெளியே வரும் பள்ளி குழந்தைகளை நடை மேடையில் ஏறி, சாலையை கடந்து செல்வதற்கு அறிவுறுத்தலாம்.
இதை எதுவுமே இல்லாமல் செயல்படும் காரணத்தால் நடைமேடை வெறுமனே நின்று கொண்டிருக்கும் காட்சியை காண முடிகிறது. இன்னும் சொல்ல போனால் பழைய சூழ்நிலை போல் சமூக விரோத செயல்கள் இங்கு நடந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட்டு இந்த நடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களாகிய எங்களது கருத்து ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ் போன்ற பொருட்களை வைப்பதற்கு மட்டுமே இந்த நிழற்குடை பயன்பட்டு வருகிறது.
- வயதான முதியோர்கள் இதில் ஏறுவதற்கு முயற்சி செய்தால் தடுமாறி கீழே விழும் அவல நிலைதான் உள்ளது.
குனியமுத்தூர்,
கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் அமருவதற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலான நிழற்குடைகள் போதுமான வசதி இல்லாமல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக கோவை-பொள்ளாச்சி ரோட்டில் சுந்தராபுரம் பகுதியை அடுத்த எல்.ஐ.சி காலனி பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ஏறி அமரும் அளவிற்கு அது இல்லாத நிலையில் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் நின்று கொண்டுதான் இருப்பதை காண முடிகிறது. இன்னும் ஒரு சில பயணிகள் பஸ்சை எதிர்பார்த்து நீண்ட நேரம் நின்று கால் வலிக்கும் காரணத்தால், கீழே தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலையை காண முடிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நிழற்குடை, தேவை இல்லாமல் இங்கு எதற்கு நின்று கொண்டி ருக்கிறது என்பது தெரிய வில்லை.
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்படாமல், ஏனோதானோ என்று நிறுவப்பட்ட நிழல் குடையால் யாருக்கு என்ன பயன்? குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரும் பெண்கள் கண்டிப்பாக இதில் ஏறி அமர முடியாது.
மேலும் வயதான முதியோர்களும் இதில் ஏறுவதற்கு முயற்சி செய்தால் தடுமாறி கீழே விழும் அவல நிலைதான் உள்ளது .பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ் போன்ற பொருட்களை வைப்பதற்கு மட்டுமே இந்த நிழற்குடை பயன்பட்டு வருகிறது. எனவே பயணிகள் அமரக்கூடிய வகையில் நிழற்குடையை சரியான தத்தில் அமைத்தால் மட்டுமே இது பயன்பாட்டிற்கு வரும்.
இல்லையென்றால் மழைக்கு ஒதுங்குவதற்கு மட்டுமே இது பயன்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நல்லது.
பஸ்காக காத்திருக்கும் பயணிகளும் சற்று இளைப்பாரி அமரக்கூடிய சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மர்மநபர் யூடியூப் சேனலை பின்தொடர்ந்தால் பணம் கிடைக்கும் என்றார்.
- சதீஷ்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் மகாத்மா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது36).
இவரது வாட்ஸ் ஆப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சதீஷ்குமார் அவரது செல்போன் எண், இணையதள முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார்.
a
பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் தான் 'மைன்ட் ஷேர் மார்க்கெட்டிங் இந்தியா' நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து அவர் எங்களது நிறுவன இணையதளத்தின் யூடியூப் சேனலை பின்தொடர்ந்தால் பணம் கிடைக்கும் எனவும், முதலீடு செய்ய தேவையில்லை என கூறினார்.
அதன்படி சதீஷ்குமார் அந்த சேனலை பின்தொடர்ந்தபோது அவருக்கு கமிஷனாக ரூ.150 கிடைத்தது. தொடர்ந்து சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட அந்த நபர் ஓட்டல் ரிவ்யூ செய்தால், அதிகளவில் கமிஷன் கிடைக்கும், அதற்கு நீங்கள் சிறிது முதலீடு செய்ய வேண்டும் என ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய சதீஷ்குமார் முதலில் 2 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.38,386 முதலீடு செய்தார்.
இதனால் அவருக்கு கமிஷன் தொகை என 57,774 கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறிது, சிறிதாக ரூ.5,02,222 முதலீடு செய்தார்.
ஆனால், அதன்பின்னர் அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. முதலீடு செய்த தொகையும் திருப்பி கிடைக்கவில்லை. மர்ம நபர் ஆசைவார்த்தை கூறி ரூ.5,02,222 மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று மேலாளர் வழக்கம் போல கிரைண்டர் செயலி மூலம் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக நண்பர்களை தேடி வந்தார்.
- மேலாளர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளார்.
ஓரின சேர்க்கையாளரான இவர் கிரைண்டர் செயலியை தனது செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் ஜாலியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று மேலாளர் வழக்கம் போல கிரைண்டர் செயலி மூலம் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக நண்பர்களை தேடி வந்தார்.
அப்போது அந்த செயலி மூலம் மேலாளருக்கு வடவள்ளி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ரிஸ்வான் என்ற ரிஷி (வயது21) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
அந்த வாலிபர், மேலாளரிடம் நாம் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார். இதனை உண்மை என நம்பிய மேலாளர், ரிஸ்வான் அழைத்த வடவள்ளி முல்லை நகரில் உள்ள கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்கு அவரது மொபட்டில் சென்றார்.
பின்னர் ரிஸ்வான், மேலாளரை ஜாலியாக இருக்கலாம் என அந்த கட்டிடத்தில் உள்ள 3-வது மாடிக்கு அழைத்து சென்றார்.
3-வது மாடிக்கு சென்றதும் அங்கு மறைந்து இருந்த ரிஸ்வானின் நண்பர் தில்லை நகரை சேர்ந்த அஜய் என்ற மெய்யரசு (20) என்பவர் மேலாளரை உருட்டு கட்டையால் தாக்கினார்.
பின்னர் அவரிடம் இருந்த மொபட்டின் சாவியை பறித்தனர். தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து, மேலாளாரை நிர்வாணமாக்கி, அதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து கொண்டனர்.
மேலும் மேலாளரின் செல்போன் பறித்தனர். செல்போன் மூலம் மேலாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3ஆயிரம் பணத்தை ரிஸ்வானின் மனைவி அனுஸ்ரீ என்பவருக்கும், ரூ.30 ஆயிரம் பணத்தை அஜய் என்பவரின் தந்தையின் வங்கி கணக்கிற்கும் அனுப்பினர்.
பின்னர் மேலாளரை வண்டியின் அர்.சி. புத்தகத்தை எடுத்து கொடுக்கும் படி கேட்டனர். இதனையடுத்து அவர்கள் மேலாளர் தங்கி இருக்கும் அறைக்கு அவரை மிரட்டி அழைத்து சென்றனர்.
அறைக்கு கீழே ரிஸ்வான் மற்றும் அஜய் நின்று கொண்டு இருந்தனர். மேலாளர் மேலே சென்று வண்டியின் புத்தகத்தை எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார்.
பின்னர் அவர் இதுகுறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது நண்பர்கள் வந்தனர். அவர்களுடன் மேலாளர் சென்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிஸ்வான், அஜய் ஆகியோர் அங்கு இருந்து மொபட்டில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மேலாளர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் தனியார் நிறுவன மேலாளரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்ததுடன், ரூ.33 பணம், செல்போன், மொபட் ஆகியவற்றை பறித்த ரிஸ்வான் அவரது மனைவி திருநங்கை அனுஸ்ரீ, அஜய் என்ற மெய்யரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






