என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய தொழிலாளிகளுக்கு தர்ம அடி- அறையில் பூட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்
    X

    கோவை அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய தொழிலாளிகளுக்கு தர்ம அடி- அறையில் பூட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்

    • வாலிபர்கள் 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • மக்களிடம் இருந்து தப்பியோடிய சந்தன கருப்புவையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    கோவை:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அடுத்த மருதங்குடியை சேர்ந்தவர் டேவிட் (வயது34). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு (34).

    இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கீரணத்தம் கல்லுக்குழி ஹவுசிங்போர்டு எதிரே உள்ள காளான் கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று 2 பேரும் கடையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற சிறுமிகளை பார்த்து இவர்கள் 2 பேரும் ஆபாச சைகளை காட்டி அழைத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சியான சிறுமிகள் சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு அந்த கடையின் அருகே சென்றனர்.மக்கள் வருவதை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்குள்ளாக வாலிபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் வலி தாங்க முடியாத சந்தன கருப்பு அவர்களிடம் இருந்து தப்பித்து, அங்கிருந்து ஓடி விட்டார். ஆனால் டேவிட் மக்களிடம் மாட்டி கொண்டார்.

    பொதுமக்கள் அவரை நையப்புடைத்து, அங்குள்ள அறையில் பூட்டி வைத்து விட்டனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு வெளியில் அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், வாலிபரை அடிக்க முயன்றனர்.

    போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அதன்பின்னர் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதற்கிடையே மக்களிடம் இருந்து தப்பியோடிய சந்தன கருப்புவையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    அவர்கள் 2 பேரிடம் அங்கு வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×