search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க அரசை கண்டித்து நாளை நடக்கும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைப்பு
    X

    தி.மு.க அரசை கண்டித்து நாளை நடக்கும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அழைப்பு

    • தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கோவை,

    கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்தில் ஆகஸ்டு 20-ந்தேதி மதுரையில் நடக்க உள்ள வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்பது, கோவையில் தி.மு.க அரசுக்கு எதிராக நாளை(20ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்காக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

    கோவை மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை. ஆளும் தி.மு.க அரசு தொண்டாமுத்தூர் தொகுதியை கடந்த 2 ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறது.

    எனவே ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    ஆளுங்கட்சி எத்தனையோ பொய் வழக்குகள் போட்டாலும், எதற்கும் அஞ்சாமல் அ.தி.முக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார்.எனவே தி.மு.க ஆட்சியை தூக்கி வீச மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×